மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான ‘அக்னிபத்’-ஐ அறிமுகப்படுத்தினார். அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பணி நிரந்தரமும், எந்தவித ஓய்வூதியப் பலன்களும் இல்லாமல் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென் மாநிலங்களை பொறுத்தவரை, தெலங்கானாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறி வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்து இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இப்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து, சென்னை ராணுவ பயிற்சி பள்ளியின் இயக்குநர் சுரேந்தர், “அக்னிபத் என்பது ஒரு ஸ்கீம். இதை முழுமையாக மாற்ற போகிறார்கள், இனிமேல் இது தான் தொடருமா என்று சண்டை போடுகிறார்கள். ஆனால், இத்திட்டம் குறித்து எழுத்துப்பூர்வமக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இளைஞர்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணம் இதில் அறிவித்திருக்கும் வயது. ஏனென்றால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிதாக ஆள் எடுக்கவில்லை. இப்போது அவர்களது வயது தகுதி இல்லாமல் போனதால், இதற்காக காத்திருந்த கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 100 பேர் எடுப்பதில், சிறந்த 25 பேரை மட்டும் மீண்டும் நான்கு ஆண்டுக்கு பிறகு பணிக்கு எடுக்கும் போது சிறந்த பணியாட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதே போல் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்து வெளியே வரும் போது ஒழுக்கமுள்ள இளைஞர்களாக இந்த சமூகத்தில் இருப்பார்கள். ராணுவ செலவை குறைத்து அரசுக்கு லாபம் வரும் என்று இதை செய்திருந்தாலும், அரசு வேலை என்று நம்பி இருக்கும் இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். சில மாநிலங்களில் இந்த வேலையை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அரசாங்க வேலையில் முன்னுரிமை கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்களே தவிர, அந்த வேலை எந்த துறையில் என்பதற்கான தெளிவு இல்லை. இந்த திட்டம் வரவேற்க தகுந்ததாக இருந்தாலும், தெளிவில்லாமல் இருப்பது மேலும் குழப்பங்களை ஏற்படுத்தி, பிரச்னைகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்கிறார்.
“ராணுவ ரீதியாக பயிற்சி எடுக்கும் நபர் அந்த பயிற்சிக்கு பிறகு வெளியே வருவது என்பது மீண்டும் அதே மனநிலையிலேயும், ராணுவ உணர்வோடும் தான் இருப்பார்கள். அவர்களால் சமூகத்தில் சும்மா இருக்க முடியாது. சாதரணமாக காவல்துறையில் இருப்பவர்கள் அதிகாரத்தோடு இருப்பது போல், அந்த பயிற்சியும், வலிமையும் சாதாரண எளிய மக்களிடம் புரயோகிக்கப்படும். உளவியல் ரீதியாகவே அதற்குதான் தயாராகி இருப்பாரகள்” என்கிற சமூக செயல்பாட்டாளர் மலரவன், மேலும் தொடர்ந்தார்.

“இந்த திட்டம் ராணுவ செலவினங்களை குறைப்பதற்காகவும், கார்கில் போரில் இளைஞர்களின் பங்களிப்பு தான் சிறப்பாக இருந்தது, அதனால் தான் இளைஞர்களை கொண்டு வருகிறோம் என்கிறார்கள். ராணுவத்தில் முழு நேரமாக இருப்பது என்பதுதான் ஒரு நிலையான ராணுவ அமைப்புக்கு சரியாக இருக்கும். நான்கு வருட பயிற்சிக்கு பிறகு தான் 25 சதவீதத்தினை எடுத்து கொண்டு மீதி 75 சதவீதத்தினருக்கு இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம். அதீத போட்டி மனநிலையை உருவாக்கும் சூழலில் அவர்களால் எப்படி வேலை பார்க்க முடியும். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் ராணுவ பள்ளி துவங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறார்கள். சில இடங்களில் நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த தன்னார்வலர்களை எல்லாம் உள்ளே அனுப்பிவிட்டு பயிற்சி எடுக்க வைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இந்தியாவில் சிப்பாய்க்கு போகும் பெரும்பான்மையனவர்கள் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் தான் அதிகம்.
ஐந்து கட்ட தேர்வை கடந்து போனாலும், குறைந்தபட்ச கல்வி தகுதி இருந்தால் போதும். அதில் பெரும்பான்மையானோர் தேச பற்றில் போகிறார்களா இல்லையா என்பதெல்லாம் தாண்டி வாழ்க்கை, குடும்பம், பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்கிற இடத்தில் இருந்துதான் போகிறார்கள். அப்படி போகிற இடத்தில் குடும்பம் நல்ல நிலைமைக்கு வருகிறது. இது மிகப்பெரிய வேலை வாய்ப்பாக இருக்கிறது. பணி உத்திரவாதம், ஓய்வூதியம், பணி முடிந்து மீண்டும் வேறொரு பணிக்கு வரும் போது அவர்களால் போக முடிகிறது. ஆனால் பெரும்பான்மையாக 75% பேர் வெளியே வரும் போது அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பதற்கான சிஸ்டம் இங்கு கிடையாது. எனவே பழையபடி நெருக்கடிக்குள் உள்ளாகும் வாய்ப்பும் இருக்கிறது.

சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ் போகும் போது அந்த அமைப்பு ராணுவமயமாக்கல் விஷயமாக மாறும். நாட்டில் நடக்கும் வன்முறைகள் அதில் நடக்க கூடிய விஷயங்கள் எல்லாவற்றிலும் அவர்களின் தலையீடு, பங்களிப்பு பிரதானமாக மாறும். பத்தாம் வகுப்பு முடித்து பதினேழறை வயதில் போகிறார்கள் என்றால், உயர்கல்வி இழக்க நேரிடுகிறது. அடுத்து தன்னை எந்த வகையிலும் திறன் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுத்த முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது திரும்ப சாதாரண வாழ்க்கைக்குள் வர முடியாமல் சமூக உறவு செயல்களுக்குள், ராணுவ வலிமையை மக்களிடம் பிரயோகிக்கும் நபராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது” என்கிறார்.
மேலும் படிக்க அக்னிபத் திட்டத்தை இந்திய இளைஞர்கள் எதிர்ப்பது ஏன்?!