யூரோ டூர் 38: அமைச்சர்களுக்கும் பொதுப் போக்குவரத்து; ஊழல், திருட்டு இல்லாத அற்புத தேசம் டென்மார்க்!

0

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த உலக வல்லரசுகள் போட்டியிலிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும், ஸ்காண்டிநேவிய நாடுகள் உலகளவில் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுவிடுகின்றன. Gallup World Poll-இன் வாழ்க்கை மதிப்பீடுகளின் அடிப்படையில் உலக மகிழ்ச்சி அறிக்கை தரவரிசையின்படி, தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக, உலகின் மகிழ்ச்சியான நாடாகப் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் அண்டை நாடுகளான டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. ஸ்காண்டிநேவிய நாடுகளுக்குச் செல்வது என்பது, அரிய பொக்கிஷமான, பாதுகாக்கப்பட்ட சூழலைக் கொண்ட ஓர் அழகிய உலகத்தை ஆராய்வதற்கான வாய்ப்பை பெறுவதற்குச் சமமானது என்கிறார்கள்.

இவ்வார யூரோ டூரில் டென்மார்க்கை சுற்றி ஒரு சின்ன ரவுண்ட் அப்...
ஸ்காண்டிநேவிய நாடுகள்

டென்மார்க்

உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பெறுவதற்குத் தொடர்ந்து போராடி வரும் ஓர் அற்புத தேசம் டென்மார்க். ஒரு நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால் அந்த நாட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகள், பாதுகாப்பு என அத்தனை துறைகளும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும். இவை மிகச்சிறப்பாக அமைய அந்த நாட்டின் அரசு நேர்மையான, பொது நலன் மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு நல்லாட்சியை வழங்க வேண்டும். அரசு சிறப்பாக இயங்க அதன் ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அனைத்து அம்சங்களும் முறையாகப் பொருந்திய ஐரோப்பாவின் சொர்க்க புரி, டென்மார்க்.

ஐரோப்பாவின் பழைமையான மாநிலங்களில் ஒன்றாகவும், உலகின் பழைமையான ராஜ்ஜியமாகவும், வரலாற்றுப் பெருமை பெரும் டென்மார்க் கி.பி 900-ன் முற்பகுதியிலிருந்து வந்த வைகிங் இனத்தினால் ஆரம்பக் காலங்களில் உலகப் புகழ் பெறத் தொடங்கியது.

ஐரோப்பிய வரலாற்றில் டென்மார்க்கின் கதை வைக்கிங் யுகத்துடன் கி.பி 800-ல் தொடங்கியது. டேனிஷ் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டங்களில் ஒன்று வைக்கிங்ஸின் காலகட்டம். வைக்கிங் யுகம் சுமார் 250 ஆண்டுகள் நீடித்தது. ஒரு கட்டத்தில், டேனிஷ் வைக்கிங் ஸ்வீன் ஃபோர்க்பியர்ட் (Svend Tveskæg) மற்றும் அவரது மகன் Canute the Great (Knud den Store) டென்மார்க் மட்டுமின்றி நார்வே, தெற்கு ஸ்வீடன், கிரீன்லாந்து, பரோயே தீவுகள், ஷெட்லேண்ட், ஓர்க்னி மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் மன்னர்களாக இருந்துள்ளனர். சிறந்த கப்பல் கட்டுபவர்களாகவும், மாலுமிகளாகவும் கூட டேனிஷ் வைக்கிங்ஸ் இருந்துள்ளனர்.

முதல் உலகப் போருக்குப் பிறகு, டேனிஷ் பொருளாதாரம் மெல்ல மெல்லச் செழிக்கத் தொடங்கியது. கூட்டுறவு விவசாயிகள் இயக்கத்தின் உதவியுடன், தானிய சாகுபடியிலிருந்து கால்நடை வளர்ப்பு வரை பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. தொழில் மயமாக்கல் மற்றும் பால் உற்பத்தியும் துரிதப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் நடுநிலை வகித்த டென்மார்க், ஏப்ரல் 9, 1940-ல் ஜெர்மன் துருப்புக்களால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த டென்மார்க்
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய டேனிஷ் பொருளாதாரம் சர்வதேச ஏற்றுமதியின் அதிகரிப்புடன் செழிப்புறத் தொடங்கியது. 1973-ல், டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. அதேபோல ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும், நேட்டோ ராணுவக் கூட்டணியில் உறுப்பினராகவும் உள்ளது. இன்று, டென்மார்க் ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகத்தால் ஆளப்படும் அரசியலமைப்பாக உள்ளது. ஆனாலும் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பழைமையான முடியாட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் அரசாட்சி இன்றும் டென்மார்க்கில் தொடர்கிறது.

பல தசாப்தங்களாக மனித உரிமைகள் மற்றும் வறுமை ஒழிப்புக்கான உலகளாவிய போராட்டத்திலும், பல வளரும் நாடுகளில் கல்வியை மேம்படுத்த உதவுவதிலும் கணிசமான பங்கிற்குத் தன்னை அர்ப்பணித்துள்ள டென்மார்க், தனது மொத்த தேசிய வருமானத்தில் குறைந்தபட்சம் 0.7%-ஐ வறுமையில் வாடும் நாடுகளின் அபிவிருத்தி உதவிக்காக வழங்குகிறது. வளர்ச்சி உதவிக்காக GNI-யில் 0.7 சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் இலக்கைக் கடந்த 40 ஆண்டுகளாக டென்மார்க் நிறைவேற்றி வருகிறது. உலகில் சில நாடுகள் மட்டுமே இந்த இலக்கை அடைகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் மொழிக் குழுவின் கிளையைச் சேர்ந்த டேனிஷ் மொழி பிற ஸ்காண்டிநேவிய மொழிகளுடன் வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற டேனிஷ் எழுத்தாளர்களில் ஒருவரான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் 'Fairy Tales', பைபிளுக்கு அடுத்த படியாக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் ஷிப்பிங் கம்பெனியான Maersk Group, உலகின் மிகச்சிறந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனமான Novo Nordisk, உலகப் பிரசித்தி பெற்ற முதல் தரமான பீர் உற்பத்தி நிறுவனமான Carlsberg Group என டென்மார்க்கை சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனங்களின் பட்டியல் நீள்கிறது.

டென்மார்க்கின் நிலப்பரப்பு மிகவும் தட்டையானது. அதனால் இங்கு மலைகளையோ நீர்வீழ்ச்சிகளையோ காண முடியாது. மாறாக எங்குத் திரும்பினாலும் பசுமையான புல்வெளிகளும், மலர் வனங்களும் உங்களை வரவேற்கும். சுற்றி நீரால் சூழப்பட்ட தீவான டென்மார்க்கில் நீங்கள் எந்த இடம் சென்றாலும் கடலிலிருந்து 52 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க மாட்டீர்கள்!
டென்மார்க்

மிகவும் சுத்தமான நாடான டென்மார்க்கில் எந்த நீர்க்குழாயில் இருந்தும் நீங்கள் தண்ணீர் அருந்தலாம் எனும் அளவுக்கு நீர் மட்டுமல்ல, காற்று, மண், நிலம் என எல்லாமே மிகவும் தூய்மையானது. சுற்றுச் சூழலில் அதிக அக்கறை உள்ள டேனிஷ் மக்கள் பெருமளவு பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். பெரிய நிறுவனங்களின் CEO முதல் நாட்டின் அமைச்சர்கள் வரை பெரும்பாலும் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். அதே போலச் சைக்கிள் கலாசாரம் மிகவும் பிரபலம். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு என்றே எல்லா வீதிகளிலும் பிரத்யேகமான பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்லும் போது சைக்கிளில் செல்பவரோடு ஏதேனும் ஒரு விபத்து நிகழ்ந்தால் குற்றம் உங்கள் மீதே சுமத்தப்படும். அந்த அளவுக்குச் சைக்கிள் போக்குவரத்துக்கு அரசு முன்னுரிமை அளிக்கின்றது.

அறிவியலை விரும்புவோருக்குத் தெரியும், டானிஷின் கண்டுபிடிப்பு லெகோவோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று. இன்சுலின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்த மருத்துவ ஆராய்ச்சிக்கு டென்மார்க் முக்கிய பங்கு வகித்தது. அதேபோல 'Wind Mill' எனப்படும் காற்றாலை ஆற்றல் துறையின் கண்டுபிடிப்புகளும் டேனிஷ் மக்களையே சாரும். அது மட்டுமல்ல Google Maps-ன் ஆரம்ப வரைபடம் இரண்டு டேனிஷ் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. ஒலிபெருக்கி மற்றும் புளூடூத் கண்டுபிடிப்புக்கும் டென்மார்க்கே உரிமை கோருகிறது.

உலகின் உயர்ந்த கல்வி விகிதத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் EU/EEA மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, EU சட்டத்தின்படி, டென்மார்க் குடிமக்களைப் போலவே இலவச உயர்கல்வியை பெரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனாலேயே பல யூரோப்பியன் மாணவர்கள் தங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டென்மார்க்கைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

உலகின் மிகச் சிறந்த சுகாதார சேவைக்குப் பெயர்போன மிகச்சில நாடுகளில் டென்மார்க்கும் குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவப் பராமரிப்பிலும் டென்மார்க் முன்னணியில் உள்ளது. டென்மார்க்கில் உள்ள அனைத்து குடிமக்களும் சமமான மற்றும் இலவச சுகாதார சேவைகளை அனுபவிக்கின்றனர். சுகாதாரப் பாதுகாப்புக்கு, மக்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாய் நிதியளிக்கிறது. வளர்ந்த அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை விட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு டென்மார்க்கில் மிகவும் திறம்பட இயங்குகிறது.

டென்மார்க்

நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் டென்மார்க் சமூகத்தில் CCTV கேமராக்கள் அபூர்வமாகவே காணப்படுகின்றன. நகரத்தின் முக்கிய பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் காவல் நிலையங்கள் மாலை 4 மணிக்கே மூடப்படுகின்றன. Corruption Perceptions Index-இன் கணக்கெடுப்பின் படி உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் டென்மார்க் முதலிடம் பெறுகின்றது. இங்கே லஞ்சம், களவு, ஊழல், கொள்ளை போன்ற வார்த்தைகளுக்கே இடமில்லை.

உலகில் Work-Life பேலன்ஸுக்கு முக்கியத்தவம் கொடுக்கும் மிக மிகச் சொற்பமான நாடுகளுள் டென்மார்க் முதலிடம் பெறுகின்றது. இங்கே வேலையை விட குடும்பத்துக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. வாரம் 37 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் டேனிஷ் மக்கள், சனி ஞாயிறுகளில் விடுமுறையைக் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணுகிறார்கள்.

மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டென்மார்க் சமீபத்தைய உக்ரைன் அகதிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. டேனிஷ் மக்கள் இவர்களுக்கு தங்கள் வீடுகளிலேயே அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதே போலப் பாடசாலைகளும் உக்ரைனிலிருந்து வந்த குழந்தைகளுக்குக் கல்வி வசதியை உடனடியாகச் செய்து கொடுத்துள்ளது. உக்ரைன் அகதிகளைக் குடியமர்த்தும் ஓர் அவசர கட்டுமான புராஜெக்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பக் கட்டமாக 380 வீடுகளை நிர்மாணித்து வருகிறது டேனிஷ் அரசு.

டென்மார்க்

6 மில்லியனுக்கும் குறைவான குடிமக்களைக் கொண்ட டென்மார்க் அதன் நிலையான வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான சட்டங்களின் மூலம் உலக அரங்கில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

யூரோ டூரில் இதுவரை பார்த்த ஸ்காண்டிநேவிய நாடுகள் ஐரோப்பா எனும் கோபுரத்தின் பெருமையைச் சர்வதேச அரங்கில் தாங்கி நிற்கும் தூண்கள் என்றால் அதன் உச்சாணிக் கலசம் பின்லாந்து. கல்வி, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு என எல்லா துறைகளிலும் தன்னை முதல் இடத்தில் வைத்திருக்கும் ஐரோப்பாவின் பிரமிப்பான பெருமை பின்லாந்து, அடுத்த வார யூரோ டூரில்...

யூரோ டூர் போலாமா?!


மேலும் படிக்க யூரோ டூர் 38: அமைச்சர்களுக்கும் பொதுப் போக்குவரத்து; ஊழல், திருட்டு இல்லாத அற்புத தேசம் டென்மார்க்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top