2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வரும், அ.தி.மு.கவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதையடுத்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து டி.டி.வி தினகரன் நீக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தனி அமைப்பை ஆரம்பித்தார். அப்போது அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இரட்டை இலை சின்னத்தைப் பெற தன்னிடம் ரூ.15 கோடி லஞ்சமாக தினகரன் கொடுத்தார் என அமலாக்கத்துறை விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக தினகரனிடம், டெல்லி அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. காலை 11:30 மணியளவில் தொடங்கப்பட்ட விசாரணையானது கிட்டத்தட்ட 10 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ``சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான வாக்குமூலம் அளிக்கிறார். அவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைப் பொறுத்த வரையில் நான் நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை. யாரோ ஒருத்தர் கொடுக்கிற வாக்குமூலத்தால், அவர்களும் என்னை அழைத்துக் கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என கூறினார்.
மேலும் படிக்க இரட்டை இலை வழக்கு... 10 மணிநேரம் நீண்ட விசாரணை - `நான் நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை!’ - தினகரன்