DC v RR: ஓயாத பட்லர் புயல்; மேட்சை மாற்றிய ப்ரஷித்... ஃபேர்பிளேயில் கோட்டை விட்ட டெல்லி!

0
ஐ.பி.எல்.லின் `எல் க்ளாசிகோ' என அழைக்கப்படும் மும்பை, சென்னை போட்டி நேற்று நடந்தது. ஆனால், கடைசி ஓவரில் தோனியின் அதிரடி இல்லாமல் இருந்திருந்தால், `இது வெடிகுண்டு இல்ல வெறும் குண்டு' என்ற அளவிலேயே அந்தப் போட்டி முடிந்திருக்கும். இன்றைய போட்டி அப்படி இல்லை. இந்த ஐபிஎல்லிலேயே கிட்டத்தட்ட சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் ராஜஸ்தானும், டெல்லி கேப்பிடல்ஸும்தான்.
விக்கெட் கீப்பர் கேப்டன்கள்; பட்லர், வார்னர் என அதிரடி ஓபனிங் பேட்டர்கள்; குல்தீப், சாஹல் என பர்ப்பில் கேப்புக்கு போட்டிபோடும் ஸ்பின்னர்கள் என இரு அணிகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள். ஐபிஎல்லில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த வரலாறும் இந்த அணிகளுக்கே அதிகம். அதனால் 'இன்னைக்கு செம மேட்ச் இருக்கு!' என ஆர்வத்துடன் உட்கார்ந்தோம். எதிர்பார்த்தது போலவே போட்டியும் யாரையும் ஏமாற்றவில்லை!
DC v RR

டாஸிலேயே 'சீ... இந்தப் பழம் புளிக்கும்!' மோடுக்கு சஞ்சு சாம்சன் வந்துவிட்டதை பார்க்க முடிந்தது. இந்த சீசனில் அவர் தோற்கும் ஆறாவது டாஸ் இது. இந்த சீசனில் நடக்கும் 34-வது போட்டி இது. இதுவரை டாஸ் வென்று யாரும் முதல் பேட்டிங்கைத் தேர்வுசெய்யவில்லை. பண்ட்டுக்கும் இந்த ரெக்கார்டை மாற்றும் எண்ணமில்லை. களமிறங்கியது பட்லர் - படிக்கல் கூட்டணி!

அதிக ரன்கள் எடுக்கப்படும் மைதானமாகவே அறியப்பட்டிருந்தாலும், இந்த சீசனில் வான்கடேவில் வாணவேடிக்கைகள் குறைவுதான். இந்த ஆட்டத்தின் முதல் சில ஓவர்களும் பௌலர்களுக்கே சாதமாக அமைந்தது. முதல் ஓவரில் அவுட்-ஸ்விங்கர்கள் மட்டும் வீசி பட்லரைத் திணறடித்தார் கலீல். ஒரு இன்-ஸ்விங்கர் உள்ளே வந்துவிடக்கூடும் என பதற்றத்துடனே ஆடிய பட்லருக்கு ஏமாற்றம். இருந்தும் எட்ஜ் பட்ட புண்ணியத்தில் இரண்டு ஃபோர் அடித்திருந்தார். அடுத்தடுத்த ஓவர்களையும் பட்லர் - படிக்கல் கூட்டணி அமைதியாகவே கடந்தது. புயலுக்கு முன்னான அமைதி அது என அப்போது டெல்லிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் வீசிய நான்காவது ஓவரில் அந்தப் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. தொடர்ந்து 3 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் படிக்கல். அது வெறும் புயலின் வெளிப்புறக் காற்று மட்டுமே... ஒரிஜினல் புயல் சுழன்றடிக்க தயாரானது!

DC v RR

ஆறாவது ஓவரை மீண்டும் கலீல் வீச வர, முதல் ஓவரில் அவுட்-ஸ்விங் போட்டு தண்ணிகாட்டியதற்கு அவரை பழிவாங்கினார் பட்லர். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க முழு புயலும் வான்கடேவை ஆட்கொண்டது. டெல்லிக்காக இந்த சீசன் விக்கெட்களை அள்ளிக்கொண்டிருக்கும் குல்தீப்பை கூட விட்டுவைக்கவில்லை அந்தப் புயல். பட்லர் இப்படி ஒருபுறம் பொளந்துகட்ட, படிக்கல் அவருக்குத் துணையாக நின்றார். இந்த சீசனின் முதல் 100 ரன் பார்ட்னர்ஷிப்பை நிறைவு செய்தது இந்தக் கூட்டணி. இந்த சீசனின் மூன்றாவது சதத்தை அடித்தார் பட்லர். இதே ஃபார்ம் தொடர்ந்தால் ஒற்றை சீசனில் 1000 ரன்களை அடிக்கும் முதல் வீரராகும் வாய்ப்பு இருக்கிறது. 2016 ஐபிஎல் சீசனில் கோலி அடித்த 973 ரன்களே இதுவரை இருக்கும் சாதனை.

இந்த இன்னிங்ஸில் பட்லருக்கு ஒரே ஒரு ஏமாற்றமே இருக்கக்கூடும். அது வான்கடேவுக்கு வெளியே அவரால் பந்தை அடிக்க முடியாமல் போனது. 100 மீட்டர்களைத் தாண்டிய இரண்டு சிக்ஸர்களை விளாசியிருந்தார் அவர். இரண்டுமே மைதானத்தின் அதி உயர ஸ்டாண்ட்டில் லேண்ட்டானது.

DC v RR

எதிர்முனையில் படிக்கலும் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதிகாரபூர்வமாக அவர் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என அறிவித்துவிடலாம். இந்தச் சூழலில் மீண்டும் ஓர் அற்புதமான ஓவரை வீசினார் கலீல். அவர் வீசிய 16-வது ஓவரில் படிக்கல் நடையைக் கட்ட வெறும் மூன்று ரன்கள் மட்டுமே அதில் அடிக்கப்பட்டன. இதை நம்பி இன்னுமொரு ஓவரை அவருக்கு தந்தார் கேப்டன் பன்ட். அதை மொத்தமாக பயன்படுத்திக்கொண்டார் சஞ்சு சாம்சன். 21 ரன்கள். கடைசி பந்தில் கைக்கு வந்த கேட்சையும் நழுவவிட்டார் கலீல்.

அடுத்த முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் ஓவரை பதம் பார்த்துவிட்டு கடைசி பந்தில் அவுட்டானர் பட்லர். ஆனால், புயல் முழுவதுமாக ஓய்ந்து விடவில்லை. சாம்சன் அதிரடியால் 222-2 என்ற ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான். (Fun Fact: இன்றைய தேதி: 22 ஏப்ரல் 2022)

"இது என் மகள்களுக்குப் போதாது. பட்லரை போல நானும் சதம் அடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்" என கடந்த மேட்ச்சில் 60 ரன்கள் அடித்த பிறகு கூறியிருந்தார் வார்னர். இந்த சேஸில் அவரிடமிருந்து அவரது அணியும் அதையே எதிர்பார்த்திருந்தது. அந்த அதிரடி தொடக்கத்தை கொடுத்தது ப்ரித்வி ஷா, வார்னர் கூட்டணி. இரண்டு பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார் ப்ரித்வி ஷா. வார்னரும் போல்ட், ஒபெத் மெக்காய் ஒவர்களைத் துவைத்து எடுத்தார். ப்ரஷித் கிருஷ்ணா வீசிய ஐந்தாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்த வார்னர், சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். 'பேட்ல படலையே!' என அம்பயர் அவுட் கொடுக்கும் வரை அவர் செய்தது ஆஸ்கருக்குத் தகுதிபெறும் பர்ஃபார்மென்ஸ்.

அஷ்வின் வீசிய முதல் பந்தில் சர்ஃபராஸ் கான் அவுட்டாக பண்ட் களமிறங்கினார். அஸ்வின் கடந்த மேட்ச்சிலும் முதல் பந்திலேயே விக்கெட் (ஆண்ட்ரே ரஸல்) வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஸ்பின்னர்கள் உள்ளே வந்த பிறகு டெல்லியின் ரன்ரேட் வெகுவாக குறையத் தொடங்கியது. 223 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த டெல்லி பேட்டர்கள் பிரஷரை உணர ஆரம்பித்தார்கள். அப்போதுதான் டெல்லி மீண்டும் ஒபெத் மெக்காய் ஓவரை விளாசி 26 ரன்கள் சேர்த்தது. அடித்தது பண்ட் - ப்ரித்வி ஷா கூட்டணி. இந்த ஓவரில் ஸ்லோ பால் போட முயன்று பிட்ச்சுக்கு வெளியே ஒரு பந்தை வீசியிருந்தார் மெக்காய். பனி (dew) வான்கடேவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது புரிந்தது. முதலில் பெரிய ஸ்கோராக தெரிந்த 223, இப்போது எட்டக்கூடியதாக பட்டது!

இந்த எண்ணம் முழுவதுமாகத் துளிர்விடுவதற்குள் ப்ரித்வி ஷாவை வெளியேற்றினார் அஷ்வின். பத்து ஓவர் முடிவில் 99-3 அடித்திருந்தது டெல்லி!
தோனி, பட்லர், டி.கே, சஞ்சு சாம்சன் வரிசையில் `நானும் விக்கெட் கீப்பர் பேட்டர்தான்டா' என அதிரடி காட்டத்தொடங்கினார் பண்ட்.
DC v RR

ஸ்பின்னர்கள் அஷ்வின், சஹால் இருவருமே நன்றாக பந்து வீசியிருக்க 11-வது ஓவரை ஒரு பார்ட்-டைம் ஸ்பின்னரான ரியான் பராக்கிடம் கொடுத்தார் சஞ்சு சாம்சன். இதை பயன்படுத்திக்கொண்ட பண்ட் அந்த ஓவரில் 22 ரன்கள் அடித்தார். வேறு வழியில்லாமல் ப்ரஷித் கிருஷ்ணாவை அழைத்து வந்தார் சாம்சன். சாம்சன் நினைத்ததை போலவே பண்ட் இரண்டாவது பந்திலேயே கேட்ச் கொடுத்தார். ஆனால், அதைத் தவறவிட்டார் சஹால். மேட்ச் மொத்தமாக கை நழுவுவதை உணரத்தொடங்கினார் சஞ்சு சாம்சன். 'நீங்க ஏன் பாஸ் கவலைப்படுறீங்க!' என்று மீண்டும் அதே ஓவரில் கேட்ச் கொடுத்தார் பண்ட். இம்முறை கேட்ச் சென்றது படிக்கலுக்கு, அவர் அதைத் தவறவிடவில்லை. மீண்டும் ரன்களைக் கட்டுப்படுத்தியது அஷ்வின் - சஹாலின் மந்திர சூழல் கூட்டணி!

அவ்வப்போது பவுண்டரி அடித்து டெல்லியிடமிருந்து மொத்தமாக போட்டி கைநழுவாமல் பிடித்துக்கொண்டிருந்தார் லலித் யாதவ். மூன்று ஓவர்களில் 51 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில் பந்து வீச வந்தார் போல்ட். ஐபிஎல்லில் இதுவரை பெரிதாக சோபிக்காமல் இருக்கும் ரோவ்மன் பாவெல் அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் இரண்டை சிக்ஸருக்கு அனுப்ப மீண்டும் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது டெல்லிக்கு.

DC v RR

இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் தேவை. மிகமுக்கியமான அந்த 19-வது ஓவரை வீச வந்தார் பிரஷித் கிருஷ்ணா. 24 பந்துகளில் 37 ரன்கள் அடித்திருந்த லலித் யாதவ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அடிக்க முயன்று முதல் இரண்டு பந்துகளையும் கோட்டைவிட்டார். மூன்றாவது பந்தில் அவுட்டும் ஆனார். அடுத்த வந்த குல்தீப் பேட்டிலும் பந்து படவில்லை. 19-வது ஓவர் விக்கெட் மெய்டன்.

கடைசி ஓவரில் தேவை ஆறு சிக்ஸர்கள். KKR-க்கு எதிராகக் கடந்த போட்டியில் இக்கட்டான கடைசி ஓவரை வீசி போட்டியை வென்றுகொடுத்த ஒபெத் மெக்காய் ஓவர் அது. 'இதெல்லாம் சாத்தியமே இல்லை' என டெல்லி ரசிகர்கள் கிளம்ப, முதல் பந்தை 101 மீட்டர் சிக்ஸர் அடித்து மிரளவைத்தார் பாவெல். அடுத்த பந்தும் சிக்ஸர் போக இப்போது பதற்றமடைந்தார் மெக்காய். அடுத்த பந்தை யார்க்கராக வீச அவர் முயற்சி செய்ய, அது ஃபுல்-டாஸாக பாவெலுக்குச் சென்றது. அதையும் பவுண்டரி எல்லைக்கு வெளியில் அனுப்பினார்.

DC v RR

அது ஹைட் காரணமாக 'நோ-பால்' என டக்-அவுட்டிலிருந்தே சிக்னல் கொடுத்தது டெல்லி அணி. ஆனால், அம்பயரோ அடுத்த பந்துக்குத் தயாரானார். இதில் கோபமடைந்த பண்ட், அணியை ஆட வேண்டாம் என சிக்னல் கொடுக்க பிரச்னை பெரிதானது. பயிற்சியாளர் ஒருவர் மைதானத்திற்குள்ளேயே நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டெல்லி அணியின் இந்தச் செயல் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இன்று டக்-அவுட்டில் ரிக்கி பாண்டிங்கும் இல்லை. குடும்பத்தினர் ஒருவருக்கு கொரோனா என்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு தரப்பு 'அது நோ-பால்தான். மூன்றாவது அம்பயருடன் அதை பரிசீலித்திருக்க வேண்டும்' என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர். இது குறித்து ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது தெரியுமா?

ஒரு பந்தில் விக்கெட் விழுந்தால் மட்டுமே அது நோ பாலா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த மூன்றாவது அம்பயரிடம் பரிசீலிக்க முடியும்!

அது நோ-பாலாகவே இருந்தாலும் கூட மைதானத்தில் நுழைந்து அதிகாரம் செய்ய அவர் யார்? ஒரு வகையில் இதை ஆரம்பித்த வைத்தது தோனிதான். இதே ராஜஸ்தானுடன்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சம்பவம் அரங்கேறியது. யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற செயல்கள் தவறான முன்னுதாரணங்களை விட்டுச்செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதன் நீட்சியாகவே இது நடந்திருக்கிறது. இதன் நீட்சியாக அடுத்தும் நடக்கலாம். போட்டி என்பது மைதானத்துக்குள் இருக்கும் வீரர்களுக்கிடையே நடப்பது. அதில் வெளியிலிருப்பவர்களுக்கு வேலை இல்லை. தவறான அல்லது சர்ச்சைக்குரிய முடிவுகளை அம்பயர்கள் கொடுப்பது இது முதல்முறையும் அல்ல.

மேலும், பாவெல் அடித்துக்கொண்டிருந்த வேகத்திற்கு இந்த குழப்பங்கள் நிச்சயம் வேகத்தடையாகவே அமைந்தன. அடுத்த பந்தை அவர் மிஸ் செய்ய அதுவும் ஒரு காரணம். போட்டி முடிந்த பிறகு, "அந்த முடிவை கண்டு டக்-அவுட்டில் இருந்த நாங்கள் அனைவருமே விரக்தியடைந்தோம். மூன்றாவது அம்பையர் தலையிட்டு அந்த பந்தை 'நோ-பால்' என்று அறிவித்திருக்க வேண்டும். எங்கள் அணியில் இருந்து ஒருவரை உள்ளே அனுப்பியது தவறுதான். ஆனால், அதே போல் எங்களுக்கு நடந்ததும் தவறுதான்" எனப் பேசியிருந்தார் பண்ட்.

DC v RR

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ஆரஞ்சு கேப், பர்ப்பில் கேப் என எல்லாம் இப்போது அவர்கள் வசம்தான். பட்லர் இருக்கும் ஃபார்முக்கு ஒற்றை ஆளாக இறுதிப்போட்டிக்கு ராஜஸ்தான் அழைத்து சென்றுவிடக்கூடும்.

கோப்பையை வெல்ல நினைக்கும் அணிகள் பட்லரை வீழ்த்தும் வியூகத்தை உடனடியாக கண்டுபிடித்தாக வேண்டிய நேரம் இது!

மேலும் படிக்க DC v RR: ஓயாத பட்லர் புயல்; மேட்சை மாற்றிய ப்ரஷித்... ஃபேர்பிளேயில் கோட்டை விட்ட டெல்லி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top