என்னுடைய சகோதரிக்கு 42 வயதாகிறது. அதற்குள் மெனோபாஸ் வந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் மெனோபாஸ் வருமா? அதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்
ஒரு பெண் குழந்தை, தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போதே, அந்தக் குழந்தையின் சினைப்பையில் இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும். லட்சக்கணக்கில் இருந்த அந்த முட்டைகள், அந்தக் குழந்தை வயதுக்கு வரும்போது மாதவிலக்கு மூலமாக மாதாமாதம் வெளியேறி குறைந்துகொண்டே வரும். பிரசவத்தின்போது இன்னும் குறையும். இப்படி குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முட்டைகளே இல்லாமல் போகும்போது மாதவிலக்கு வருவது நிற்கும். அதையே மெனோபாஸ் என்று சொல்கிறோம்.

சிலருக்கு சராசரியைவிட சீக்கிரமே, அதாவது 40 வயதுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை, புற்றுநோய்க்காக எடுத்துக்கொள்கிற கீமோதெரபியின் விளைவு என இளவயது மெனோபாஸுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இவை தவிர 'ப்ரீ மெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்' என்ற பிரச்னை காரணமாகவும் சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பையில் சுரக்கும் ஹார்மோனுக்கு மூளையிலிருந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயதில்கூட மெனோபாஸ் வரலாம்.
மாதவிலக்கு சுழற்சி சரியாக இருப்பவர்களுக்கு (20 முதல் 25 நாள்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் வருபவர்களுக்கு மாதவிலக்கு மூலமாக இழக்கப்படும் முட்டைகள் மெதுவாகக் குறைவதால், மெனோபாஸும் சற்று தாமதமாகலாம். இளவயதில் மாதவிலக்கு நிற்கும்போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இல்லாமல், எலும்புகள் பாதிக்கப்படலாம். உணவு மூலமாக கிடைக்கும் கால்சியம் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதால் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

கால்சியம் குறைந்தால் எலும்புகள் பஞ்சு போலாகும் `ஆஸ்டியோபோரோசிஸ்' பாதிப்பு வரலாம். மெனோபாஸுக்கு பிறகு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதால் அதற்கான பரிசோதனையும் அவசியம். இளவயது மெனோபாஸை ஏதோ முறை தவறிய மாதவிலக்கு என தவறாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் எடுப்பது அவசியம்.
மேலும் படிக்க Doctor Vikatan: 40 + வயதிலேயே மெனோபாஸ்; பிரச்னைகளை ஏற்படுத்துமா?