கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே உள்ள பழைய டிக்கெட் கவுன்டர் எனும் பகுதியில் சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றித் திரிந்துள்ளது. அதில் கர்பமுற்று இருந்த பெண் யானை ஒன்று பிரசவ வலியால் துடித்த நிலையில் பிரசவத்திற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அந்த யானை பிரசவத்திற்கு வசமாக இருக்கும் இடத்தைத் தேடி அருகே இருந்த நீர் நிலையை நோக்கி நகர்ந்து சென்றது. அங்கு நீண்ட நேரமாகப் போராடி குட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அழகான இரட்டைக் குட்டிகளை ஈன்றது அந்தப் பெண் யானை.
தாய் யானையின் அரவணைப்பில் இரண்டு குட்டி யானைகள் அழகாக நீந்தி விளையாடி அதைச் சுற்றி சுற்றி நடந்து வரும் காட்சிகள் வெளியாகி காண்போரை நெகிழச்செய்து வருகிறது. இது போல் இரட்டை யானைக் குட்டிகள் ஒரே பிரசவத்தில் பிறப்பது அரிதான நிகழ்வாகும். இதற்கு முன் 1971-ல் இதே போல் முதுமலையில் தேவகி என்ற யானை விஜய், சுஜய் என்ற இரட்டை யானைகளை ஈன்றது. அதற்குப் பின் இரண்டாவது முறையாக தற்போது இது நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது பற்றிக் கூறிய வனப்பகுதியின் இயக்குeர் ரமேஷ் குமார் (BTR Director), "இந்தச் செய்தி பரவியதும், சுற்றுலாப் பயணிகள் செல்போன்கள் மற்றும் கேமராக்களுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தொடங்கினர். பின்னர் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் பிரசவ வலியில் இருந்த யானை தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் திணறியது. தண்ணீரில் இரண்டு சிறிய தலைகள் மிதப்பதை அனைவரும் பார்க்க முடிந்தது. தாய் யானை மற்றும் அதன் இரண்டு குட்டிகள் தண்ணீரிலிருந்து வெளியே வராததால் நீரில் மூழ்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், அங்கிருந்த கூட்டத்தை அகற்றி, அப்பகுதியில் காவல் செய்தோம். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, பாதுகாப்பாக உணர்ந்த தாய் யானை, நீர்நிலையிலிருந்து வெளிப்பட்டு, தன் குட்டிகளை வெளியேற்ற உதவியது. பிறந்த உடனேயே, மூவரும் தங்கள் மந்தைக்குத் திரும்பினர். நாங்கள் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை மற்றும் புதிதாகப் பிறந்த குட்டி யானைகளுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என்பதால் நாங்கள் அவர்களைக் கண்காணிக்கவில்லை" என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை; பந்திப்பூரில் நிகழ்ந்திருக்கும் அதிசயம்! |Video