திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் யு.ஏ.இ தூதரக பார்சலை எடுக்கச் சென்ற ஸரித் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த சிவசங்கருக்கு மீண்டும் கேரள அரசு பணி வழங்கியுள்ளது.
2020 ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் 16 மாத சிறை வாசத்துக்குப்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து சில விபரங்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். இடைக்கிடையே செய்தியாளர் சந்திப்பின்போது சிவசங்கருக்கு எதிராக பேசியிருந்தார். முதல்வர் பினராயி விஜயன் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்வப்னா சுரேஷ் கூறுகையில், "எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு தெரிந்த எல்லாவற்றை குறித்தும் 164 பக்க வாக்குமூலமாக கோர்ட்டில் கூறியிருக்கிறேன். எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கைப்பற்றியும், அதில் ஈடுபட்டுள்ள சிவசங்கர், முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவர்களது மகள் வீணா, செயலாளர் ரவீந்திரன், நளினி நெட்டோ ஐ.ஏ.எஸ், முன்னாள் அமைச்சர் ஜலீல் ஆகியோர் என்ன செய்துள்ளார்கள் என்பது பற்றியும்,
இந்த வழக்கில் அவர்களது ரோல் என்ன என்பது பற்றியும் 164 பக்க வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த தொடர்பு 2016-ல் முதல்வர் பினராயி விஜயன் துபாய் போகும் சமயத்தில்தான் தொடங்கியது. அப்போது தூதரக செயலாளராக இருந்த என்னை சிவசங்கர் தொடர்புகொண்டு முதல்வர் ஒரு பேக்கை மறந்து வைத்துவிட்டார். அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துபாய்க்கு கொண்டு சேர்த்தே ஆக வேண்டும் என்றார். எனவே தூதரகத்தில் குக்கி என அழைக்கப்படும் டிப்ளமேட் மூலமாக அந்த பேக்கை துபாய்க்கு கொடுத்துவிட்டோம். தூதரகத்துக்கு எந்த பார்சல் வந்தாலும் ஸ்கேனிங் மிஷின் மூலம் அதை பரிசோதனை செய்வோம். அப்படி ஸ்கேன் செய்ததில் முதல்வருக்கு அனுப்பிய பேக்கில் கரன்சி இருந்தது தெரியவந்தது.

அந்த சம்பவத்தில் இருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. அதன்பிறகு சிவசங்கரின் அறிவுறுத்தலின் பேரில் ஐக்கிய அமீரக தூதரக வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் பிரியாணி முதல்வரின் கிளிப் ஹவுசுக்கு பலமுறை கொடுத்துவிடப்பட்டுள்ளது. இதுபோல பல முறை நடந்துள்ளன. முதல்வரின் மனைவி, மகளின் விஷயங்கள் பற்றியும் எனது வாக்குமூலத்தில் கூறியுள்ளேன். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கிறது. எனவே அதிகமாக கூறமுடியாது. மீதமுள்ளதை நீங்கள் விசாரணை நடத்திக்கொள்ளுங்கள்” என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.
தங்கம் கடத்தல் வழக்குக்கில் முதல்வர் பினராயி விஜயனை சம்பந்தப்படுத்தி ஸ்வப்னா சுரேஷ் முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "இந்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் அஜண்டாவின் ஒருபகுதிதான். இதற்கு முன்பும் இதுபோன்று அவர் கூறியிருக்கிறார். மாநிலத்தின் பொருளாதாரத்தை தகர்க்கும் இந்த மோசடியின் இறுதி முடிவுவரை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுபற்றி மத்திய ஏஜென்சிகளை முதலில் வலியுறுத்தியதும் நாங்கள்தான். அப்படிப்பட்ட எங்கள் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்கள். சிறு இடைவேளைக்குப் பிறகு பழைய விஷயத்தை குற்றவாளியைக் கொண்டு வழக்கில் கூற வைத்துள்ளனர். இதை மக்கள் புறந்தள்ளுவார்கள்" என்றார்.
மேலும் படிக்க `தங்கம் கடத்தலில் முதல்வருக்கும் பங்கு’ - ஸ்வப்னா சுரேஷ்; `இது அரசியல் அஜண்டா’ - பினராயி விஜயன்