கடலூர் மாநகராட்சியில் துணை ஆணையர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், “கடலூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் மாநகராட்சி சபை கூடுவதற்கு புதிய அரங்கு ஒன்று கட்டப்பட வேண்டும். கடலூர் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இன்று என்னை சந்தித்தார்கள். 2019-20, 2020-21 ஆம் ஆண்டு கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும் மருத்துவ மாணவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

2022-23 கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரிக்கான கட்டணம் வசூலிக்கும் புதிய அரசாணையை வரவேற்று பாராட்டுகிறோம். அதேவேளையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் நுழைந்த மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் அரசுக் கட்டணத்தையே கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டு கட்டணமான 13,000 ரூபாய் கட்டணத்தை செலுத்தினாலே போதும் என்று முதலில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது ஏனோ கைவிடப்பட்டு 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சுகாதாரத்துறையின் கீழ் இணைக்கப்பட்ட பிறகு வெளியான உயர் கல்வித்துறையின் அரசாணை முரணாக இருக்கிறது.
அம்பேத்கரையும், மோடியையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்க முடியாது. இருவரும் வெவ்வேறு கருத்தியல்களைக் கொண்டவர்கள். முரண்பட்ட அரசியலைக் கொண்ட இருவரை ஒரு நேர்க்கோட்டில் பொருத்திப் பார்ப்பது, இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என்று கற்பிக்க முனைவது ஏற்புடையது அல்ல. அதனால்தான் இளையராஜா விமர்சிக்கப்படுகிறார். புரட்சியாளர் அம்பேத்கருடன் பெரியார், ஜோதிராவ் புலே, திருவள்ளுவர் போன்றவர்களை ஒப்பிட முடியும். ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஒரே கருத்தியலைக் கொண்டவர்கள். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அரசியலுக்கும், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம்.

எந்த நிலையிலும், எந்த காலத்திலும், எந்த சூழலிலும் இவர்களின் அரசியலை ஒரே நேர்கோட்டில் பொருத்தவே முடியாது. ஆனால் இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டியிருப்பார் என்று சொல்வதுதான், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல்தான், அதில் புதைந்திருக்கும் சூதும் சூழ்ச்சியும்தான் விமர்சிக்கப்படுகிறதே தவிர வேறொன்றும் இல்லை. இந்த நிலையில் மோடியைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலை அழைப்பது அல்லது சவால் விடுவது பொருத்தமில்லாதது. இந்த விவாதமும் கவன ஈர்ப்புக்கான விவாதமாக மாற்றப்படுகிறது. அதனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை” என்றார்.
தொடர்ந்து, ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆளுநருக்கே பாதுகாப்பில்லை என்று அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்களே..?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க தனித்து இயங்கவில்லை, பா.ஜ.கவின் தூண்டுதலால்தான் இயங்குகிறது என்பதற்கு இதுவே சான்று. ஆளுநர் மயிலாடுதுறை சென்ற போது கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது உண்மை. ஆளுநர் சென்ற பின்பு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீதே கறுப்புக்கொடி வீசப்பட்டது. இதனைக் கொண்டு அரசியல் செய்ய பா.ஜ.க முயல்கிறது. பா.ஜ.கவிற்கான இடத்தை விட்டுக் கொடுப்பது அ.தி.மு.கதான். அ.தி.மு.க நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வருவதை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது. தன்னிச்சையாக, சுதந்திரமாக அ.தி.மு.க செயல்பட்டால் பா.ஜ.க ஒரு பொருட்டே அல்ல. அ.தி.மு.க ஜெயலலிதா வழியில் செயல்படாமல் மோடியின் வழியில் செயல்படுகிறது என்பதை அ.தி.மு.கவின் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ராஜபக்சே சகோதரர்களை எதிர்த்து சிங்களவர்களே தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த குடும்பம் பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது. பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக உலக நாடுகளிலிருந்து பொருளாதார உதவியை கடனாகப் பெற்றனர். அதனை தற்போது அனுபவித்து வருகின்றனர். இதனை தேசிய அரசு என்ற பெயரில் அனைவரையும் சிக்க வைக்க ராஜபக்சே குடும்பம் ஈடுபட்டு வருகிறது. முறைப்படி தேர்தல் நடத்தி புதிய ஆட்சி அங்கே அமைய வேண்டும். இந்திய அரசு பல ஆயிரம் கோடிகளை உதவி செய்கிறோம் என்ற பெயரில் கொட்டிக் கொடுக்கிறது. இந்த பணத்தால் அங்கு வாழும் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழர்களுக்குத் தேவையான உதவியை செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க ``இளையராஜா விமர்சிக்கப்படுவது இதனால்தான்..!” – காரணம் கூறும் எம்.பி திருமாவளவன்