மாணவர்கள், சிறுவர்களுக்குப் போதை ஊசி, மாத்திரைகளை விற்ற ஏழு பேரை தனிப்படைப் போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் போதை ஊசி கலாசாரம் தலைதூக்கியிருப்பதாக வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கு குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கண்டறிய மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதில் திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள முடுக்குபட்டி பகுதியில் மாணவர்கள், சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதாகத் தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் மாநகரில் பல்வேறு பகுதியில் தீவிரமாகக் கண்காணித்தனர்.
இதில், அரியமங்கலம் பகுதியில் முகமது யூசுப் என்பவர் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அக்கடையிலிருந்து சட்டவிரோதமாக உடல்வலி, அலர்ஜிக்கான மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து சிறுவர்களிடம் விற்பனை செய்துள்ளனர். இத்தகவல் தெரிய வர முகமது யூசுப்பை போலீஸார் கைதுசெய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி திருச்சி கன்டோன்மென்ட், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீஸார் அரவிந்த், ஷெப்ரின் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1,230 போதை மாத்திரைகள், 110 போதை மருந்து பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் போதை மாத்திரைகளை கை இருப்பு வைத்து விற்பனை செய்த முடுக்குப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ஜெயராமன், கார்த்திக் ராஜா, பிரவீன் ஆகிய பேரை போலீஸார் கைது செய்தனர்.

போதை மாத்திரைகளை விற்ற 7 பேரை ஒரே நாளில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீஸாரை மாநகர கமிஷனர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து வழக்கை விசாரித்துவரும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``கஞ்சா, மது வகைகளின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்துக் கடைகளில் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி, செலின் வாட்டரோடு கலந்து இளைஞர்களின் உடம்பில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

இதன் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் இதற்கு அடிமையாகிறார்கள். அதுவும், இந்த கும்பல் கஞ்சாவிற்கு இணையான பவர் இருக்கிறது என்று மூளைச் சலவை செய்கிறார்கள். இத்தொழிலுக்குக் குறைந்த வயது சிறுவர்களைப் பயன்படுத்துவதோடு பள்ளி மாணவர்களுக்கும், இதனை விற்பனை செய்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று. திருச்சி மாநகரிலுள்ள மருந்துக் கடைகளில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது.

அப்படி விற்பனை செய்தால், அந்தக் கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்’ எனக் கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் மீண்டும் இதுபோன்ற சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கமிஷ்னர் கராரான உத்தரவைப் போட்டிருக்கிறார்” என்றனர்
மேலும் படிக்க திருச்சி: ஒரே நாளில் 7 பேர் கைது! - சிறுவர்களைக் குறிவைத்து மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாசாரம்?!