விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுசீந்தரன்(54). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் இவருக்கு, திருமணம் ஆகவில்லை. இவரின் தங்கை பெயர் ரேவதி(50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரபல தமிழ் நடிகை ஒருவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ரேவதி, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன் அண்ணன் வீட்டிலேயே வசித்து வந்தாராம்.
அண்ணன், தங்கை இருவரும் வசித்து வந்த வீட்டில் நேற்று(13.02.2022) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், மூடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, சுசீந்தரன், ரேவதி ஆகிய இருவரும் தூக்கில் தொடங்கிய படி காணப்பட்டுள்ளனர். அழுகிய நிலையில் இருந்த அவ்விரு உடல்களையும் மீட்ட காவல்துறை அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அந்த அறையில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று படிப்போரின் மனங்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் உள்ளது.
ரேவதி எழுதிக்கொள்வது என தொடங்கும் அந்த கடிதத்தில், "என்னுடைய அண்ணன் சுசீந்தரன் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர். 15 வருடமாக மருத்துவமனைகளில் காண்பித்து வருகிறோம். எங்களுடன் வசித்து வந்த எங்களின் தாயார், அண்மையில் உயிரிழந்தது தான் எங்களை மிகவும் பாதித்தது. நான் என் கணவரை பிரிந்து 2.5 வருடம் ஆகிவிட்டது, எனக்கு குழந்தையும் கிடையாது. இவை அனைத்தும் சேர்ந்து எனக்கு மனதளவில் மிகவும் பாதிப்பாகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக B.P வந்துவிட்டது. அரசு மருத்துவமனையில் காண்பித்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.

தனிமை என்னை மிகவும் பாதிக்கிறது. மனதளவிலும், உடல் அளவிலும் பாதிப்பு ஏற்பட்டதால் என்னால் நிரந்தரமாக வேலை ஒன்றும் செய்ய இயலவில்லை.
Also Read: குமரி: கணவர் திடீர் மரணம்!- வறுமையால் 7 கி.மீ நடந்து சென்று குளத்தில் குதித்த மனைவி, 2 மகள்கள்
ஆகையால், வருமானத்திற்கும் எங்களுக்கு வழியில்லை. என்னுடைய அண்ணன் நல்லா இருப்பதை போல இருக்கும், திடீரென மனநிலை மாறிப்போகும். அவரை வீட்டில் விட்டு என்னால் ரொம்ப நேரம் கூட வெளியில் செல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்களால் இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் நாங்கள் இறப்பதற்கு முடிவு செய்தோம்.
சொந்தங்கள் இருந்தும் யாரும் இல்லாத நிலை எங்களுக்கு. சொந்தங்கள் அன்பு காண்பித்து ஆறுதலாக கூட இல்லை. ஆகையால் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நாங்கள் இருவரும் மட்டுமே தான் பேசி முடிவு செய்தோம். வீட்டில் உள்ள பொருட்களை விற்று மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அம்மாவுக்கு ரூ.24,000 கொடுத்துவிடு. மன்னிக்கவும்" என்று மனக்குமுறல்களை பதிவிட்டு எழுதப்பட்டுள்ளது.

Also Read: தள்ளிப்போகும் மறுமணம், தற்கொலை எண்ணம்...வாசகியின் பிரச்னைக்கு நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship
வறுமையின் காரணமாக அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.
மேலும் படிக்க ``இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்..." - வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?