ஜூன் மாதம் கொரோனாவின் நான்காவது அலை வரும் என்றும் அது அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் சொல்கிறார்களே.... இப்போதுதான் மூன்றாம் அலை முடிந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இன்னோர் அலையா.... அதன் தீவிரம் எப்படியிருக்கும்?
- ஆதிரா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட இதுபோன்ற தருணங்களில் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தும் மற்ற காரணிகளை வைத்தும் இப்படியொரு விஞ்ஞானரீதியான கணிப்பை நடத்துவது வழக்கம்தான். அதன்படி ஐஐடி கான்பூர், வரும் ஜூன் 22-ம் தேதி கொரோனாவின் நான்காவது அலை ஆரம்பித்து, நான்கு மாதங்கள் நீடிக்கும் என்ற கணிப்பைச் சொல்லியிருக்கிறது.
ஏற்கெனவே உள்ள புள்ளிவிவரங்கள், மற்ற நாடுகளில் கொரோனா அலை வந்ததற்கும் இந்தியாவுக்கு வந்ததற்குமான கால இடைவெளி போன்றவற்றின் அடிப்படையில் இதை கணித்திருக்கிறார்கள். இது தவிர ஒன்பது காரணிகளை இவர்கள் கணக்கில் எடுத்திருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளைத் திறந்தது, பொதுக்கூட்டங்களை அனுமதிப்பது, கோயில்கள், திருவிழாக்கள், தேர்தலில் மக்கள் கூட்டத்தை அனுமதிப்பது, போக்குவரத்துக்கு அனுமதித்தது உட்பட கோவிட் தீவிரமாக இருந்தபோது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பல விஷயங்களையும் கணக்கில் கொண்டுதான் இந்தக் கணிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை கோவிட் தொற்று முற்றிலும் முடிந்துவிட்டது என்ற நிலையை இன்னும் எட்டவில்லை. தினமும் புதுத் தொற்றுகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. முற்றிலும் பரவலைத் தடுக்கும் தடுப்பூசிகளோ, மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அடுத்தடுத்த அலைகள் வந்தாலும் முந்தைய அலைகளைப் போல தீவிரமாக இருக்காதே தவிர, இனி அலையே வராது, கொரோனா காலம் முடிந்துவிட்டது என்று சொல்லும் நிலை இப்போதைக்கு இல்லை.

வைரஸ் என்பது உருமாறிக்கொண்டேதான் இருக்கும். கோவிட் வைரஸின் ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் போன்ற உருமாற்றங்கள் கவனத்துக்குரியவை. இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவலைக்குரிய திரிபுகளாக (variants of concern) என்று சொல்லப்பட்டன. இனியும் அடுத்தடுத்த உருமாற்றங்கள் வரும். அவை அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தும். அப்போதெல்லாம் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்போது தொற்று குறைவது தொடரும். சின்னச் சின்ன அலைகளாக வந்து, இந்தத் தொற்றை முற்றிலும் தடுக்கும் மருந்துகள் வரும்வரை இது தொடரும்.
நான்காவது அலை என்றதும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றெல்லாம் நினைத்து பயப்படத் தேவையில்லை. சென்னையில் தொற்று எண்ணிக்கை இப்போதே 100-க்கு கீழ் வந்துவிட்டது. இதே நிலை நீடித்தோ, இதைவிட சற்று குறைந்தும்கூட மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கலாம். அது எவ்வளவு அதிகரிக்கும், எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதெல்லாம் அந்த நேரத்தில் நாம் தடுப்பூசி போட்டதைப் பொறுத்தே அமையும். ஒமிக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் போனதன் காரணமும் அதுதான்.

நான்காவது அலைக்கும் அது பொருந்தும். அடுத்து வரப்போகிற உருமாற்றத்தின் தன்மை, அது எப்படிப் பரவக்கூடியது, அதிகம் பரவுமா அல்லது வைரஸை வலுவிழக்கச் செய்யுமா என்பதெல்லாம் தடுப்பூசிகள் போடப்படும் எண்ணிக்கையைப் பொறுத்தது. வயதானவர்களுக்கும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதையும் பொறுத்தது. தவிர முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் மனநிலை ஆகியவற்றையும் பொறுத்துதான் நான்காவது அலையின் தாக்கம் அமையும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
மேலும் படிக்க Doctor Vikatan: ஜூன் மாதம் கொரோனாவின் 4-வது அலை கணிப்பு; தீவிரமாகத் தாக்குமா?