தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் 58 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் அவர் தொடர்புடைய இன்னும் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.பி வேலுமணியின் அண்ணன் அன்பரசன், அன்பரசன் மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை, கோவை, திருப்பூர், சேலம், கேரளா உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, குடும்பத்தினர் ரூ. 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், வருமானத்தை விட 3,928% அதிகம் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இருக்கிறது. வேலுமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அதனால் அவர் வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா பண்ணை வீட்டிலும் ரெய்டு..!
கேரளா ஆனைக்கட்டி அருகே வேலுமணி தரப்புக்கு சொந்தமாக ஓர் பண்ணை வீடு உள்ளது. கடந்தாண்டு அங்கு ரெய்டு நடக்கவில்லை. இப்போது கேரள பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இது தவிர்த்து சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகார்கள் காரணமாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று சென்னையில் போக்குவரத்துக்கு துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை நடத்தியதும், அதில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க ``வருமானத்தை விட 3,928% அதிகம்; வெளிநாட்டில் சொத்து குவிப்பு?” - எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை