பத்து வருடங்களுக்கு முன் மதுரை மாவட்ட எஸ்.பியாக அஸ்ரா கார்க் இருந்தபோது பரபரப்பாக செயல்பட்டார். தவறு செய்யும் அரசியல்வாதிகள், சமூக விரோதச்செயல்களில் ஈடுபடும் ரெளடிகள், காவல்துறையினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் தெறிக்க விட்டார். அதனால் அவரை மக்கள் கொண்டாடினார்கள்.

அதன் பின்பு வெவ்வேறு மாவட்டங்களுக்கு எஸ்.பி.யாக சென்று, டி.ஐ.ஜியாக பணிபுரிந்து, மத்திய அரசு பணிக்கு சென்றவரை, தென் மாவட்டங்களில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், சாதிய மோதல்கள், கொலை கொள்ளை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர தென்மண்டல ஐஜியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சர்ப்ரைஸ் விசிட் அடித்து காவல்துறையினரின் நடவடிக்கைகளை கண்காணித்தும் எச்சரித்தும் வருகிறார்.
தென் மாவட்டத்தில் தொடரும் பழிக்குப்பழி கொலைகள், சாதி ரீதியான மோதல்கள், தீண்டாமை வன்கொடுமைகள் கந்துவட்டிப் புகார்கள், ரெளடிகளின் அட்டகாசங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் பின்னணியில் காவல்துறையினர் சிலர் இருப்பதை தெரிந்துகொண்டவர், சமீபத்தில் ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், "ஜாதி ரீதியான கொலைகள், பழிக்குப்பழி கொலைகளை தடுப்பது குறித்து எஸ்.பிக்களும், தனிப்பிரிவு அதிகாரிகளும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு தகவல் கூறுகின்றனர். இப்படிப்பட்ட தகவல் கிடைத்தும் உங்கள் லிமிட்டில் பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் நடந்தால், அதற்கு அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.தான் பொறுப்பு. தேவைப்பட்டால் டிஎஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.
பழிக்குப்பழி கொலைகள் நடக்காமல் தடுக்கும் பொறுப்பு எஸ்.பி.க்கும் தனிப்பிரிவுக்கும் என்று கூறாமல் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த விஷயத்தில் கனிவோ கருணையோ இருக்காது.
போதைப்பொருள், கள்ள லாட்டரி விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 சதவிகித போலிஸார்கள் நேர்மையாக பணியாற்றுகிறார்கள். மீதியுள்ளவர்களுக்கு சமூக விரோத கும்பலுடன் தொடர்புள்ளது.
இதற்கு முன் இருந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இனிமேல் தவறு செய்பவர்கள், கடமை மீறுபவர்கள் பற்றி சின்ன புகார் கூட என் கவனத்துக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் 3 விதமான தண்டனை வழங்கப்படும். முதலில் டிரான்ஸ்பர், அடுத்து சஸ்பெண்ட், மூன்றாவதாக கிரிமினல் வழக்கு போடப்படும். அதனால் வேலையை காப்பாத்திக்கனும்னா நல்லா வேலை பார்க்கணும். கவுரவமா வேலை பார்க்கணும். பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இதை எஸ்.பிக்கள் அனைத்து போலீஸுக்கும் கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டும்.
தனிப்பிரிவை பொறுத்தவரயில் ஏதாவது ஊழல்புகார் வந்தால் உடனே மேலிடத்துக்கு தகவல் தர வேண்டும். போலிஸ் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிக்கணும். வேண்டுமென்றே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிக்கக் கூடாது. எந்த கட்சிகளுக்கும் சப்போர்ட் செய்ததாக புகார் வரக்கூடாது.
சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. சைபர் கிரைம் புகார் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட உதவி போன் நம்பர் 1930 பற்றி போலீஸாருக்கே தெரியவில்லை.

புகார் மனு மீதான விசாரணையை நியாயமாக நடத்தினால் பல பிரச்னைகள் முடிந்துவிடும். இதை எஸ்.பிக்கள் கண்காணிக்க வேண்டும்.
போலீஸ்காரர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் 9445300002 என்ற எண்ணுக்கு தகவல் தரலாம்." என்று நீண்ட நேரம் பேசியுள்ளார்.
இதைக்கேட்டு தென்மண்டலத்தில் 10 மாட்டங்களில் சமூக விரோதிகள், ஜாதி அமைப்பினருடன் தொடர்பு வைத்துள்ள கான்ஸ்டபிள் முதல் உயரதிகாரிகள் வரை அரண்டு போயுள்ளனராம்.
மேலும் படிக்க மதுரை: ``தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை" - ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை