MI vs CSK: சலாம் தோனி பாய்! கேப்டனாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் பினிஷராக, லீடராகத் தொடரும் ஆதிக்கம்!

0
ஐ.பி.எல்லின் எல் க்ளாஸிகோ - இப்படிச் சொல்லித்தான் சிலிர்த்துப் போய் சில்லறையை விட்டெறிவார்கள் சென்னை - மும்பை ரசிகர்கள் இதுநாள் வரையிலும். ஆனால் இந்த முறையோ பண்டிகைக் காலத்தில் வரும் கடைசி பஸ்ஸில் சீட் பிடிக்க துண்டு போடும் பாவப்பட்டவர்களைப் போல தலையில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். `மாப்ள மாப்ள நான் ஒரு மேட்ச்சாவது ஜெயிச்சுக்குறேன் மாப்ள, சொன்னா கேளு மச்சான்! மும்பைலயே மேட்ச் நடக்குறதால ப்ளைட் ஏறவேணாமே தவிர நீ ஏற்கெனவே வெளியே போய்ட்டடா!' என்கிற ரீதியில் பேசியபடிதான் இந்த முறை களத்திற்கே வந்தார்கள் இரு அணிகளும்.

சென்னை அணியின் சோகம் ரீட்டெயின் செய்த நான்கு வீரர்களுமே சரியாக ஆடாமல் சொதப்புவது. மும்பை அணியின் சோகம் மொத்த அணியுமே கூண்டோடு சொதப்புவது. 'மோசமா ஆடுறதுல முக்கியமானவங்க யார்' என்பதைத் தெரிந்துகொள்ளும் இந்தப் போட்டியில் அதிசயமாக டாஸ் சென்னை பக்கம் சாய, பீல்டிங்கைத் தேர்வு செய்தார் ஜடேஜா.

முகேஷ் சௌத்ரி | MI vs CSK

'உள்ளத்தில் நல்ல உள்ளம்' எனக் கடந்த மேட்ச்சின் கடைசி ஓவரில் குடைசாய்ந்த கொடைவள்ளல் ஜோர்டன் எதிர்பார்த்தபடியே டீமில் இல்லை. பதிலுக்கு புது டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக வளர்ந்து வரும் ப்ரிட்டோரியஸ். மொயினுக்கு பதிலாக சான்ட்னர். மும்பையில் ரைலி மெரிடித், டேனியல் சாம்ஸ் ஆகியோரோடு தன் கன்னி மேட்ச்சில் களம் கண்டார் இளம் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஹ்ரிதிக் ஷோகீன்.

சென்னையாவது குறைந்தவிலை கொடுத்து எடுத்த வீரர்களைத்தான் பெஞ்ச் தேய்க்க வைப்பார்கள். மும்பையோ பலகோடி கொடுத்து எடுத்த டிம் டேவிட்டையும் வெளியேதான் உட்கார வைத்திருக்கிறார்கள். 'பார்மில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அணியில் இடம்' என கேப்டனும் கோச்சும் முடிவெடுத்திருப்பார்களானால் இந்த முடிவு நியாயம். ஆனால் அதைவிட சிறந்த நியாயம் மொத்த மும்பை அணியையும் ஆடவிடாமல் வெளியே வைத்திருப்பதுதான்.

ஹிட்மேனின் ஆட்டம் முன்பெல்லாம் லேட்டஸ்ட் வெர்ஷன் ப்ளேஸ்டேஷனில் அதே ஹிட்மேன் கேம் ஆடுவதுபோல ஸ்மூத்தாக இருக்கும். இப்போதெல்லாம் சிப் சொருகி விளையாடும் பழைய கேமிங் கன்சோலில் ஆடும் ஆட்டம் போல ஸ்ட்ரக்காகி நிற்கிறது. காசியில் தேமேவென பிரக்ஞையே இல்லாமல் இருப்பார்களே சாமியார்கள், அதே பற்றற்ற மோடில் ரோஹித் முதல் ஓவரிலேயே பந்தை அடிக்க அது சான்ட்னர் கையில் தஞ்சம் புகுந்தது. முகேஷ் செளத்ரிக்கு மறக்கமுடியாத விக்கெட். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் முகேஷ் விருட்டென இறக்கிய யார்க்கரில் ஆப் ஸ்டம்ப் இஷான் கிஷனுக்கு முன்பே பெவிலியனுக்குப் போனது. முதல் ஓவரிலேயே இரண்டு டாப் பேட்ஸ்மேன்கள் டக் அவுட்.

பொறுப்பு மொத்தமும் இப்போது சூர்யகுமார் யாதவின் தலையில். அதை உணர்ந்ததைப் போல பவர்ப்ளேயில் ரன்களை அதிகரிக்கப் போராடினார். மறுமுனையில் குட்டி ஏபிடி ப்ரெவிஸோ முகேஷின் அடுத்த ஓவரில் நடையைக் கட்டினார். களத்தில் இப்போது திலக் வர்மா. சென்னை ஏலத்தின்போது முட்டி மோதிய அதே திலக் வர்மா இப்போது சென்னைக்கு எதிராக. ஒருபக்கம் சூர்யா விறுவிறுவென ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார் திலக். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 42/3.

உத்தப்பா | MI vs CSK

மொயினுக்கு பதில் வந்த சான்ட்னரை லெக் சைடில் அடிக்க முயன்று முகேஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சூர்யா. ரன்ரேட் கட்டுக்குள் வர களத்திற்குள் இளங்கன்று ஷோகீன். ஸ்ட்ரைக் ரேட் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விக்கெட் விழாமல் இருந்தாலே போதும் என இவர்கள் நினைத்ததால் ஸ்கோர் பெரிதாக ஏறவில்லை. ஆனால் ஒரு ப்ளோவில் விக்கெட்கள் வாங்கிக்கொண்டிருந்த சென்னை பௌலர்களின் பார்மில் தேக்கம் ஏற்பட்டது. 13வது ஓவர் வரை இருவரும் தடவித் தடவி 84 ரன்களில் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

'தம்பி நான்தான் இங்க பேட்டக்காரன்' என ப்ராவோ வந்து ஷோகீனை பெவிலியன் பக்கம் திருப்பிவிட்டார். 'ஐய்யோ அந்தப் பையனை ஏண்ணே அவுட்டாக்குனீங்க?' என சென்னை ரசிகர்களே ப்ராவோவை திட்ட ஆரம்பித்தார்கள். காரணம் வந்து இறங்கியது பொல்லார்ட். மற்ற டீம்களோடு எல்லாம் பொல்லார்ட் தமிழக பா.ஜ.க போல. விழும் நாலு ஓட்டுகளில் மூன்று செல்லாத ஓட்டாகத்தான் இருக்கும். ஆனால் சென்னையோடு மட்டும் பொல்லார்ட் உ.பி பா.ஜ.க போல. அசுர மெஜாரிட்டியோடு வருவார். சென்னையுடன்தான் அவர் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார் - 171.97.

`வந்தவுடனே அடிக்காட்டி இந்த புல்லட்டு பாண்டிக்கு என்ன மருவாத' என முதல் பாலிலேயே பவுண்டரி, அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ் எனப் பறக்கவிட்டார். இன்றைய தேதியில் ஸ்டம்பிற்கு பின்னாலிருக்கும் அதிஅற்புதமான மாஸ்டர்மைண்ட் தோனி என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இரண்டு லாங் ஆன்களை பீல்ட் செட்டப்பில் நிறுத்தினார். பொதுவாகவே வெஸ்ட் இண்டீஸ்காரர்களுக்கு வீராப்பு அதிகம். அதிலும் பொல்லார்ட் எல்லாம் 'நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்' ரகம். `ஓ நீ அங்க நிறுத்துறீயா? உன் ஆளு தலைக்கு மேலேயே அடிச்சு பறக்கவிடுறேன் பார்க்குறீயா?' என அவர் வீம்பாக லாங் ஆன் பக்கமாகவே பந்தைத் தூக்க, லபக்கென பிடித்தார் தூபே. `டேபிள் பாட்டம்ல இருக்குற நிலைமைக்கு நமக்கு இதெல்லாம் தேவைதானா கோபி?' எனப் பரிதாபமாகப் புலம்பினார் ரோஹித்.

அடுத்த ஓவரில் சாம்ஸும் நடையைக் கட்ட, ஒண்டியாளாக இன்னொருபக்கம் வெள்ளையடித்துக்கொண்டிருந்தார் திலக் வர்மா. சிக்கும் பந்தில் அவர் சிக்ஸர் அடிக்கும்போதுதான். 'அட இந்தப்பக்கம் இன்னமும் ஆளு இருக்கு போலப்பா' என அவர் இருப்பதே ஞாபகம் வந்தது ரசிகர்களுக்கு. 19வது ஓவரில் அவர் அரைசதம் அடிக்க, 'வளர்ற புள்ள நீ சாதிக்கணும்னுதான்ப்பே அத்தன கேட்ச் விட்டோம்' என சென்னையின் பீல்டர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு கண்ணீர் விட்டார்கள்.

திலக் வர்மா | MI vs CSK

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் மும்பையின் தற்போதைய நம்பிக்கை, நட்சத்திர பௌலர் உனத்கட் மட்டும்தான். இந்த ஆட்டத்திலும் ஒரு அதிரடி கேமியோ அவர் ஆட, 20 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 155/7. மும்பை தொடங்கிய அழகிற்கு இது நல்ல ஸ்கோர்தான். மறுமுனையில் பழைய எஸ்.டி.டி எல்லாம் வந்துபோனதால் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார்கள் சென்னை ரசிகர்கள்.

தொடரின் இரண்டாம் பாதியில் சோபிப்பது ருத்துராஜின் ஸ்டைல். 'சாரி அதுக்கு இன்னும் ஒரு மேட்ச் இருக்கு' என்பதுபோல முதல் பந்திலேயே சல்பி கேட்ச் கொடுத்து வெளியேறினார். 1328வது முறையாக பிரஷர் மறுபடியும் மிடில் ஆர்டரின் மேல் விழுந்தது. ஒன் டவுனில் இறங்கிய சான்ட்னரும் அமெரிக்க மாப்பிள்ளை போல சின்ன கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டுக் கிளம்ப, 'இப்ப என்ன விக்கெட் போகாம ஸ்ட்ரைக் ரொட்டேட் பண்ணணும். அதானே? சி.எஸ்.கேவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து அதைமட்டும்தானே பண்ணிகிட்டு இருக்கேன்' என ஆபத்பாந்தவானாய் வந்தார் அம்பதி ராயுடு. வந்தவரை வரவேற்க பும்ரா ஒரே ஓவரில் நான்கு பவுன்சர்கள் வீச, அம்பயர்களோ கமிட்டெட் ஜோடிகளை வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்க்கும் 90ஸ் கிட்ஸ் சிங்கிள்ஸ் போல ரியாக்‌ஷனே இல்லாமல் இருந்தார்கள். 'மும்பை டீம்ல பதினோரு பேருன்னு நினைச்சோம். அம்பயரோட சேர்த்து 13 பேரா?' என அதிர்ச்சியானார்கள் சென்னை ரசிகர்கள்.

பவர்ப்ளே முடிவில் 46/2. எட்டாவது ஓவரில் ஷோகீன் வீசிய பந்தை உத்தப்பா அவரிடமே திருப்பிவிட, 'அவுட்டு அவுட்டு கேட்ச்சு' என ஏகத்துக்கும் குதித்தார் ஷோகீன். ரிவ்யூ பார்த்த தேர்ட் அம்பயர், 'தம்பி பந்து தரையிலபட்டு குதிச்சதைவிட அது அவுட்டுனு சாதிச்சு நீ அதிகமா குதிக்கிறே' எனச் செல்லமாய் குட்டு வைத்து அனுப்பினார். அந்தக் கடுப்போ என்னவோ அடுத்த பந்தை லாங் ஆன் பக்கம் ஒரு சாத்து சாத்தினார் உத்தப்பா. ஷோகீனிடமிருந்து அதன்பின் ஆட்டம் முடியும்வரை சத்தமே வரவில்லை.

உத்தப்பாவை மும்பை முகாம் நன்றாகவே அறியும். பந்து ரிலீஸான பின் அவர் பிட்ச்சில் 'படையப்பா' நடை எல்லாம் போவார் எனத் தெரிந்து அதற்கேற்றார் போல பீல்ட் செட் செய்து அவுட்டாக்கினார்கள் மும்பை வீரர்கள். லோக்கல் பாய் தூபேவின் முறை இப்போது. 'சாரி என் சொந்தமண்ணுல என் சொந்த ஸ்டேட் டீமை அடிக்கமுடியாது' என அவரும் சட்டென வெளியேற, 13 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 88/4.

மும்பை அணி | MI vs CSK

களத்தில் அனுபவசாலி அம்பதியும் கேப்டன் ஜடேஜாவும். இத்தனை நாள்களாய் காமெடி நடிகர் சாம்ஸ் போல வந்துபோய்க்கொண்டிருந்த டேனியல் சாம்ஸ் இன்று 'உள்ளம் கேட்குமே', 'லேசா லேசா' சாம் போல ஹிட் மேல் ஹிட் அடித்துக்கொண்டிருந்தார். கெயிக்வாட், சான்ட்னர், தூபே என வரிசையாகக் காவு வாங்கியவர் கடைசியாய் ராயுடுவுக்கு குறிவைக்க, சூழ்ச்சிக்குப் பலியானார் ராயுடு.

'ஸ்பின் பௌலிங் போடணும், லாங்ல பீல்டிங்கும் செமையா பண்ணணும், கேப்டன்ஷிப்பைக் கவனிக்கணும், இதுக்கு நடுவுல பினிஷர் ரோலும் பண்ணணும்னா எப்படிப்பா?' எனக் கேட்டபடியே வந்து கேள்வி முடிவதற்குள் வெளியேறினார் ஜடேஜா. களத்தில் இப்போது தோனியும் ப்ரிட்டோரியஸும். சக தென்னாப்பிரிக்க சி.எஸ்.கே வீரர் ஆல்பி மார்கெல்லைப் போலவே உருமாறும் வாய்ப்பிருக்கும் ப்ரிட்டோரியஸ் கேமின் கியரை மாற்றி சடசடவென ரன்களை ஏற்றினார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். இப்போது 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை.

பும்ரா வீசிய 19வது ஓவரில் காத்திருந்தது போல ஸ்கூப் அடித்து ரன்கள் சேர்த்தார் ப்ரிட்டோரியஸ். அந்த ஓவரில் 11 ரன்கள். வெற்றிக்கு இப்போது தேவை 17 ரன்கள். கடைசி ஓவரின் முதல் பாலிலேயே பந்தைக் கணிக்கத் தவறி ப்ரிட்டோரியஸ் எல்.பி.டபிள்யூ ஆக, மைதானத்தில் கனத்த அமைதி. ப்ராவோ சிங்கிள் தட்டிய புண்ணியத்தில் தோனி இப்போது க்ரீஸில். நான்கு பந்துகளில் 16 ரன்கள்.

ப்ரிட்டோரியஸ் | MI vs CSK
கேமரா கூட்டத்தைக் காட்டுகிறது. பந்து பிடிப்பதை தன் வலது கையால் மறைக்கும் உனத்கட்டைக் காட்டுகிறது. டென்ஷனாய் தொப்பியைக் கழற்றி மாட்டும் ரோஹித்தைக் காட்டுகிறது. இறுதியாய் க்ளவுஸ்ஸை சடசடவென லூஸ் செய்துவிட்டு மாட்டிக்கொள்ளும் ட்ரேட்மார்க் தோனி. `கே.ஜி.எப் - 2' பாணியில் பாஸ்ட் கட்களாக இவற்றை திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். கறுப்பு ஸ்க்ரீன் இப்போது.

"Powerful people make the places powerful'' என நிழல்கள் ரவியின் வாய்ஸ் ஓவர் ஒலிக்க அடுத்த பால், சிக்ஸரை நோக்கிப் பறக்கிறது. சத்தமே இல்லாமலிருந்த மைதானம் இப்போது மந்திரமாய் ஒற்றைப் பெயரை உச்சரிக்கிறது. 'தோனீ...'. அடுத்த பந்து ஸ்லோ பவுன்சர். டாப் எட்ஜில் பட்டும் மீண்டும் ஒரு பவுண்டரி. அடுத்த பந்தை மிட்விக்கெட் திசையில் தட்டிவிட்டு மின்னலாய் இரண்டு ரன்கள். தேவை ஒரு பந்தில் நான்கு ரன்கள். பீல்ட் செட்டப் மாற்றப்படுகிறது. சில அவசர ஆலோசனைகள் கேப்டனுக்கும் கீப்பருக்கும் பௌலருக்கும் இடையே... கூட்டம் பல்லைக் கடித்தபடி இருக்க... கட்.

`உனக்குப் பின்னாடி ஆயிரம் பேர் இருக்காங்கங்கிற தைரியம் உனக்கு இருந்தா உன்னால ஒரு மேட்ச்சுலதான் ஜெயிக்க முடியும். அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்கங்கிற தைரியம் இருந்துச்சுன்னா உலகத்தையே ஜெயிக்கலாம்.'
தோனி | MI vs CSK

லெக் ஸ்டம்ப் லைனில் உனத்கட் வீசிய பந்தை ஷார்ட் பைன் லெக் பக்கம் தோனி திருப்ப... 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டிராவிட் ஒற்றைக்காலைத் தூக்கி அடித்த அதே ஷாட். 2011 உலகக்கோப்பையில் மலிங்கா வீசிய பந்தை இதே தோனி அடித்த அதே ஷாட். மாஸாக பவுண்டரியை முத்தமிட்டது பந்து.

இது தோனியின் `கே.ஜி.எப் - 2 சீசன்'. மொத்தக் கூட்டமும் 'சலாம் தோனி பாய்' என சிலிர்த்துப் போய் வணக்கம் வைத்தது. வின்டேஜ் தோனி. பினிஷர் தோனி. `தலைவன் இருக்கிறான்' என்கிற நம்பிக்கையை கிரவுண்டின் கடைசி ஆள் வரை பல்லாண்டுகளாக விதைத்துக்கொண்டிருக்கும் அதே தோனி! கேப்டனாய் இல்லாவிட்டாலும் தன் இருப்பின் வழியே அணியை வழிநடத்தும் லீடர் தோனி! மேலே இருக்கும் அந்த வசனம் இவருக்குத்தான் பக்காவாய் பொருந்தும்.

ஒவ்வொரு மேட்ச்சையும் ஜெயித்தாகவேண்டிய நிலையில் இது முக்கியமான இரண்டு புள்ளிகள் சென்னைக்கு. ஆனால் அதேசமயம் பொல்லார்ட்டுக்கு பீல்ட் செட்டப் செய்ததிலிருந்து ப்ரிட்டோரியஸ் அடித்த ஸ்கூப் ஷாட் வரை சகலவற்றிலும் தோனியின் தலையீடே இருக்கிறது. எதிர்காலம் என்னவென்றே தெரிந்திடாத அ.தி.மு.கவுக்கு வேண்டுமானால் இரட்டைத் தலைமை சரிப்படலாம். ஆனால் அடுத்த பத்தாண்டுகளை தீர்மானிக்க வேண்டிய இடத்திலிருக்கும் சி.எஸ்.கேவுக்கு நிச்சயம் இரட்டைத்தலைமை சரிப்படாது. தோனி இனி நிரூபிக்க ஒன்றுமில்லை. ஜடேஜா தன் பொறுப்பையுணர்ந்து மேலேறி வந்தால் மட்டுமே உண்டு. முகேஷ் சௌத்ரிக்குக் கிடைத்த ஆட்டநாயகன் விருது பல டன் மதிப்பிலான சத்துமாவு.

தோனி | MI vs CSK

மறுமுனையில் ஏலத்தின்போதான அலட்சியத்திற்கு இப்போது விலைகொடுத்துக்கொண்டிருக்கிறது மும்பை. கோர் வீரர்களைத் தக்கவைக்க பெரிதாக முயற்சி செய்யாதது, இந்திய பௌலர்களை நம்பி எடுக்காதது, பலகோடி கொடுத்து எடுத்த வீரர்களை வெளியே உட்கார வைத்திருப்பது, அத்தனைக்கும் மேலாக ரோஹித்தின் பார்ம் எனக் கிட்டத்தட்ட இந்த சீசனில் மும்பைக்கு முடிவுரை எழுதப்பட்டாகிவிட்டது.

ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக முதல் ஏழு போட்டிகளையும் தோற்ற முதல் அணி என்கிற சாதனையை ஏற்கெனவே படைத்துவிட்ட நிலையில் இது இன்னமும் மோசமான சாதனையாக மாறப்போகிறதா இல்லை ஓரளவிற்கு வெற்றிகரமான தோல்வியா என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க MI vs CSK: சலாம் தோனி பாய்! கேப்டனாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் பினிஷராக, லீடராகத் தொடரும் ஆதிக்கம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top