காட்டிலிருந்து ஒரு குரல் - கலை மூலம் தன்னை செதுக்கிக் கொண்ட போராளி தோழர் அன்புராஜ்|இவர்கள்| பகுதி 25

0
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

ஒரு துண்டு வானம் என்ற சிறுகதையில் இப்படியொரு வரியை எழுதியிருப்பேன், ’எங்கு நம்பிக்கை உள்ளதோ, அங்கு அற்புதம் நிகழும்.’ இந்த வரிகளுக்கு வாழும் உதாரணமாக நான் நினைப்பது தோழர் அன்புராஜைத்தான். மனிதன் துயரங்களின் வழியாகவும் போராட்டங்களின் வழியாகவும்தான் தன்னையும் தனது பலத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறான். தீமைகள் சூழ்ந்த இவ்வுலகின் கடும் நஞ்சிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், சமூகத்தையும் காத்து நிற்க ஒரு மனிதனுக்கு அசாத்தியமான மனவுறுதியும் துணிச்சலும் தேவைப்படுகிறது.

அமைதியான வழியில் போராடி வரும் தோழர் அன்புராஜின் கடந்தகாலமும் அவர் கடந்துவந்த பாதையும் அசாதாரணமானது.

தமிழ்நாடு கர்நாடக மாநில காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் வீரப்பன் சிம்மசொப்பனமாய் இருந்த காலமது. வீரப்பனும் அவரின் கூட்டாளிகளும் அதிகம் புழங்கியது சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள காட்டில்தான். வனத்துறையும் காவல்துறையும் அவரை வேட்டையாடத் துரத்துவதற்கு எத்தனை காரணங்களிருந்தனவோ அதேயளவு காரணங்கள் இந்த வனப்பகுதி மக்கள் அவருக்கு உதவுவதற்கும் இருந்தன. இன்றளவும் சமவெளி மக்களால் அவர்கள் துரோகிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் தங்களது புதிய சட்டங்களின் மூலமாய் வனத்திற்கும் அவர்களுக்குமான உறவை சிதைப்பதோடு அவர்களை அந்த வனத்தைவிட்டு துரத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. வனங்கள் தான் இப்பூமியின் சூழலியல் இயக்கத்தின் ஆதாரம், அந்த வனங்களை அதன் ஒழுங்கு கெடாமல் பராமரிப்பதில் பழங்குடிகளுக்கு முக்கியப் பங்குண்டு.

அன்றுமுதல் இன்றுவரையிலும் இந்த யுத்தம் முடிவதாயில்லை.

பழங்குடி மக்கள் சூழ்ந்த கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்த அன்புராஜூக்கு பதினாறு வயதில் வீரப்பனோடு அறிமுகம் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வீரப்பன் குழுவினர் தங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்க கிராம மக்களின் உதவியை நாடிவருவார்கள். அப்படி ஒரு நாள் அன்புராஜ் தனது சகோதரர்களோடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கையில் வீரப்பனின் கூட்டாளிகளைப் பார்க்கிறார்கள்.

வீரப்பன் குழுவினருக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்கித்தர சம்மதிக்கிறார்கள். ஆனால் அந்த அறிமுகம் பொருட்களை வாங்கிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல் வீரப்பன் குழுவினரோடு தங்களை இணைத்துக் கொள்ளவும் வழிசெய்தது.

வீரப்பன் தேடுதல் வேட்டையை காரணமாக வைத்து அதிரடிப்படையினரும் வனத்துறையினரும் பழங்குடி மக்களின் மீது நிகழ்த்திய வன்முறைகள் மன்னிக்க முடியாதவை. எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை வாசித்தவர்களுக்கு அந்த சித்திரவதைகளின் வீர்யம் புரியும். இதனாலேயே பழங்குடி மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வீரப்பனை நாடிச் செல்ல வேண்டியதாயிருந்தது. உண்மையில் அம்மக்களுக்கான நியாயம் பலசமயங்களில் வீரப்பன் மூலமாகவே கிடைத்தது. அன்புராஜும் சிறுவயது முதல் இதுபோன்ற வன்முறைகளை எல்லாம் பார்த்து வந்தவர்தான். படித்து காவல்துறை அதிகாரியாக வேண்டுமென சிறுவயதில் ஆசைகொண்டிருந்த அவரின் எதிர்காலம் அந்த காவல்துறையினராலேயே திசை திரும்பியதுதான் நகைமுரண். அந்தியூர் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் அதிரடிப்படையினர் தங்களது முகாம்களை அமைத்தனர், இந்த முகாம்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களாக இருந்ததால் அந்தப் பகுதி மாணவர்களின் கல்வி சீர்குழைந்தது. அவர்கள் விளையாடுவதற்கான மைதானங்கள் இல்லாமல் போயின. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் சிதையத் துவங்கியது.

தோழர் அன்புராஜ்

திடுமென ஊருக்குள் நுழைந்து கண்ணில் பட்ட ஆண்களை எல்லாம் அடித்து உதைப்பதும், விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதும் ஒரு தொடர்கதையாய் இருந்ததைப் பார்த்து கொதித்துப் போயிருந்தார். இப்படியான தருணத்தில் வீரப்பனோடு இணைந்தவர் இரண்டு வருட காலம் அவரோடு பயணிக்கத் துவங்குகிறார். வாழ்வின் பெரும்பாலான பகுதியை காட்டிலேயே கழித்த வீரப்பனுக்கு காட்டைக் குறித்த அபரிதமான புரிதலும் அறிவும் உண்டு. தன்னோடு இருப்பவர்களுக்கும் வீரப்பன் அந்த ஞானத்தைக் கற்றுக்கொடுப்பதுண்டு.

வயதில் இளையவர் என்பதோடு துடிப்பானவராகவும் இருந்ததால் வீரப்பனுக்கு அன்புராஜிடம் நல்ல நெருக்கம் இருந்திருக்கிறது. இன்றளவும் அவரின் மீது மரியாதையான எண்ணங்களைக் கொண்டிருக்கும் அன்புராஜூக்கு வீரப்பனின் சில செயல்கள், எண்ணங்களின் மீது கடுமையான விமர்சனம் அப்போதும் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது.

1998 ம் வாக்கில் வீரப்பனையும் அவரின் குழுவினரையும் சரணடைய வைப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. இரு மாநில அரசுகளின் மீதும் முழுமையான நம்பிக்கை வராத வீரப்பன் முதலில் தனது கூட்டாளிகள் மூவரை சரணடையச் செய்வதாகச் சொல்லி அன்புராஜையும் அவரது சகோதரர்களையும் சரணடைய வைக்கிறார்.

காட்டிலிருந்து நகரத்திற்கு வந்த நாளிலயே தாங்கள் வஞ்சிக்கப்படப் போகிறோமென்பது அன்புராஜுக்கும் அவரது சகோதரர்களுக்கும் புரிந்துவிடுகிறது. அவர்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் அரசு தரப்பில் நிறைவேற்றத் தயாராய் இல்லை என்பதும் அவர்களுக்கு ஆதரவாய் இருந்தவர்களே துரோகமிழைத்ததும் கண் முன்னால் அரங்கேற கசப்போடு எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள். வீரப்பனோடு அவர்களிருந்தது குறைவான காலகட்டம் என்றபோதும் இரு மாநில அரசுகளும் அவர்களின் மீது ஏராளமான வழக்குகளைப் போட்டிருந்தனர். வழக்கு விசாரணைகளுக்காக இரண்டு மாநிலங்களுக்கும் அலைந்தவருக்கு தமிழ்நாட்டு நீதிமன்றம் முதலில் வழக்கை முடித்து தண்டனை வழங்க, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.

சிறைச்சாலையில் அப்போது முறையான கழிவறை வசதிகள் இருந்திருக்கவில்லை. சிறைக்கு வரும் குற்றவாளிகள் சுகாதார சீர்கேட்டால் கடும் நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாவது சாதாரணமாக நடக்கக் கூடியதொன்று. அன்புராஜ் முறையான கழிவறை வசதி செய்து தரவேண்டுமென சேலம் மத்தியச் சிறையில் தனது முதல் போராட்டத்தைத் துவங்குகிறார். இதன் காரணமாக சிறைக் காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானபோதும் அவர் தனது உறுதியைக் கைவிடவில்லை. இதற்குமேல் அவரை துன்புறுத்த ஒன்றுமில்லையென்கிற நிலையில் காய்ங்களோடு உடலில் துணியுமில்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துவிடுகிறார்கள்.

அன்புராஜ் அங்கும் உறுதியோடு இருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பிற கைதிகளை தூய்மைப்படுத்தி அவர்களை அடைத்து வைத்திருந்த தனிச்சிறையையும் தூய்மைப்படுத்தினார். சில மாதங்களுக்குப்பின் அவர் மீண்டும் பொது சிறைக்கு மாற்றப்பட்டபோது சிறையிலிருந்த இடதுசாரி தோழர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவரின் வழியாகத்தான் புத்தக வாசிப்பிற்குள் நுழைகிறார். சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தமது உரிமைகளுக்காக போராடவும் புத்தகங்கள் அவருக்குப் புதிய நம்பிக்கைகளையும் உறுதியையும் தருகின்றன. அத்தோடு அவரின் நீண்டகாலப் போராட்டம் வெற்றியடையும் விதமாய் சிறை நிர்வாகம் கழிவறை கட்டித்தர சம்மதிக்கிறது.

அன்புராஜுக்கும் அந்த உத்வேகம் பிறந்தது. மனிதன் ஒவ்வொரு நாளையும் முந்தைய நாளை விட சிறந்த மனிதனாய் வாழவேண்டுமென்கிற விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் துவங்குகிறபோது இயற்கை அவன் முயற்சிகளுக்கு துணை நிற்கிறது.

சேலம் சிறைச்சாலையிலிருந்த ஆறு வருட காலத்தில் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட அன்புராஜ் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதுமே கர்நாடக காவல்துறை அவரைக் கைதுசெய்தது. கர்நாடகாவில் முடிக்க வேண்டிய வழக்குகளுக்காக அவர் அழைக்கழிக்கப்பட்டார். சொந்த கிராமத்தில் தனது புதிய வாழ்வை நம்பிக்கையோடு துவங்கவேண்டுமெனக் காத்திருந்த அந்த மனிதருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கனவுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கிப்போய் சிதறுண்டவராய் மைசூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவருக்கு தனது வாழ்க்கை முழுக்க சிறைச்சாலையிலேயே கழிந்துவிடுமோ என்கிற அச்சம் உருவாகிறது. அந்த அச்சம் சிறையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தை அவருக்குள் உருவாக்க, அவர் அதற்கான வழிகளைக் குறித்து யோசிக்கத் துவங்குகிறார். சிறைச்சாலையில் காவல் அமைப்பு முறை, காவலர் பணி நேரம் என எல்லாத் தகவல்களையும் துல்லியமாக திரட்டத் துவங்குகிறார். சிறையிலிருந்து தப்பிக்கும் செயலானது சட்ட அமைப்பைத் தகர்க்கும் அபாயகரமான செயல்பாடு என்கிற தயக்கமெல்லாம் அப்போது அவரிடமிருந்து காணாமல் போய்விட்டிருந்தது.

கட்டிமணி அவர்கள் சிறைச்சாலையிலிருக்கும் கைதிகளை ஒருங்கிணைத்து நாடகங்களை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டவர்.

நாடக ஆசிரியர் கட்டிமணியுடனான சந்திப்பு அன்புராஜை நாடகக் களத்திற்கு இழுத்து வருகிறது. ’இந்த நாடகங்களை எங்கு அரங்கேற்றுவீர்களென?’ கட்டிமணி அவர்களிடம் அன்புராஜ் கேட்கும்போது பெங்களூரிலும் கர்நாடகத்தில் வேறு நகரங்களிலும் என பதிலுறைக்கிறார். அன்புராஜால் அதை நம்பமுடியவில்லை. பெரும் பிரமுகர்கள் எல்லாம் பார்க்கும் அரங்கில் சிறைக் கைதிகளின் நாடக அரங்கேற்றம். அவருக்கிருந்த இலக்கிய வாசிப்பும், தேடலும் அவரை கட்டிமணியின் நாடகக் குழுவில் இணைத்துவிடுகிறது. ஆனால் கன்னட மொழியை எழுதப் படிக்கத் தெரியாத ஒரு குறையாக இருந்தது. சிறைக்கு வரும் கன்னட நாளிதழ்கள் பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் நண்பர்களின் உதவியோடு வாசிக்கப் பழகுகிறார். நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நாடக அரங்கில் கதாப்பாத்திரங்களாய் உறுமாறும் போது அந்த மாற்றம் தனக்குள்ளும் நிகழ்வதை அந்தரங்கமாய் உணர்ந்துகொண்டவர் தனது மனதின் குரலுக்கு செவிசாய்க்கத் துவங்கினார்.

இந்தச் சூழலில்தான் நாடகத்தில் நடிக்க வந்த ரோஹினியின் மீது அவருக்கு நேசம் பிறக்கிறது. வாழ்க்கை நம்பமுடியாத ஆச்சர்யங்களை நமக்கு எப்போதும் பரிசளித்தபடியே இருக்கும். தோழர் அன்புராஜுக்கு அப்படிக் கிடைத்த ஆச்சர்யமான பரிசு ரோஹினி அவர்கள். செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்று பெங்களூர் சிறையிலிருந்த ரோஹினி நாடக ஒத்திகைக்காக மைசூர் வருவார், பின்பு ஒத்திகை முடிந்ததும் சென்றுவிடுவார். அந்த சின்னஞ்சிறிய அவகாசம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்குப் போதுமானதாயிருந்தது.

மனைவியுடன் தோழர் அன்புராஜ்

வாழ்வின் மீதான பற்றும் பிடிப்பும் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச் சிறைச்சாலையிலிருந்து தப்பித்துவிட வேண்டுமென்கிற தூண்டுதலும் அவருக்கு அதிகமாகிறது. நாடக அரங்கேற்றத்திற்காக அந்தக் குழு பெங்களூர் செல்கிறார்கள். அதுவரை பார்க்காத கூட்டம், அந்த அரங்கமும் மக்கள் திரளும் புதிய பரவசத்தைக் கொடுத்த அதே வேளையில் மனம் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தது. பெரும் கரகோசத்தோடும் ஆராவாரத்தோடும் நாடகம் முடிந்தபின் வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் நாடகத்தில் நடித்தவர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு பத்திரிக்கையாளர் வேடிக்கையாக ஒரு நடிகரிடம், ‘உங்கள சிறைல இருந்து வெளில கூட்டிட்டு வந்திருக்காங்களே இத வாய்ப்பா வெச்சுக்கிட்டு தப்பிச்சிரலாம்னு உங்களுக்கு தோணியிருக்கா?’ எனக் கேட்கிறார். அந்த நடிகர் சிரித்தபடியே, ‘நான் தப்பிச்சிட்டா நாளைக்கு என் கேரக்டர வேற யார் பண்ணுவாங்க?’ என்று சொல்லி இருக்கிறார்.

தான் தப்பிக்க நினைத்தது சிறையிலிருந்து மட்டுமல்ல, தன்னை புதிய மனிதனாய் செதுக்கிக் கொண்டிருக்கும் கலையிலிருந்தும்தான் என்ற உண்மை புரிந்த நொடியே இனி ஒருபோதும் தப்பித்தல் குறித்து யோசிக்கப் போவதில்லையென முடிவெடுக்கிறார்.

தோழர் அன்புராஜ் குடும்பம்

எந்த நிலையிலிருந்தாலும் வாழ்வின் நோக்கம் பிடிபட்டபின் ஒரு மனிதன் தனக்குள்ளிருக்கும் முழுமையை நோக்கி பயணிக்கத் துவங்கிவிடுகிறான். எவையெல்லாம் பிசிறுகளாகவும் துயரங்களாகவும் தோன்றியதோ அவற்றிலிருந்தெல்லாம் வாழ்வதற்கான உத்வேகங்களைப் பெற்றுக் கொள்கிறார். கட்டிமணியின் நாடகக் குழுவில் முக்கியமான நபராக மாறுவதோடு சிறைச்சாலையிலிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தவேண்டுமென்கிற உந்துதலும் அவருக்கு வருகிறது. கர்நாடக சிறை வரலாற்றில் அதுவொரு புரட்சி. ஜெயிலரின் அனுமதியோடு பத்திரிகை துவங்குகிறவர் கர்நாடகாவின் முக்கிய ஆளுமைகள் அத்தனை பேருக்கும் அந்த பத்திரிகையை அனுப்புவதோடு அவர்களையும் தங்களது பத்திரிகையில் எழுதச் சொல்லிக் கேட்கிறார்.

சேலத்தில் ஆறு வருடங்கள், மைசூரில் பதினாலு வருடங்களென ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்தவருக்கு விடுதலையும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. கர்நாடகத்தின் முக்கிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவரை விடுவிக்கச் சொல்லி கையெழுத்து இயக்கங்கள் நடத்தினார்கள். இருபது வருடகாலத்திற்குப்பின் விடுதலையானவர் சிறையில் பழக்கமான ரோஹினியைத் திருமணம் செய்துகொண்டு சொந்த ஊரிலேயே வாழ்வைத் துவங்குகிறார். இன்று பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களை நடத்துவதோடு தனது ஆசிரியர் கட்டிமணியின் வழியில் சிறைக் கைதிகளை ஒருங்கிணைத்து நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஏராளமான மக்கள் செயற்பாட்டிலும் தன்னை ஒருங்கிணைத்து இயங்கிவருகிறார். வாழ்வின் பெரும் பகுதியை சிறைச்சாலைகளுக்கு காவு கொடுத்த பலரும் தமது பிற்பகுதி வாழ்க்கையை கசப்புடனும் சோர்வுடனுமே கழிப்பார்கள். அபூர்வமாக ஓரிருவர்தான் அந்த பிற்பகுதி வாழ்வை அர்த்தப்பூர்வமாக சமூகத்திற்கானதாய் மாற்றிக்கொள்வார்கள். தோழர் அன்புராஜ் அபூர்வத்திலும் அபூர்வமான மனிதர்.


மேலும் படிக்க காட்டிலிருந்து ஒரு குரல் - கலை மூலம் தன்னை செதுக்கிக் கொண்ட போராளி தோழர் அன்புராஜ்|இவர்கள்| பகுதி 25
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top