சேலம், மத்திய சிறையில் சமீபகாலமாக அதிகாரிகள் கையூட்டாக பணத்தை பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தருவது, சிறையில் இருந்து தப்பிக்க உதவி புரிவது என்று தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான கைதி ஒருவரை, மற்றொரு வழக்குகளில் கைது செய்ய போலீஸார் வெளியே காத்திருந்தனர்.
ஆனால், சிறைத்துறை காவலாளிகள் சிலர் கைதியிடம் ரொக்கமாக பணத்தை பெற்றுக்கொண்டு, அந்நபரை மற்றொரு வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வழி அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான விசாரணையானது ஒருபுறம் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம் சிறைத்துறை காவலாளி ஒருவர் பரோலில் சென்ற கைதியை பைக்கில் அழைத்துச் சென்று தப்பிக்க வைத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரி. இவர் சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் 3 நாட்கள் பரோலில் வெளியே சென்றுள்ளார். மீண்டும் பரோல் முடிந்து சிறைக்கு வரக்கூடிய நாளில் ஹரி வராததால், சிறைத்துறை அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது மீண்டும் சிறைக்கு வந்துவிட்டதாக அவர்களுடைய உறவினர்கள் கூற, அதிகாரிகள் சிறையின் வாசலில் உள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில், சரியாக 25-ஆம் தேதி மாலை சிறை முன்பு காரில் வந்து இறங்கும் ஹரியை. சிறை வார்டன் ராமக்கிருஷ்ணன் தனது மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு அஸ்தம்பட்டி ரவுண்டான அருகே இறக்கி விடும் காட்சி பதிவாகியுள்ளது.
இதையடுத்து போலீஸார் வார்டனிடம் விசாரித்தபோது, `கைதி ஹரி தான் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், தன்னை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் விடுமாறும், பணம் கொடுத்துவிட்டு உடனே திரும்பி வந்துவிடுவதாக கூறினார். அதனால் ஹரியை தனது மோட்டார் பைக்கில் அழைத்துக்கொண்டு போனதாக வார்டன் தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் கைதிக்கு உதவியதாக சம்பந்தப்பட்ட வார்டன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் விதமாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸார் ஒரு பக்கம் கைதியுடன் சிறையில் இருந்தவர்கள் யார் வெளியில் இருந்து வருகின்றனர் என்று விசாரித்து வர, மற்றொருபுறம் கைதியிடம் பணம் கேட்ட அதிகாரி யார் என்றும் சிறைத்துறை உளவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க சேலம்: பரோலில் சென்ற கொலை வழக்கு தண்டனை கைதி தலைமறைவு; வார்டன் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?