உக்ரைன் மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் தலைநகரை பிடிக்கும் எண்ணத்துடன் படைகள் முன்னேறி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு கூட்டு பதிலடியை கொடுக்கும் நடவடிக்கை குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, `உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டமில்லை’ என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். நோட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை.

இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி சொன்னால், ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என உக்ரைன் தூதர் தெரிவித்தார். இது தொடர்பான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா பேசுகையில், ``ரஷ்யாவுடன் இந்தியா சிறப்பான உறவைக் கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசுங்கள் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன். இந்திய பிரதமர் மோடி மிகவும் சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவர். எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை புதின் கேட்பார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், மோடி மீதான மதிப்பு காரணமாக , புதின் குறைந்தபட்சம் அதைப் பற்றி யோசிப்பார். இந்தியரிடமிருந்து நாங்கள் மிகவும் சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபரை இந்திய பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து புடின் பிரதமர் மோடியிடம் விளக்கினார். அப்போது, ரஷ்யாவுக்கு நேட்டோ அமைப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை, முரண்களை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மோடி புடினிடம் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் போரை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார், போரை நிறுத்து பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியம் குறித்தும் பேசினார் மோடி.

மேலும், உக்ரைனில் உள்ள இந்திய மக்கள், அதிலும் குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகளை ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க `உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துங்கள்..!’ - மோடி, புடின் உரையாடலில் நடந்தது என்ன?