தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாள்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். இந்திய அரங்கை பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.
இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், தொழிற்பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தொடர்ச்சியாக காட்சிப் படங்கள் திரையிடப்படுகின்றன.
மேலும் அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/4eT1Trtzl9
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 25, 2022
தமிழ்நாடு அரங்கினை முதல்வர் திறந்து வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ``தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் இது தொடர்பாக ட்விட்டரில், ``துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினைத் திறந்து வைக்கச் சென்றேன். திரளாகக் குழுமியிருந்த அயலகத் தமிழ் உறவுகள் அளித்த உற்சாக வரவேற்பில் ஒரு நொடி வெளிநாட்டில் இருப்பதே மறந்து போனது!” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும்
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 25, 2022
1/2 pic.twitter.com/HKSaGjNEUk
இந்த சந்திப்புக்குப் பின்னர் அமீரகப் பயணம் குறித்து ட்வீட் செய்திருந்த ஸ்டாலின், `` "நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக-அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது” என்றார்.
தொடர்ந்து, இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அழைப்பின் பெயரில் துபாயில் உள்ள அவரின் ஸ்டூடியோவுக்கு தன் குடும்பத்தினருடன் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு ரஹ்மான், தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை முதல்வருக்கு காண்பித்தார். அப்போது, ``தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என்றார் ஸ்டாலின்.
#DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் 'இசைப் புயல்' @arrahman அவர்கள் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார்.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை! pic.twitter.com/ya4uLIlJiB
தொடர்ந்து, துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2
இது குறித்து ஸ்டாலின், ``3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்!” என்றார்.
மேலும் படிக்க எக்ஸ்போ, ரஹ்மான் ஸ்டூடியோ முதல் புர்ஜ் கலீபாவில் செம்மொழி பாடல் வரை... துபாயில் முதல்வர் ஸ்டாலின்!