நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கூக்கல்தொரை, மசக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முந்தினம் மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் அந்த பகுதியே வெள்ளக்காடாக மாறியது. ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீர் சாலைகள், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் சூழ்ந்தன. இந்த நிலையில் மழையின் போது ஓடையை கடக்க முயன்ற ஆலம்மாள் என்ற பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விளை நிலங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்ததும், நீரோடைகள் முறையாக பராமரிக்கப்படாததுமே இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை பாதிப்புகள் குறித்து கிராம மக்கள் பேசுகையில், "இந்த பகுதியில் இருக்கும் ஓடை மற்றும் தரைப்பாலம் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படுவதில்லை. கொஞ்சம் மழை பெய்தாலே தரைப்பலாலத்தில் அடைப்பு ஏற்படுகிறது. நேற்று பெருமழை பெய்தது.

திடீரென கொட்டித் தீர்த்த மழையில் எல்லாப்பக்கமும் மழை சூழ்ந்துவிட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆலம்மாவை இரவு முழுவதும் தேடினோம். காலையில் தான் சடலத்தை கண்டுபிடிக்க முடிந்தது. விவசாயிகளுக்கும் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இனி இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் வேதனையுடன்.
மேலும் படிக்க நீலகிரி: கொட்டித் தீர்த்த மழை; தரைப்பாலத்தில் அடைப்பு; வெள்ளக்காடான கிராமம் - பெண் உயிரிழந்த சோகம்!