2019-ல் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சி இலங்கையில் அமைந்தபிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதனால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அதில் வீழ்ந்த அந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, மக்கள் போராட்டம் என இலங்கை அரசுக்கு நாலாபக்கமும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரமென்பது கிட்டத்தட்ட 80% பிற நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்துக்குக்கிடையில், இலங்கையின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும் கூறிவருகின்றனர்.

இதனால் பெட்ரோல், டீசல் தொடங்கி காகிதம் வரை அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடும் விலையுயர்வைச் சந்தித்துள்ளன. மேலும் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின்தடையும் ஏற்பட இலங்கையில் சாமான்ய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில், இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு காபந்து (தற்காலிக) அரசை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர கட்சி, இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், மற்றும் ஶ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வலியுறுத்தின.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி (நேற்றிரவு) முதல் இலங்கையில் அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க `பொருளாதார நெருக்கடி... மக்கள் போராட்டம்..!' - இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்