குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2ம் தேதி சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4,033 மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளனர். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. தற்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 49 சதவிகித வாக்குகளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவிகித வாக்குகளும் உள்ளன. பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என்றாலும் கூடுதலாகச் சில கட்சிகளின் ஆதரவும் வேண்டும் என்ற சூழல்தான் இருக்கிறது. அதே நேரம் பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் எதிர்க்கட்சிகள் என்ன திட்டமிட்டிருக்கின்றன என்ற விசாரணையில் இறங்கினோம்.
பா.ஜ.க குடியரசுத் தலைவர் குறித்து என்ன திட்டத்தில் இருக்கிறது என விசாரித்தோம். “குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே தற்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள வெங்கைய நாயுடுவை அப்பதவிக்குப் போட்டியிட வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக மத்திய பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளைக் குறிப்பாக தி.மு.க-வுடன் வெங்கைய நாயுடு இணக்கம் காட்டினார். ஆனால், தற்போது பா.ஜ.க அந்தத் திட்டத்தில் இல்லை. மாற்றாக பா.ஜ.க பட்டியலினத்தவர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனம் எழுந்து வருவதால் கடந்த முறை அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தது. அதேபோல இந்த முறை இந்த முறை பழங்குடியினர் சமூகத்திலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவராக்கலாம் என பா.ஜ.க நினைக்கிறது. அதேபோல சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ.க செயல்படுகிறது எனவும் இப்போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. சமூகத்தில் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் அக்கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராக்கலாம் என்ற திட்டமும் அக்கட்சியிடம் இருக்கிறது.” என்றவர்கள்…

“இதற்காக பா.ஜ.க தரப்பில் இப்போதே வேட்பாளர் தேர்வுக்கான தேடலிலும் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பா.ஜ.க சார்பில் யார் போட்டியிட உள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றனர்.
எதிர்க்கட்சிகள் என்ன திட்டத்தில் இருக்கின்றன என விசாரித்தோம். “வாஜ்பாய் காலத்தில் அப்துல் கலாம் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அதுபோன்று தற்போது பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்த பா.ஜ.க-வின் எதிர்க்கட்சிகள் முயல்வதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேசுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன்படியே மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சியை தலைவர்களைத் தொடர்புகொள்ளத் தொடங்கிவிட்டார். தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சோனியா தொடர்பு கொண்டு பேசியதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போது அமைக்கும் கூட்டணி மக்களவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற கணக்கில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது” என்றார்கள்.
மேலும், சி.பி.ஐ-யின் தேசியச் செயலாளர் பினோய் விஸ்வம் “குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே என்னை அழைத்து ஆலோசனை நடத்தினார். மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான கண்ணோட்டம் கொண்ட பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம் என நான் கூறினேன். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலைப்பாடுதான் என அவர் என்னிடம் பதிலளித்தார்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது இதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

“பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ, பிற எதிர்க்கட்சிகளிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளது சின்ன குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனினும் எதிர்க்கட்களால் ஒன்றிணைய முடியாமல் போனால் அது பாஜாகவுக்கு வெற்றியை எளிதாக்கும் என்கிறார்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே இந்தக் குடியரசு தலைவர் தேர்தலை அக்கட்சி பார்க்கிறது. மூன்றாவது அணி அமையவிடாமல் தடுத்து இரு பக்கமும் சாராத கட்சிகளை இப்போதே தங்கள் பக்கம் நகர்த்தும் வேலையிலும் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதை நடந்துவிடக்கூடாது என பா.ஜ.க நினைப்பதால் இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலை அனைவரும் உற்றுநோக்கி வருகிறார்கள். விரைவில் அதற்கான விடை கிடைக்கும்…
மேலும் படிக்க குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக, காங்கிரஸ் `திட்டம்’ என்ன?