''தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நீட் தேர்வு விலக்கினை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க அரசு, ஒருபோதும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது'' என்று நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி முன்வைத்த விமர்சனத்துக்குப் பிறகு, நீட் தேர்வு விலக்கு விவகாரம் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அவசரம் அவசரமாக, நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கே திருப்பியனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு மறு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்துவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ-வும் மருத்துவருமான எழிலனிடம் பேசினோம்....

``தமிழ்நாட்டில், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டபோது தொய்வு நிலை இருந்தது ஆனால், தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், 'நீட் தேர்வு ஏழை - எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாறியிருக்கிறது' என்கிறார்களே?''
''எந்தவொரு ஆய்வுக் கமிட்டி என்றாலும் அதற்கென்று குறிப்பிட்ட கால வரையறை உண்டு. அதற்குள்ளாகத்தான் தங்கள் ஆய்வுகளை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க முடியும். இதுதான் அடிப்படை.
தமிழகத்தில் 2017-18-ல்தான் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. அதிலிருந்து 2018-19, 2019-20, 2020-21 வரையிலாக நீட் தேர்வு நடைமுறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ஏ.கே.ராஜன் குழு 5 மாதங்களாக ஆய்வு செய்துதான் கடந்த ஆண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
பா.ஜ.க-வினர் சொல்வதுபோல், 'நீட் தேர்வு ஏழை - எளிய மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளது' என்பது உண்மையானால், அதுகுறித்தத் தகவல்களை 5 மாதங்களாக ஆய்வு செய்த குழுவின் கவனத்துக்கு இவர்கள் கொண்டுவந்திருக்கலாமே!
அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நீட் தேர்வுக்கு ஆதரவான தகவல்கள் இருக்கிறது என்று சொல்லித் திசை திருப்புவதே, பிரச்னையை இழுத்தடிக்கும் முயற்சிதான்.''
Also Read: தஞ்சை: `வேகத்தடைக் கூட இல்ல... சாலையைக் கடக்கவே பயமா இருக்கு!' - கலங்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள்
''தி.மு.க அரசு இரண்டாவது முறையாக இயற்றியுள்ள 'நீட் தேர்வு விலக்கு' தீர்மானம் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படுமேயானால், மீண்டும் காலதாமதம் ஏற்படும்தானே?''
''அப்படியில்லை... சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பதில் அளிக்கப்படாவிட்டால், மறுபடியும் நாம் தீர்மானம் இயற்ற வேண்டியதிருக்கும்.
போர், பஞ்சம் போன்ற அசாதாரணமான சூழல்களில் மட்டுமே நாடு ஒன்றிய அரசின் அடிப்படையில் செயல்படும். மற்ற சாதாரண காலகட்டங்களில், 'ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்த கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும்' என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
கல்வி, சுகாதாரம் பொதுப்பட்டியலில் இருந்தால்கூட, மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய மாநில அரசுக்கு கல்வியை மக்களிடையே கொண்டு சேர்க்கக்கூடிய முழு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் சொல்கிறது. எனவே, இந்த அம்சங்களையெல்லாம் நமது குடியரசுத் தலைவரும் கருத்திற்கொண்டுதான் முடிவுகளை எடுப்பார். எனவே, விரைவில் நல்லது நடக்கும்.''

''கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரி தி.மு.க எம்.பி கொண்டுவந்திருக்கும் தனிநபர் மசோதா, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கு ஆகியவை பற்றியும் சொல்லுங்களேன்....?''
''மாநிலப்பட்டியலில் இருந்துவந்த கல்வி, அவசரநிலை காலகட்டத்தில்தான் பொதுப்பட்டியலுக்கு மாறியது. அந்த முடிவு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நான் நீதிமன்ற வழக்கு தொடுத்துள்ளேன். கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதால்தான், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என ஒன்றிய அரசு தான் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.
மேலும், ஒன்றிய அரசு நடத்திவருகிற கல்வி நிறுவனங்களில் மாநில அரசு தலையிட முடியாதபோது, மாநில அரசு நடத்திவருகிற கல்வி நிறுவனங்களில் ஒன்றிய அரசும் தலையிட முடியாதுதானே? அதனால்தான் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு உள்ள உரிமையை மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து பேசிவருகின்றன.
தி.மு.க எம்.பி வில்சன் தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கும் 'கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரும் தனிநபர் மசோதா' வெற்றி பெற்றால், நீட் தேர்வு விலக்கினை தமிழக அரசே அறிவித்துவிடலாம். ஏற்கெனவே தி.மு.க எம்.பி திருச்சி சிவா, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக கொண்டுவந்திருந்த தனி நபர் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்தான் இன்றைக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது மாபெரும் சமூகப் புரட்சி!''
Also Read: தேர்தல் களத்தில் பரபரக்கும் பாஜக... அடித்தளம் அமைக்குமா அண்ணாமலை வியூகம்?!
''தி.மு.க ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காகவும், பிரதமர் ஆகும் எண்ணத்திலேயும்தான் 'சமூக நீதிக் கூட்டமைப்பை' மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?''
''தி.மு.க என்ற அரசியல் கட்சியின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். மாநில உரிமை, மொழிக்கொள்கை என தி.மு.க-வின் சமூக நீதிக் கொள்கை அடிப்படையில்தான் தமிழ்நாட்டு அரசியலே இன்றைக்கும் இயங்கிவருகிறது. இதைப் பார்க்கின்ற பிற மாநிலங்களுக்கும்கூட இந்த உணர்வுகள் இப்போது வர ஆரம்பித்திருக்கின்றன.
உதாரணமாக.... பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், 27% இட ஒதுக்கீடு வேண்டும் என்று சட்டப்போராட்டம் நடத்தி வென்றெடுத்திருக்கிறது தி.மு.க. இதன் அடிப்படையில்தான் சமூக நீதிக்காக குரல் கொடுத்துவருகிற அனைத்திந்தியத் தலைவர்களையும் 'சமூக நீதிக் கூட்டமைப்பு' என்ற குடையின்கீழ் ஒன்றுதிரட்ட முதல்வர் குரல் கொடுத்துவருகிறார்.
ஆனால், அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக்கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி, கடந்தகால ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது இதையெல்லாம் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது அரசியலுக்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்.''

''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பங்கீட்டிலும்கூட தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடையே கடுமையான அதிருப்திகள் நிலவுகிறதே...?''
''தி.மு.க மாவட்டச் செயலாளர்களோடு கூட்டணிக் கட்சியினர் சுமூகமாகப் பேசி தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டு தேர்தல் பரப்புரையையும் ஆரம்பித்துவிட்டனர். 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தற்காலிகமாக உடைந்தது... மீண்டும் தொடரும்' என்பதுபோன்றெல்லாம் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்கேனும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்களா என்ன.... இல்லையே!''
''கரூர் மாவட்டத்தில், தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணியை தி.மு.க-வினர் வெளியேற்றியிருக்கின்றனரே...?''
''கூட்டணியில் உள்ள அனைவருமே தங்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அவரவர் விருப்பத்தைக் கேட்பது என்பது தவிர்க்க இயலாதது. அதற்காகத்தான் பேச்சுவார்த்தை என்பதே நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் பேச்சுவார்த்தை பிரச்னைகள் எல்லாம் முடிவுற்று, இரண்டு கட்சியினரும் ஒன்றாக பிரசாரம் செய்யவே ஆரம்பித்துவிட்டனர். கூட்டணியை விட்டு வெளியேறி 'தனியாகப் போட்டியிடப் போகிறோம்' என்று எந்தக் கட்சியினராவது அறிவித்தால்தான், நீங்கள் கேட்கிற கேள்வி பொருந்தும்!''
மேலும் படிக்க ``அரசியலுக்காகப் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி!'' - டாக்டர் எழிலன் பதிலடி