விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமாரின் மணிவிழா புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழ்நாடு பகுதியில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் நேற்று இரவு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் விசிக எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ‘‘ரவிக்குமார் தேர்தல் அரசியலை விரும்பவில்லை. ரவிக்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும், அவர் இந்த கட்சியில் அதிகாரப்பூர்வமான பொறுப்பில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மனப்பூர்வமாக நான் விரும்பினேன். என்னுடைய அழுத்தத்தின் காரணமாகவே அவர் தேர்தல் அரசியலுக்குள் வந்தார். பல இக்கட்டான நேரங்களில் தெளிவான வழிகாட்டுதல்களை அவர் கொடுத்திருக்கிறார். கட்சி வலிமை பெற வேண்டும், வளர வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்திருக்கிறார். ரவிக்குமாரை புரிந்து கொள்வதில் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலர் போதிய தெளிவு பெறவில்லை.
அவரின் பங்களிப்பு விடுதலை சிறுத்தைகளுக்கானது என்பதை விட விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது. ஈழத் தமிழர் பிரச்னைக்கு மறுபடியும் உயிர்ப்பை கொடுத்தவர். கருணாநிதி தலைமையிலான டெசோவை மறுபடியும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர். ஒவ்வொரு அமர்விலும் புதிய புதிய தீர்மானங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தவர். அவருடைய பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்பதை விட அவருடைய பங்களிப்பு இந்த மக்களுக்கு தேவை என்று விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. அதற்கு ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்று ரவிக்குமாரிடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் இதுவரையில் கிறிஸ்தவர்கள் ஒருவர்கூட குடியரசுத் தலைவராக ஆகவில்லை. அதனை விடுதலை சிறுத்தைகள் முன்மொழிவோம், அறிக்கையாக வெளியிடுவோம் என்று சொன்னார். இதற்கு கருத்தியல் தளத்தில் அவர் அளிக்கின்ற பங்களிப்பு தான் காரணம். 2001-ல் எடுத்த முடிவைத்தான் 2022-ம் நாம் எடுக்கிறோம் என்பதால்தான் நம்முடைய கருத்தியலில் தெளிவாக இருக்கிறோம். சனாதன எதிர்ப்பு என்பதன் நிலைபாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியதில் இருந்தே முன்னெடுத்து வருகிறது. எத்தனையோ கட்சிகள் தொடங்கப்பட்டு காணாமல் போயுள்ளன. கரைந்து போயுள்ளன. பாமக, மதிமுக, தேமுதிக என ஒவ்வொரு கட்சியும் தனக்கான குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்கி நிரூபித்து காட்டிய பிறகுதான் அங்கீகாரத்தையும், கூட்டணியையும் பெற்றார்கள்.
ஆனால் வாக்கு வங்கியை நிரூபிக்காமல் தனித்த சக்தியாக விசிக நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறது. இதற்கு கருத்தியல் தளத்தில் நமக்குள்ள தெளிவும், நாம் எடுக்கின்ற நிலைபாடுகளும் தான் காரணம். தனித்து போட்டியிட வில்லை. வாக்கு வங்கிய நிரூபிக்கவில்லை. ஆனாலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு தவிர்க்கமுடியாத சக்தியாகவும், தமிழக அரசியலில் நடுநாயகமாக விளங்குகின்ற பாராட்டை பெற்று நிமிர்ந்து நிற்கிறோம். இந்த வெற்றிக்கு என்னோடு பயணிக்கின்றவர்கள் முக்கிய காரணம். இதனால் தான் 32 ஆண்டுகள் விசிக தாக்கு பிடித்து நிற்கிறது” என்றார்.
மேலும் படிக்க ``தேர்தல் அரசியலை விரும்பாதவர் ரவிக்குமார்; என்னுடைய அழுத்தத்தினாலே வந்தார்” - தொல்.திருமாவளவன்