நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாலமணிகண்டன், பரணிகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பாலசுப்ரமணியன் தன்னுடைய அக்கா மகள் லாவண்யாவை, தனது மூத்த மகன் பாலமணிகண்டனுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பாலமணிகண்டன் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி ஊர் சுற்றி வந்ததாகவும் இதன் காரணமாக, பாலமணிகண்டனின் மனைவி லாவண்யா திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஊர் திரும்பிய லாவண்யா தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு மறுபடியும் திருப்பூருக்கு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதை அறிந்த பாலமணிகண்டன், தன்னுடைய குழந்தையை, தனது தந்தையான பாலசுப்பிரமணியன்தான், தனது மனைவியுடன் அனுப்பி வைத்ததாக நினைத்து சண்டையிட்டுள்ளார். அதோடு, தனது மனைவி லாவண்யா, தன்னுடன் சேர்ந்து வாசாததற்கும் தனது தந்தையே காரணம் என்று நினைத்த பாலமணிகண்டன், தனது தந்தை மீது கடும்கோபத்தில் இருந்திருக்கிறார். இதனால், தனது தம்பி பரணிகுமார், அக்கா மகன் சீனிவாசன் ஆகியோரோடு சேர்ந்து, தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பாலசுப்பிரமணியத்தை அடித்துக் கொலை செய்த அவரின் மகன்கள் உள்பட மூன்று பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க நாமக்கல்: `மனைவி பிரிஞ்சதுக்கு நீதான் காரணம்' - சகோதரனோடு சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்