இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த செய்த தகவல் அவர் அரசியலுக்குல் வருவாரா? என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "1992-ல் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடங்கி 2022 வரை 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது முதல், கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்துள்ளது.

மிக முக்கியமாக, உங்கள் அனைவரின் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளது. மேலும், எனது பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து, எனக்கு ஆதரவாக இருந்த, நான் இன்று இருக்கும் நிலையை அடைய உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று, பலருக்கு உதவும் என்று நான் நினைக்கும் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். என் வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தில் நான் நுழையும்போது உங்கள் ஆதரவை நீங்கள் தொடருவீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்குப் பின் சவுரவ் கங்குலி அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. அவர் உண்மையில் தனது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்கத் திட்டமிட்டால், அது எந்த அரசியல் கட்சியாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் சவுரவ் கங்குலி இன்னும் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என மக்களின் எதிர்பார்ப்பிற்கான காரணம், கடந்த மாதம் மே 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெற்கு கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் இல்லத்தில் உணவருந்தியதுதான். அமித் ஷா சந்திப்புக்கு பின்பே கங்குலி இந்த பதிவை பதிவிட்டுள்ளார். ஆனால், அப்போது அமித் ஷா வந்தது தொடர்பாக கங்குலி செய்தியாளர்களிடம்," அமித் ஷா வருகைக்க்கு பின்னால் நிறைய யூகங்கள் இருந்தாலும், அமித் ஷாவை 2008 முதல் எனக்குத் தெரியும். நான் விளையாடும்போது, நான் அவரை சந்திப்பது வழக்கம். எனக்கு நீண்ட காலமாக அவரைத் தெரியும் என்பதால் இரவு விருந்து அளித்தோம்" என்று கூறியிருந்தார். மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கங்குலியை பாஜாக-வில் கொண்டு வர முயற்சிகள் நடந்ததாக சொல்லப்பட்டதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க கங்குலி அரசியல் பிரவேசமா..? - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ட்வீட்