ஷேன் வார்னே - கிரிக்கெட் உலகம் கண்ட மகத்தான மாயக்காரர், மரணத்தின் தோள்களில் சாய்ந்திருக்கிறார்.
இரங்கல் செய்திகள் எழுதும்போது, அவர்களைப் பற்றி எழுத ஆழமாக யோசிக்கவேண்டும். காலத்தில் பின்னோக்கிப் பயணித்து அவர்களது சாதனைகளை எடைபோட வேண்டும். மரணத்தைப் போலவே வலி தரக்கூடியது இந்தக் காலப்பயணம். காரணம், அந்தச் சாதனைகளோடு பின்னிப் பிணைந்திருக்கும் நம் நினைவுகளும் மனிதர்களும். நாஸ்டாலஜியா சட்டென நம் கண்களை வியர்க்கச் செய்வது இதனால்தான். வார்னேவின் மரணம், கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் இப்படியான உணர்ச்சியையே கொடுத்திருக்கிறது.
வார்னே காற்றில் பறந்துவந்த சாகசக்கதைகளால் சொல்லப்பட்டவர் இல்லையே. காட்சிகள் வழியே நம் நினைவுகளில் வாழ்ந்தவர். அவர் செய்த அற்புதங்களுக்கு முப்பது வயதுகூட நிறைவடைந்திருக்கவில்லை. அதனாலேயே இந்த மரணம் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருக்கிறது.

வார்னேவின் இரங்கல் குறிப்புகள் ஒவ்வொன்றும் ஜீனியஸ், மேஜிக் என்ற வார்த்தைகளைச் சுமந்துகொண்டிருக்கின்றன. தன் மணிக்கட்டைச் சுழற்றி அவர் செய்த மாய வித்தைகள் ஒவ்வொன்றும் நினைவுகூரப்பட்டு வருகின்றன. பேட்டோடு கிரீஸில் நின்ற ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நொடியும் ஏமாற்றிய இந்த நவீன ஹுடினியை இனி ஒருபோதும் நாம் காணப்போவதில்லை.
லெக் ஸ்பின் என்பதை வித்தையாக மாற்றிய வித்தகர் வார்னே. 1,001 சர்வதேச விக்கெட்டுகள், மொத்தமாய் 2500-ஐத் தாண்டும் விக்கெட்கள் என எண்ணிக்கையை வைத்து அவரை அளவிட முடியாது. போரால் சிதைந்து உருகுலைந்து போன ஒருநாட்டின் இளம் சிறுவன் துளியும் நம்பிக்கை குறையாது தன் கையில் கிரிக்கெட் பந்தைப் பிடித்தபோது உலகம் சிலிர்த்துப் போய்ப் பார்த்தது. ரஷீத் கான் என்னும் அந்தச் சிறுவனுக்கு அன்றும் இன்றும் வார்னேதான் எல்லாம். ஆம்! கிரிக்கெட்டின் இக்காலத் தலைமுறைக்கு வார்னே எனும் பெயரே அளவீட்டு முறை.
“என் கரியரின் மிகச் சிறந்த தருணம் வார்னேவுக்கு கீப்பிங் செய்தது. அவர் வித்தைகளைப் பார்ப்பதற்கான சிறந்த இருக்கை எனக்குக் கிடைத்திருந்தது. இயான் ஹீலியும், நானும் மட்டுமே டெஸ்ட் அரங்கில் அந்தக் கொண்டாட்டத்தையும், த்ரில்லையும் அனுபவித்திருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்ததுண்டு” என்று பதிவிட்டிருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். சிட்னியில் பிட்சாகி, மெல்போர்ன் வரை சுழலும் பந்துகளுக்கு கீப்பிங் நிற்பது சாதாரண காரியமா என்ன!
லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்சாகி, ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்க்கும் பந்துகளை எத்தனை முறை பார்த்தாலும் ஆச்சர்யம் அடங்காது. அதுவும் ஓவர் தி ஸ்டம்ப் லைனில் இருந்து வீசிய ஒரு பந்து அப்படிச் சுழலும் என்றெல்லாம் கிரிக்கெட்டின் கடவுள்களும் அனுமானித்திருக்க மாட்டார்கள். மைக் கேட்டிங்கிற்கு வீசிய அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்தை, உலகம் மீண்டும் மீண்டும் பார்த்துச் சிலாகித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த முறை அதைப் பார்க்கும்போது, வார்னேவை, அந்தப் பந்தை, ஸ்டம்புகளை, ரிச்சி பெனாவின் வர்ணனையை... அனைத்தையும் மறந்துவிடுங்கள். அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மைக் கேட்டிங்கையும், ஆச்சர்யத்தில் துள்ளிக் குதிக்கும் இயான் ஹீலியையும் மட்டும் பாருங்கள். அதுவே ஷேன் வார்னே!
கிரிக்கெட் எனும் விளையாட்டு உள்ளவரை கொண்டாடப்படக்கூடிய அந்தப் பந்துதான், ஆஷஸ் தொடரில் வார்னேவின் முதல் பந்து. தன் முதல் படியையே பிரமாண்டமாக எடுத்துவைக்கும் ஆளுமை அவர். அடியெடுத்து வைத்த அரங்கிலெல்லாம் சூப்பர் ஹிட்டாகும் சூப்பர் ஹீரோ!
2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டபோது, 6 அணிகளுக்கு மார்க்கீ வீரர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் அந்த அணிகளின் அடையாளமாகக் கருதப்பட்டார்கள். சென்னையோ, இந்திய அணியின் அடையாளத்தையே அழைத்து வந்தது. ஆனால், ராஜஸ்தான் அப்படியில்லை. அதுவரை ஜெய்ப்பூரில் ஒரேயொரு சர்வதேசப் போட்டியை மட்டுமே விளையாடியிருந்த ஆஸ்திரேலியர் ஒருவரைக் கேப்டனாக்கியது. ‘தான் மட்டுமே அணியின் அடையாளமில்லை. ஆடும் 11 பேருமே ராயல்ஸ் அணியின் அடையாளம்தான்’ என அதை மாற்றிக் காட்டினார் வார்னே. ஐ.பி.எல்லில் மட்டுமல்ல, அவரால் இப்படி பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் உலகெங்கிலும் கிரிக்கெட்டில் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன.

களம் கடந்து அவருக்குப் பல அடையாளங்கள் இருந்திருக்கின்றன. பல சர்ச்சைகளில், பிரச்னைகளில் இவர் பெயர் அடிபட்டிருக்கிறது. ஆனால், இவர் எதிலிருந்தும் விலகி நின்றதில்லை. வார்னேவைப் பொறுத்தவரை உண்மை என்பது தனக்குத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் வரையறை. அவர் கடைசி வரை தனக்கு உண்மையாக இருந்தார். தான் நினைத்தபடியே வாழ்ந்தார். தற்புகழ் மட்டுமே சூழ்ந்திருக்கும் இன்றைய கிரிக்கெட் புத்தகங்களுக்கு மத்தியில், சுயசரிதை என்ற இலக்கணத்தோடு வெளிவந்த முதல் புத்தகம் இவருடையதாகத்தான் இருக்கும்.
லெக் ஸ்பின் என்பதை ஒரு கமர்ஷியல் வித்தையாக மாற்றியவர் இவர். ஆஸ்திரேலியா மட்டுமல்ல, இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என எந்தத் தேசத்திலும் உருவான, உருவாகும் லெக் ஸ்பின்னர்கள் முன்னர் சொன்னதைப்போல வார்னேவைத்தான் முன்மாதிரியாகக் கொண்டிருப்பார்கள். மணிக்கட்டைச் சுழற்றிப் பந்துவீசும், பந்துவீசப்போகும் ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் வார்னே என்ற விதை ஒளிந்திருக்கும். அவர்களின் விக்கெட் கொண்டாட்டத்தில் கொஞ்சமே கொஞ்சமேனும் வார்னேயின் அந்த டிரேட்மார்க் சிரிப்பு கலந்திருக்கும். குட் பை கிங்!
மேலும் படிக்க மதிப்பிட முடியாத மாயக்காரர்!