எளிமையே பெருமை
அவரிடம் பேசும்போது 'மகசேசே விருது', 'பத்மவிபூஷண்' என்று அவர் பெற்றிருந்த விருதுகளின் பெருமை ஒரு சிறிதும் அவரின் உடல் மொழியில் தெரியாது. எளிமையாக இருப்பார். பேச்சில் மட்டும் ஞானமும் சமூக அக்கறையும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும்.
கருத்துகளை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்
தன் கருத்தைத் தெளிவாகக் கூறினாலும் அதை எப்படிக் கூறுவது என்பதில் உயரிய பண்பு அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டபோது 'அவற்றைப் பற்றி எனக்கு உயர்வான கருத்து கிடையாது' என்று மட்டுமே கூறி முடித்துக் கொள்வார்.

மாற்று வழிகளுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்
டாக்டர் சாந்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. இது குறித்துக் கேட்டபோது சமூக சேவையில் உள்ள நாட்டம்தான் அதற்குக் காரணம் என்றோ தன் வாழ்க்கையை சேவைக்காகவே அர்ப்பணித்துவிட்டதாகவோ அவர் கூறியிருக்கலாம். அது நம்பும்படியாகவும் இருந்திருக்கும். ஆனால் தனக்குத் திருமண வாழ்வு இல்லை என்பது தன் தலையில் எழுதப்பட்ட ஒன்று என்றார். மீதி மருத்துவர்களும் இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை என்பார். சொல்லப்போனால் இளம் நோயாளிகளை அணுகும் போது 'என் மகன் அல்லது மகள் போன்றவர்' என்கிற உணர்வு மேலும் அழுத்தமாக அவர்களுக்கு உண்டாகி சிகிச்சை சிறப்பாகப் பணிபுரிய அவர்களுக்கு உதவக் கூடும் என்று அவர் கூறினார்.
சொல்வதைச் செய்யுங்கள்
புற்றுநோய் மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்ததில் டாக்டர் சாந்தாவுக்கு கணிசமான பங்கு உண்டு. ஒரு ரோல் மாடலாக அங்குள்ள பல மருத்துவர்களைச் சேவையில் ஈடுபட வைத்திருக்கிறார். அவர் வாழ்க்கையும் அந்த மருத்துவமனையுடன் ஒன்றிணைந்ததாக இருந்ததை வெளிப்படுத்தும் வகையில் மருத்துவமனையின் மாடியிலேயே அவருக்கான எளிய இருப்பிடம் அமைந்திருந்தது.

கடமை கடந்த அர்ப்பணிப்பு உயர்வு தரும்
கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, "புற்று நோய் பாதித்தவர்களுக்கு நானும் சிகிச்சை அளித்திருக்கிறேன். ஆனால் நோயாளிகளிடம் டாக்டர் சாந்தா கொண்டிருந்த அர்ப்பணிப்பு மேலும் ஆழமானது. அதை அவர் ஒருவரால்தான் செய்ய முடியும். இளைஞர் ஒருவர் ரத்தப் புற்றுநோயின் மிகத் தீவிர பாதிப்பில் இருந்தார். அவர் ஒரு நாள் சாந்தாவின் கையைப் பற்றியபடி தனக்கு பயமாக இருக்கிறது என்றும் இருள் அச்சத்தைத் தருகிறது என்றும் கூறினார். அன்று இரவு முழுதும் அவர் சாந்தாவின் கையை விடவே இல்லை. அவரும் அவர் அருகில் பிரார்த்தனை செய்தபடி உட்கார்ந்து கொண்டே இருந்தார். அடுத்த நாள் அந்த இளைஞர் இறந்துவிட்டார்" என்றார்.
மேலும் படிக்க கடமை கடந்த அர்ப்பணிப்பு... டாக்டர் சாந்தா வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!