முகமது நபிகள் குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் தெரிவித்த சர்ச்சைக் கருத்துகளை விமர்சித்ததற்காக தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார் அசாதுதீன் ஒவைசி. இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"என் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ரை பெற்றுக்கொண்டேன். என்ன குற்றத்துக்கான வழக்கு என்பதைக் குறிப்பிடாமல் நான் பார்த்த முதல் எஃப்.ஐ.ஆர் இது தான்.
நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் போன்றோருக்கு எதிராக வழக்குகளைத் தொடர டெல்லி காவல்துறைக்குத் தைரியம் இல்லை என்று தோன்றுகிறது. வெளிப்படையாக ஒரு தரப்பினர் முகமது நபியை அவமதித்துள்ளனர், மற்றொரு பக்கம் பா.ஜ.க ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக எதிர்த்தரப்பிலும் வெறுப்புப் பேச்சு இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்குச் சர்வதேச கண்டனங்களுக்குப் பிறகு சமாதான நடவடிக்கையாக பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கோபப்படும் பா.ஜ.க ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்த முஸ்லிம் மாணவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது வெறும் முஸ்லீம் என்பதற்காக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவா அமைப்புகள் வெறுக்கத்தக்கப் பேச்சுகள் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கலாசாரத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு வெகுமதியாகப் பதவி கிடைக்கும் எனப் போதிக்கப்பட்டுள்ளனர்.
1. I’ve received an excerpt of the FIR. This is the first FIR I’ve seen that’s not specifying what the crime is. Imagine an FIR about a murder where cops don’t mention the weapon or that the victim bled to death. I don’t know which specific remarks of mine have attracted the FIR pic.twitter.com/0RJW1z71aN
— Asaduddin Owaisi (@asadowaisi) June 9, 2022
அதற்கு உதாரணம் யோகி-யின் வெறுப்பு பேச்சுக்கு லோக்சபா இடங்கள் மற்றும் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுகளுக்கும் இதேபோல் வெகுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் என்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி என்னைக் கொலை செய்ய முயன்றவர்கள் கூட தாங்கள் முக்கிய இந்துத்துவா அரசியல்வாதிகளாக மாற வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இந்த கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும். பிரதமர் மோடி நேர்மையாக இருந்திருந்தால் வெறுப்புப் பேச்சுகளை ஒழித்திருப்பார். எனக்கு எதிரான எப்.ஐ.ஆர் தொடர்பாக எங்கள் வழக்கறிஞர்களைக் கலந்தாலோசித்து வருகிறோம். இந்த தந்திரங்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். வெறுப்பு பேச்சுகளைப் பேசுபவர்களை விமர்சிப்பதும், வெறுப்பூட்டும் பேச்சுக்களைப் பேசுவதும் சமமாக முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க ``என்ன குற்றத்துக்கான வழக்கு என்பதைக் குறிப்பிடாமல் நான் பார்த்த முதல் எஃப்.ஐ.ஆர்"- அசாதுதீன் ஒவைசி