கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்து இருக்கும் கீழ் அருங்குணம் - குச்சிப்பாளையம் பகுதியை கடந்து செல்கிறது கெடிலம் ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது பரவலாக கோடைமழை பெய்து வருவதால் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

அந்த தடுப்பணையை சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் அந்த தண்ணீரில் குளிப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, சிறுமிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷினி, நவி ஆகியோர் அந்த தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனர். தடுப்பணையில் இறங்கி, அவர்கள் தண்ணீரில் சிறிது தூரம் சென்றபோது ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று உயிர்பயத்தில் அவர்கள் கூச்சலிட்டதை கேட்டு, அங்கு ஓடி வந்த கிராம மக்கள் தடுப்பணையில் மூழ்கிய 7 பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 7 பேரும் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க கடலூர்: 6 சிறுமிகள் உட்பட 7 பேர் தடுப்பணையில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்