முருகக் கடவுளுக்கு ஆறு முகங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு சக்தி இருப்பதாகக் கூறுவார்கள். கடவுளுக்கு அது சரி. ஆனால், மனிதர்களுக்கு இரண்டு முகங்கள் இருந்தால்? அது எப்படி இருக்கும்?
தினம் தினம் சந்திக்கும் மனிதர்களிடையே நாம் வெளியில் பார்க்கும் முகம் ஒன்று. முகத்தில் தோன்றும் முக பாவங்கள், உணர்ச்சிகள் மற்றும் பேச்சிலிருந்து அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று எடை போடுவதுதான் வழக்கம். இதைத் தவிர அவரது உள்மனதில் மற்றொரு முகம் மறைந்திருக்கும். இதுதான் ஒருவருடைய இரண்டாவது முகம். எல்லோராலும் இதைப் பார்க்க முடிவதில்லை.
சில நேரங்களில் சில மனிதர்களிடம் இதைப் பார்க்கலாம்...

ஒருவர் எல்லோரிடமும் சரளமாக சிரித்து முகத்துடன் நன்றாகப் பேசிப் பழகுவார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து, "ஏதாவது உதவி வேண்டும் என்றால் என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். நான் கட்டாயம் உதவுவேன்’ என்று யாரும் கேட்காமலேயே தம்பட்டம் அடிப்பார். ஆனால் அவரிடம் சென்று ஏதாவது ஒரு சிறிய உதவியை (அதை எளிதில் அவரால் செய்துவிட முடியும்) கேட்டால், "அப்படி எல்லாம் செய்வது சாத்தியமே இல்லை. அதைத் தவிர வேறு என்ன கேட்டாலும் செய்கிறேன்’ என் முகத்தில் அடித்தாற்போல ஒரு பொய்யைச் சொல்லிவிடுவார்.
ஒருவர் தனது அவசரத் தேவைக்காக கெஞ்சிக் கூத்தாடி நண்பரிடம் கடனாக ஒரு தொகையைப் பெறுவார். "இந்தத் தேதியில் திருப்பித் தருகிறேன்’ என வாக்குறுதியும் தருவார். குறித்த காலத்தில் பணத்தை திருப்பித் தராததால் அவரிடம் போய்க் கேட்டால், "இப்போது என்னால் பணத்தைத் திருப்பித் தர முடியாது. உன்னால் முடிந்தைச் செய்து கொள்’ என்று தனது இரண்டாவது முகத்தை வெளிப்படுத்துவார்.
ஓர் இளைஞர் ஒரு பெண்ணை பல மாதங்களாகக் காதலித்து வருகிறான். அவளையே திருமணம் செய்து கொள்வதாகவும் சத்தியம் செய்கிறான். காதலி, "உடனே எங்கள் வீட்டில் வந்து பேசி திருமணம் செய்து கொள்ளுங்கள். என் பெற்றோர்கள் எனக்கு ஒரு மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்கள்’ என்று சொன்னதும், "அடடே! நான் சொல்ல மறந்து விட்டேன். அடுத்த வாரம் நான் வேலைக்கு அமெரிக்கா போக இருக்கிறேன். வருவதற்கு சுமார் ஒரு வருடம் ஆகலாம். அதுவரை பொறுத்துக் கொள். திரும்பி வந்தவுடனே உன்னைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று இதுவரை மறைத்து வைத்திருந்த தனது இரண்டாவது முகத்தைக் காட்டி விடுவான்.
இப்படி பல உதாரணங்களை எழுதிக் கொண்டே போகலாம். மக்களிடையே பலருக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. இந்த முகங்களின் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாத பலர், ’எவர் நல்லவர், எவர் கெட்டவர்’ என்பது தெரியாமல் குழப்படைகிறார்கள். ’இவர் உண்மையைப் பேசுகிறாரா? அல்லது பொய் சொல்கிறாரா?’ என்று சந்தேகப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இரண்டு முகங்கள் உள்ளவர்களை நம்பி பலர் பொன்னான நேரம், பணம் மற்றும் உறவு போன்ற விலைமதிக்க முடியாதவற்றை இழக்கிறார்கள்.
இரண்டு முகங்களைக் கொண்ட மனிதர்கள் இப்போதுதான் இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். ’கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு’ என குறள் எழுதியுள்ளார். (சொல் வேறு, செயல் வேறு என்ற இருப்பவர்களின் நட்பு கனவில்கூட துன்பத்தையே கொடுக்கும்.) "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று வள்ளலார் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்க்கையில் சத்தியத்தைக் கடைபிடித்து, ’சத்திய சோதனை’ எனும் வாழ்வியல் நூலை எழுதியுள்ளார். எந்த சந்தர்ப்பத்திலும், எப்படிப்பட்ட சோதனையான சூழலிலும் ஹரிச்சந்திரன் காட்டியது ஒரே முகம்தான். தான் சொன்ன சொல்லிலிருந்து அவர் மாறியதில்லை. இப்படி ஒரே முகம் காட்டியதால்தான், இன்னமும் அவர் எல்லோரது மனத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
யாருக்கெல்லாம் ஒரே முகம் மட்டும் இருக்கும்? இதைக் கண்டறிவது மிகவும் சிரமம். பொதுவாக குழந்தைகள் மாறி மாறிப் பேசமாட்டார்கள். அவர்கள் பெரியவர்களாக ஆகும்வரை ஒரே முகத்துடன் தான் இருப்பார்கள். ஒரு தாய் தன் குழந்தைகளிடம், அவர்கள் வளர்ந்த பின்னரும், அவர்களின் நன்மைக்காக ஒரே முகத்துடன்தான் இருப்பார். உண்மையான பக்தியுடன், பணம், பதவி, பட்டம் போன்ற எதற்கும் ஆசைப்படாமல் தொண்டு மனப்பான்மையுடன் இருக்கும் ஆன்மிகவாதி காட்டுவது தனது ஒரு முகத்தைத்தான். முதியவர்கள் தங்களின் வாழ்க்கையில் பெற்ற அனுபத்தாலும், அறிவாலும் அவர்களின் முகம் பொதுவாக ஒன்றாகவே இருக்கும்.
சமூகத்தில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் இரண்டு முகம் கொண்டவர்கள் பல பேர் உள்ளார்கள். வயதான காலத்தில் உங்களிடம் இருக்கும் செல்வாக்கிற்காகவும், சொத்துக்காகவும் இரண்டு முகங்கள் கொண்டவர்கள் பலர் உங்களிடம் நெருங்கிப் பழகுவார்கள். அவர்களிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இனிமேல் உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு முகம் கொண்ட நல்ல மக்களின் தொடர்பே போதுமானது. அவர்களின் துணையோடு மீதமுள்ள வாழ்க்கையை இனிமையாக கழிக்க முயற்சி செய்யுங்கள் !
- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை.
மேலும் படிக்க இரண்டு முகம் கொண்டவர்களின் தொடர்பு | முதுமை எனும் பூங்காற்று #MyVikatan