கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா இடையேயானப் போர், 10 நாள்களைக் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரேனிய மக்கள் மட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கியிருக்கும் பிறநாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக உக்ரைன் நாட்டுக்குச் சென்ற 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் போருக்கிடையே சிக்கிக்கொண்டனர். தாக்குதலிலிருந்து தப்பிக்க, மெட்ரோ சுரங்கங்கள், பதுங்கு குழிகள் என கிடைக்கும் இடங்களிலெல்லாம் தஞ்சம் புகுந்து, உயிரைக் கையில்பிடித்துக்கொண்டு திண்டாடி வருகின்றனர்.

தாயகம் திரும்புவதற்காக உக்ரைனில் தவித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைதான் `ஆபரேஷன் கங்கா!' இதன் செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக இங்கே!
ஆபரேஷன் கங்கா:
போர் காரணமாக உக்ரைனின் வான்பகுதி மூடப்பட்டுவிட்டதால், தரைவழியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு எல்லைக் கடந்து சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவுக்கு மீட்டு வரும் செயல்திட்டத்தை இந்திய அரசாங்கம் வகுத்தது. அதன்படி, உக்ரைன் நாட்டின் அண்டைநாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாகியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இந்திய தூதரகம் சார்பில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும், எல்லைதாண்டி இந்திய தூதரக சோதனை முகாம்களை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட், கொரோனா தடுப்பு சான்றிதழ், அமெரிக்க டாலர் பணம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் உடன்வைத்திருக்க வெண்டுமென இந்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டன.

முதற்கட்ட நடவடிக்கை:
இந்திய அரசின் அறிவிப்பின்படி, உயர்கல்வி மாணவர்கள் உள்ளிட்ட உக்ரைன்வாழ் இந்திய நாட்டினர், சாலை மார்கமாக பேருந்துகள், கார்கள் என கிடைக்கின்ற வாகனங்களில் பயணம் மேற்கொண்டு அண்டை நாடுகளின் எல்லைநோக்கி புறப்பட்டனர்.

முதல்கட்டமாக, உக்ரைன் நாட்டின் செர்னிவிஸ்டி நகரிலிருந்து, 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பேருந்து மூலம் ருமேனியா நாட்டு எல்லைக்குச் சென்றனர். அங்குள்ள, இந்திய தூதரக சோதனை முகாம்களில் பதிவுசெய்த பின்னர், அங்கிருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்காக, புகாரெஸ்ட் விமான நிலையத்தில், ஒரு ஏர்-இந்தியா விமானம் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, தாயகம் திரும்புவதற்காகத் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆபரேஷன் கங்கா செயல்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, மதியம் 1:55 மணியளவில் ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்டிலிருந்து, 219 இந்தியர்களுடன் முதல் விமானம் இந்தியாவை நோக்கி பயணப்பட்டது. அன்றிரவு சரியாக 7.50 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.

பத்திரமாக மீட்கப்பட்ட (5 தமிழர்கள் உட்பட) 219 இந்தியர்களையும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். தாயகம் திரும்பிய மகிழ்ச்சியில் மாணவர்கள் ஜெய் ஹிந்த் முழக்கமிட்டனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்ரேஷன் கங்காவின் முதல்படி வெற்றிகரமாக முடிந்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட நடவடிக்கை:
அதைத்தொடர்ந்து, மேலும் இரண்டு இந்திய விமானங்கள் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கும், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மறுநாள் பிப்ரவரி 27-ம் தேதி, புகாரெஸ்டிலிருந்து மேலும் 250 மாணவர்களை இந்தியாவின் இரண்டாவது விமானம் பத்திரமாக மீட்டு, அதிகாலையில் தலைநகர் டெல்லிக்கு கொண்டுவந்து சேர்த்தது. விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்றார்.
அடுத்த மூன்றாவது விமானம், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டிலிருந்து, 240 இந்தியர்களுடன் புறப்பட்டு, காலை 10 மணியளவில் இந்திய தலைநகர் டெல்லிக்கு வந்துசேர்ந்தது. அதேபோல், மாலை 6:30 மணியளவில் நான்காவது விமானமும் டெல்லியை வந்தடைந்தது.
இவ்வாறு இரண்டுநாள் தொடர் நடவடிக்கையின் விளைவாக, 4 விமானங்கள் மூலம் 21 தமிழக மாணவர்கள் உட்பட 907 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

மூன்றாம்கட்ட நடவடிக்கை:
மூன்றாம்கட்ட நடவடிக்கையாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மேலும் 7 சிறப்பு விமானங்களை இந்திய அரசாங்கம் அனுப்பியது. அதில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களை மீட்ட ஐந்தாவது சிறப்பு விமானம், வெற்றிகரமாக டெல்லியை வந்தடைந்தது. அதன்படி, மொத்தம் 5 விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து சுமார் 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

நான்காம் கட்ட நடவடிக்கை:
அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இந்திய விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பாக நாடுதிரும்பினர். இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``கடந்த பிப்ரவரி 26-ந் தேதி முதல் நான்கு நாள்களில் 9 விமானங்கள் மூலம் சுமார் 2,000 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,377 இந்தியர்களுடன் 6 விமானங்கள் இந்தியா திரும்பியதாகவும்" தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இந்திய அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக, உக்ரைன் அண்டை நாடுகளுக்கு, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோரை அனுப்பி வைத்தது.

ஐந்தாம்கட்ட நடவடிக்கை:
கடந்த மார்ச் 3-ம் தேதி, ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம், 210 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். தலைநகர் டெல்லியை வந்தடைந்த அவர்களை இந்தியப் பாதுகாப்புத்துறை இணை அதிகாரி அஜய் பட் வரவேற்றார்.

அடுத்தடுத்து 10 சிவில் விமானங்கள் மூலம் ஒரே நாளில் சுமார் 2,185 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்கள், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5 விமானங்கள், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டிலிருந்து 2 விமானங்கள், போலந்து நாட்டின் ரிஸ்சோவிலிருந்து 2 விமானங்கள் மற்றும் இந்திய விமானப்படையின் 3 விமானங்கள் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டனர்.
ஆபரேஷன் கங்கா செயல்திட்டத்தின் மூலம் கடந்த பிப்ரவரி 22 முதல் இன்றுவரை மொத்தம் 6,200-க்கும் அதிகமானோர் மீட்டு வரப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது.
அடுத்தகட்ட நடவடிக்கை:
இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் 7,400-க்கும் அதிகமான இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், அவர்களை இந்திய விமான படையின் சி-17 விமானங்களுடன் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ பர்ஸ்ட், கோ ஏர் உள்ளிட்ட வர்த்தக விமானங்கள் மூலமாகவும் மீட்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து, இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``உக்ரைனின் கார்கிவ் மற்றும் பிசோச்சின் பகுதியில் 900 முதல் 1000 இந்தியர்கள் வரை சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மேலும் உக்ரைனில் கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும்" எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் `ஆபரேஷன் கங்கா'வின் செயல்பாடுகள் என்னென்ன? - ஒரு பார்வை!