CSK v KKR: தடுமாறிய கேப்டன் ஜட்டு; சிலிர்க்க வைத்த தோனி - கே.கே.ஆர் கேப்டன் ஸ்ரேயாஸின் முதல் வெற்றி!

0
ஐபிஎல் - தொடர் தொடங்கியபோது பதின்பருவத்தில் விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்தவர்களுக்கும் இருபதுகளில் கொஞ்சம் கொஞ்சமாக செட்டிலாகிக் கொண்டிருந்தவர்களுக்கும் இது இன்றுவரை வாழ்க்கையின் முக்கிய அங்கம். கூடவே இன்னொரு பெயரும். 'தோனி'. தமிழ்க் கூறும் நல்லுலகத்தில் மொத்தமாய் ஐபிஎல் பார்ப்பவர்களையே 'என்னவானாலும் தோனியைக் கொண்டாடுபவர்கள் - என்ன செய்தாலும் விமர்சிப்பவர்கள்' என இரண்டாக பிரித்தேவிடலாம். (மையமாக இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் மய்யம் வாங்கிய ஓட்டுகளைப் போல ரொம்பக் கம்மி) இன்னும் கொஞ்சமே கொஞ்ச காலம் மட்டுமே தோனி ஆடுவதை பார்க்கமுடியுமென்பதால் அவர்கள் அத்தனை பேரும் டிவி முன் ஆஜராகி இருந்தார்கள் சி.எஸ்.கே - கே.கே.ஆர் மோதலுக்கு.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த முறையும் தொடருக்கு முன்பாக தொடக்க விழா கொண்டாட்டங்கள் இல்லை. அதற்குப் பதிலாக இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சின்னதாய் ஒரு பரிசளிப்பு விழா மட்டும் நடந்தது. மற்ற விளையாட்டுகளையே பாராட்டுபவர்கள் ஐபிஎல்லின் முதல் சாம்பியனை மறந்து விடுவார்களா என்ன? ஷேன் வார்னேயை நினைவுகூர்ந்தபின் தொடங்கியது முதல் போட்டி.

உமேஷ் யாதவ் | CSK v KKR

சென்னையின் கன்னி கேப்டனாக ஜடேஜா. இனி டாஸ் தொடங்கி டிவியில் காண்பிக்கப்படும் முகம் தொட்டு பிரசன்டேஷன் வரை எங்குமே தோனியைக் காணமுடியாதென்பது ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். கொல்கத்தாவிலும் அதே போல ஸ்ரேயாஸ். மும்பை வான்கடே சேஸிங்கிற்குச் சாதகமானது என்பதால் டாஸ் ஜெயித்த ஸ்ரேயாஸ் சேஸிங்கையே தேர்வு செய்தார். அந்த அணியில் ரஸல், நரைன், பில்லிங்ஸ் என மூன்றே வெளிநாட்டு வீரர்கள். பேட் கம்மின்ஸுக்கு பதில் கருணரத்னே ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் ஷெல்டன் ஜாக்சனோடு களத்திற்கு வந்தார்கள் கொல்கத்தா.

சென்னை அணியில் மொயின் முதல் ஆட்டத்திற்கு இல்லையென்பதால் ஸ்பின்னராய் தீக்‌ஷனா இறங்குவார் என நினைத்திருக்க, 'அதெல்லாம் லிஸ்ட்லயே இல்ல' என சான்ட்னரை உள்ளே கொண்டு வந்தார்கள். கூடவே மில்னேவும். 'பத்து பேரு, முடிஞ்சா பதினொரு பேருமே பேட்டிங் ஆடணும்' என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனியின் கேம் ப்ளான். இன்னமும் அவர்தான் டீம் செலக்ட் செய்கிறார் என்பது டாஸின்போதே தெரிந்தது.

மம்முட்டியும் ரஜினியுமாக போன சீசனில் வலம்வந்த ஓப்பனிங் தளபதிகளில் ஒருவர் இப்போது இல்லை. புது பார்ட்னர் கான்வேயோடு களமிறங்கினார் ருத்துராஜ். ஏலத்தின் போது எல்லாவற்றுக்கும் கைதூக்கிவிட்டு கடைசியாகத்தான் 'ஐய்யயோ... பவர்ப்ளேல போட பௌலரே எடுக்கலையே மாப்ள' எனக் கடைசியாக உமேஷ் யாதவை எடுத்தது கொல்கத்தா. பவர்ப்ளேயைப் பொருத்தவரை உமேஷ் பாம்பே பாட்ஷா பாய் போல. 'விர்ர்ர்ர்' என பந்தை இறக்குவார். டெத் ஓவர்களில் அப்படியே எதிர்மாறாய் கம்பத்தில் கட்டப்படும் மாணிக்கம் போல. அடித்து வெளுப்பார்கள். அதனால் புத்திசாலித்தனமாய் பவர்ப்ளேயில் அவரைச் சிறப்பாக பயன்படுத்தினார் ஸ்ரேயாஸ். முதல் பந்தையே நோ பாலோடு தொடங்கினாலும் சுதாரித்து சரியாக ருத்துராஜை கழற்றினார். 'சாரி சார். நான் எம்.ஜி.ஆர் மாதிரி. முதல் கொஞ்ச மேட்ச் அவுட்டாகிட்டு அப்புறம்தான் அடிப்பேன்' என டக் அவுட்டாகி நடையைக் கட்டினார் ருத்து. கைகொடுக்க டுப்ளெஸ்ஸியும் இல்லாததால் சென்னை ரசிகர்களுக்கு அப்போதே கண்ணைக் கட்டியது.

ஷெல்டன் ஜாக்சன், வருண் சக்ரவர்த்தி | CSK v KKR

ஒன் டவுனில் உத்தப்பா. கடந்த சீசனில் சில அபார கேமியோக்கள். ஏலத்தின்போது இவரை சென்னை அணி எடுத்தபோதே 'இன்னுமா இவரை நம்பிகிட்டு இருக்கீங்க?' எனக் கேட்டவர்கள் அதிகம். ஆனால் தோனிக்கும் உத்தப்பாவிற்குமான நெருக்கம் தசாப்தத்தையும் தாண்டியது. அந்த நம்பிக்கையை இந்த ஆட்டத்திலும் தக்க வைத்தார். இந்த ஐபிஎல்லின் முதல் பவுண்டரியும் முதல் சிக்ஸரும் உத்தப்பாவினுடையது. மறுபுறம், 'ஓ இதான் ஐ.பி.எல்லா? நல்லாயிருக்கேப்பா' என வெக்கேஷனில் சென்னையை சுற்றிப் பார்க்க வந்த மோடிலேயே தடவிவிட்டு அவுட்டானார் கான்வே. செட்டிலாக அவருக்கு சில போட்டிகள் தேவைப்படலாம்.

கடந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்கள் எடுத்த ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திதான். அதனால் இந்த முறையும் அவரை பவர்ப்ளேயில் இறக்கினார் ஸ்ரேயாஸ். நன்றாக ஸ்பின் ஆடக்கூடிய உத்தப்பாவையே ஏமாற்றி ஸ்டம்பிங்கில் வெளியேற்றினார் வருண். அந்த ஒரு ஸ்டம்பிங் கீப்பர் ஷெல்டனை சச்சின் வரைக்கும் பாராட்ட வைத்தது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்/கேப்டன் என டபுள் ப்ரமோஷனில் உள்ளே வந்தார் ஜடேஜா. ஆனால் கேப்டன் பதவி பிரஷர் ஏற்றியதோ என்னவோ பந்தைக் கணிப்பது தொடங்கி ரன் ஓடுவது வரை எல்லாவற்றிலும் தடுமாறினார். இவரின் தப்பான ஜட்ஜ்மென்ட்டுக்கு ராயுடு பலியாகி ரன் அவுட்டாகி வெளியேற பிரஷர் இன்னும் எகிறியது. அதன்பின்னர் தூபேவையும் அதே ரீதியில் ராங் காலில் அவுட்டாக பார்த்து தலையிலடித்துக்கொண்டார். 'என்ன கேப்டன் இதெல்லாம்' என கன்னத்தில் கை வைத்தார்கள் ரசிகர்கள்.

'என்னை அவுட்டாக்க நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க. நானே அவுட்டாகுறேன்' என ஏரியா கிரிக்கெட்டில் பிளாஸ்டிக் பாலில் ஆடும் குட்டிப்பையன் போல மோசமான ஷாட் ஆடி வெளியேறினார் தூபே. 'இப்ப நான் வந்து மிடில் ஓவர் ஸ்பின் சமாளிச்சு கட்டை வெக்கணும்... அதானே' எனத் திட்டியபடி உள்ளே வந்தார் தல. இந்தப் பக்கம் வருண். பழைய வரலாறெல்லாம் எல்லாருக்கும் வந்துபோக வெற்றிகரமாய் அவரையும் நரைனையும் சமாளித்தார் தோனி. ஆனால் அதனாலேயே ஸ்கோரும் சுத்தமாக ஏறவே இல்லை. 15 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 73/5.

தோனி | CSK v KKR

தோனி தடுமாறுவதில் ஆச்சரியமில்லை. அவர் முதல்தர போட்டிகள் ஆடி மூன்றாண்டுகள் ஆகின்றன. அவருக்குப் போட்டியாக ஜடேஜாவும் தடுமாற, ஸ்கோர் போர்டை யாரோ pause செய்துவிட்டது போல ஸ்கோர் நகரவே இல்லை. 17 ஓவர்கள் வரை ஸ்பின் தொடர, தட்டுத் தடுமாறி தடுத்தாடினார் தோனி. 18வது ஓவரில் ரஸல் வர, மூன்று பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை ஏற்றினார் தோனி. அதுவரை 25 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தவர் இப்போது 30 பந்துகளில் 28 ரன்கள். அதற்கடுத்த ஓவர் ஷிவம் மாவி. அதிலும் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர். 'தலலலலலல' என வின்டேஜ் தோனியை தரிசித்தார்கள் ரசிகர்கள். நப்பாசையாக 'ஒரு பிப்டி போட்டா நல்லாயிருக்குமே' என ஆசைப்பட்டாலும் அது மெடிக்கல் மிராக்கிள் என்றே மூளை சொல்லியது.

'நான் பார்க்காத மிராக்கிளாடா தம்பி?' எனக் கடைசி ஓவரில் தொடர்ந்து தோனி இரண்டு பவுண்டரிகள் அடிக்க அரைசதத்திற்கு இப்போது தேவை ஒரே ஒரு ரன் மட்டுமே. லாங் ஆஃப்பில் தட்டிவிட்டு சிங்கிள் ஓட, இறுதியாக அரைசதம். இரண்டு சீசன்கள் கழித்து. அதுவும் இனிமேல் வாய்ப்பே இல்லை என எல்லாரும் நினைத்தபோது. 38 பந்துகளில்... மொத்த அரங்கமும் எழுந்து நின்று சிலிர்க்க, சிம்பிளாய் பேட்டைத் தூக்கிக் காட்டிவிட்டு களத்தில் கவனம் செலுத்தினார் தோனி. கடைசி பந்தில் சம்பிரதாயமாக ஜடேஜா சிக்ஸ் அடிக்க, ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள்.
ரஹானே, வெங்கடேஷ் ஐயர் | CSK v KKR

கொல்கத்தாவிற்கு ஓப்பனிங் ரஹானேயும் வெங்கடேஷ் ஐயரும். ஸ்கோர் குறைவென்பதால் பொறுமையாக தட்டித் தட்டி ஆடி பவர்ப்ளே முடிவில் 43 ரன்கள் எடுத்தார்கள். கிட்டத்தட்ட அப்போதே வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், 'விடாம போராடணும்' என ப்ராவோ கையில் தோனி... ஐயோ சாரி சார், சாரி சார்... ஜடேஜா பந்து தர, வந்தவுடன் வெங்கடேஷை பெவிலியன் விரட்டினார் ப்ராவோ. அதன்பின் தூபே பௌலிங் போட, காத்திருந்ததைப் போல வெளுத்தார்கள் பேட்ஸ்மேன்கள். சான்ட்னரின் பௌலிங்கும் சுத்தமாக எடுபடவில்லை.

மீண்டும் ப்ராவோ வந்துதான் ராணாவை அவுட்டாக்க வேண்டியதாக இருந்தது. ரஹானேவும் நடையைக் கட்ட, ஸ்ரேயாஸும் பில்லிங்குஸும் நங்கூரமாய் நின்று ஆடினார்கள். மறுபடியும் 'ப்ராவோயாக நம' என மந்திரம் போட்டு அவர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இப்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் மலிங்காவோடு ப்ராவோவிற்கும் முதலிடம். மேட்ச் கணக்கில் 29 மேட்ச்கள் பிராவோ அதிகம் என்றாலும் ஓவர் கணக்கில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே அதிகம்.

CSK v KKR

மீதி எல்லாம் சம்பிரதாயம்தான். வின்னிங் ரன்களை அடித்து தம்ஸ் அப் காட்டினார் ஸ்ரேயாஸ். கொல்கத்தா கேப்டனாய் முதல் வெற்றி. ஏலத்தில் முதன்முறையாக தங்கள் வழக்கமான ஸ்டைலை விட்டு இளம்வீரர்களை குறிவைத்தது சென்னை. ஆனால் இந்தப் போட்டியில் திறமை காட்டியதோ தோனி, ப்ராவோ ஆகிய இரண்டு சீனியர்கள் மட்டும்தான்.

ஒரு அணியாக ஜடேஜா திறம்பட சென்னையை நடத்துவாரா இல்லை சென்னை ரசிகர்கள் தோனியின் இந்த அரைசதத்தோடு சமாதானப்பட்டுக்கொள்ள வேண்டுமா என்பது போகப் போகத்தான் தெரியும். இறுதியாய் ஒரு கொசுறு - மேன் ஆப் தி மேட்ச் - பாட்ஷா பாய் உமேஷ் யாதவ்தான்.

மேலும் படிக்க CSK v KKR: தடுமாறிய கேப்டன் ஜட்டு; சிலிர்க்க வைத்த தோனி - கே.கே.ஆர் கேப்டன் ஸ்ரேயாஸின் முதல் வெற்றி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top