பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு, உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் குறித்து பேசிய காணொளி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒன்பது நிமிடங்கள் இருந்த காணொளியில் போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை வைத்ததோடு,போருக்கு எதிராகப் போராடும் ரஷ்ய மக்களையும் பாராட்டி உள்ளார்.
``இன்று உங்களுடன் நான் பேசுவதற்கான காரணம் இந்த உலகில் தற்போது நடந்து கொண்டிருக்கும், உங்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மை சம்பவங்கள் குறித்தும் பேசுவதற்கு தான். நீங்கள் உக்ரைனில் நடக்கும் போர் குறித்த உண்மைகளை என்னைக் கூற அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன். உக்ரைனில் நடக்கும் இந்த போர் உண்மையில் ரஷ்ய அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இது மக்களுக்கான போர் கிடையாது. இந்த முறையற்ற போரில் ரஷ்யாவின் செயல்களால் உலகின் பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளன" என்றார்.
I love the Russian people. That is why I have to tell you the truth. Please watch and share. pic.twitter.com/6gyVRhgpFV
— Arnold (@Schwarzenegger) March 17, 2022
இரண்டாம் உலகப் போரில் போர் புரிந்த தன் தந்தையைப் பற்றி நினைவுகூர்ந்ததோடு, "இந்த காணொளியைப் பார்க்கும் ரஷ்ய வீரர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்யும் போர் சட்டத்திற்கு புறம்பான முறையற்ற போர் ஆகும். உங்களுடைய உயிர், உடல் அனைத்தும் மொத்த உலகமே எதிர்க்கும் அர்த்தமற்ற போரில் வீணடிக்கப்படுகிறது." என்றார்.

மேலும் ரஷ்ய அதிபர் புடினுக்கும் ஒரு வேண்டுதல் விடுத்தார். "இது நீங்கள் தொடங்கிய போர், நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போர். நீங்கள் நினைத்தால் இதை நிறுத்தவும் முடியும்" என்றார்.
இறுதியாக போரை நிறுத்த வேண்டி அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ரஷ்ய மக்களைப் பாராட்டி ,"இந்த உலகமே உங்கள் வீரத்தைப் பார்க்கிறது. நீங்கள் தான் எனது நிஜ ஹீரோக்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க ``இது நீங்கள் தொடங்கிய போர்; உங்களால் நிறுத்தவும் முடியும்” - புடினுக்கு அர்னால்டு வைத்த கோரிக்கை