தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மான்டிசோரி கல்வி முறையில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் அ.தி.மு.க ஆட்சியில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. அதன்படி 3-4 வயதுள்ள குழந்தைகள் எல்.கே.ஜி, 4-5 வயதுடையவர்கள் யு.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டது. இந்த மழலையர் வகுப்புகளுக்குப் பாடம் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளியில் உபரியாக இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர்.

தனியார்ப் பள்ளிகளில் பணத்தைக் கொட்டி, தங்களின் பிள்ளைகளின் அடிப்படை கல்வியை வளர்க்கப் பெற்றோர்கள் போராடி வந்தநிலையில், அரசு மழலையர் பள்ளி பெரும் வரவேற்பு பெற்றது.
அதன்படி, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தனர். மழலையர் பள்ளி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சேர்ந்தனர். இதனையடுத்து, 2-ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கும் தருவாயில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சேர்க்கை காரணமாக அது நிறுத்தப்பட்டது. மேலும், தொடர்ந்து 2 ஆண்டுகள் மழலையர் வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது.

இதனால், ஏராளமான பெற்றோர் மீண்டும் மழலையர் பள்ளி எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்..
``ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையுடன் இணைந்து 3 ஆண்டு பரிசோதனை முயற்சியில் மழலையர் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனாவால் மழலையர் வகுப்புகள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மறுபுறம் கொரோனா காரணத்தினாலேயே அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. இதன்காரணமாக, பள்ளிக்கல்விக்கே ஆசிரியர்கள், கட்டடங்கள் தேவை அதிகரித்தது. இதனால், மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மழலையர் வகுப்புக்குத் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண்டும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையங்கள் மூலமாக நடத்தப்படும்" என்றனர்.

அரசுப்பள்ளி சேர்க்கையை அதிகரிக்கவே மழலையர் வகுப்புகள் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதற்கு வேண்டிய ஆசிரியர்கள், இடவசதி, பாடத்திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களை பள்ளிக்கல்வித்துறை கவனித்தது. சேர்க்கை பெறும் குழந்தைகளுக்குச் சீருடை, கல்வி உபகரணங்கள் ஆகியவற்றுக்கான நிதியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை வழங்கி வந்தது. ஆசிரியர்களை மட்டும் பள்ளிக்கல்வித்துறை வழங்கியது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மழலையர் பள்ளிகளுக்கு இனி ஆசிரியர்கள் கிடையாது. ஆசிரியர்கள் இல்லையென்றால் அது வெறும் அங்கன்வாடிதானே தவிர, மழலையர் பள்ளி இல்லை என்பது தெளிவாகிறது.
இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த திட்டத்துக்குப் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், மழலையர் வகுப்புகளின் எண்ணிக்கையை உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால், மழலையர் வகுப்புக்கு பணியிடம் மாற்றப்பட்ட ஆசிரியர்களும், கண்காணிப்பு பொறுப்பிலிருந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. தற்போது ஆசிரியர்களும் திரும்ப பெற்றுக் கொண்டது. பள்ளிக்கல்வித்துறையை நம்பி இருந்தால், எங்களின் பணியான அடிப்படை கல்வி திட்டத்தை அங்கன்வாடியில் செயல்படுத்த முடியாது. எனவே, பழைய நடைமுறையின் படி அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளைப் பராமரித்து பாடங்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர் ஆதங்கத்துடன்..

தமிழ்நாட்டில் தனியார்ப் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட மழலையர் பள்ளி திட்டம், தனியார் நர்சரி பள்ளிகளுக்குக் கடிவாளம் போட்டது. 2 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தமிழகம் முழுவதும் செயல்படுத்தினால், பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கொரோனா பரவலால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை நடத்தவே இல்லை. ஆனால், சேர்க்கை குறைவாக இருப்பதாகவும், பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுவதும் அப்பட்டமான அரசியல் தவிர வேறு எதுவுமில்லை. மழலையர்களுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கிடைக்கும் கல்வி, இலவசமாகக் கிடைப்பதை எந்த பெற்றோர் வேண்டாம் என்பார்கள். எனவே, மழலையர் பள்ளியைச் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை ஆவணம் செய்யவேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது..
இந்த நடவடிக்கை காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரியும் சூழல் உருவாகியுள்ளது..
மேலும் படிக்க 2,381 அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் - ஆசிரியர்களை திரும்பப் பெற்ற பள்ளிக்கல்வித்துறை?!