சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன் என்கிற பார்த்தீபன்(27), சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிவகாசி அருகில் உள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்றவர், மாலையில் வேலை முடிந்ததும், தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த துரைப்பாண்டி(27) என்பவருடன் டுவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். டுவீலரை, அரவிந்தன் ஓட்டி வந்துள்ளார்.

அவர்கள், கள்ளப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த 4 பேர் கும்பல் திடீரென சாலையில் வந்துநின்று அரவிந்தனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை கொண்டு சரமாரியாக அரவிந்தனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே, உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்வதற்காக அருகே இருந்த சோளக்காட்டுக்குள் அரவிந்தன் ஓடியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கீழே விழுந்த துரைப்பாண்டிக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது.
சோளக்காட்டுக்குள் ஓடிய அரவிந்தனை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் உடலில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதை தடுக்கச்சென்ற துரைப்பாண்டிக்கு தலை, கைகளில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
சத்தம்கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவரவும் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். தொடர்ந்து, கைகள் துண்டாகி குத்துயிரும்,குலையுயிருமாக கிடந்த அரவிந்தன் மற்றும் காயத்துடன் கிடந்த துரைப்பாண்டி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இதில், அரவிந்தனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிர்தப்பிய துரைப்பாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், எம்.புதுப்பட்டி காவல் ஆய்வாளர் மலையரசி, காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பல தகவல்கள் தெரியவந்தன. அதன்படி, போலீஸ் தரப்பில் பேசும்போது ``வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரவிந்தன் மீது ஏற்கனவே 2 கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. சிவகாசியில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நவநீதிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரவிந்தன் உள்பட 3 பேர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கிலிருந்து சமீபத்தில்தான் அரவிந்தன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் அரவிந்தன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக கொலையாக இருக்கலாம்” என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அருண்பாண்டியன், பார்த்திபன், மதன், பழனி செல்வம் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடருமா என்ற அச்ச உணர்வை மக்கள் மனதில் விதைத்துள்ளது.
மேலும் படிக்க சிவகாசி: கொலை வழக்கில் கைது... ஜாமீனில் வெளிவந்த ரெளடியை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்