கோவிட் தொற்று காரணமாக, பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அவர்களின் வாழ்வு நிலைகுலைந்து போனது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் போபாலைச் சேர்ந்த 17 வயது சிறுமி வனிஷா பதக். கோவிட் தொற்றின் இரண்டாம் அலை சமயத்தில் தன்னுடைய பெற்றோரை இழந்தவர். இப்படிபட்ட சூழலில் தன் தந்தை வாங்கிய கடனை சிறுமியான இவரை அடைக்க சொல்லி தொடர்ந்து எல்.ஐ.சி-யில் இருந்து கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபாலைச் சேர்ந்த வனிஷா பெற்றோரை இழந்த பின், தன் தாய்வழி உறவினரோடு வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தம்பியும் உள்ளார். பெற்றோரை இழந்த பின் நடந்த பொதுத்தேர்வில் கூட 99.8% சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று சாதித்தவர் வனிஷா. இவருடைய தந்தை ஜீதேந்திரா பதக் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்தவர். பணிபுரிந்த காலத்தில் வீட்டுக்காக 29 லட்சத்தை கடனாகப் பெற்றுள்ளார். அவர் இறந்த பின்பு அந்த கடனைத் திரும்ப செலுத்த கூறி தொடர்ச்சியாக நோட்டீஸ்களை வனிஷா பெற்று வருகிறார். கடைசியாக பிப்ரவரி மாதம் அவர் பெற்ற நோட்டீஸில் கடனைத் திருப்பி செலுத்தவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி நிறுவனத்தை டேக் செய்து இந்த விவகாரம் குறித்து பார்க்கும்படியும், தற்போதைய நிலை குறித்து தனக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய வனிஷா, "என்னுடைய தந்தை Million dollar round table club (MDRT) என்ற இன்சூரன்ஸ் க்ளப்பில் உறுப்பினராக இருந்தவர். எங்களுடைய பெற்றோரை 2021-ம் ஆண்டு மே மாதம் இழந்துவிட்டோம். நான், என்னுடைய 11 வயது தம்பி இருவருமே மைனர்கள். எங்களுக்கு வயது குறைவு என்பதால் என் தந்தையின் மாதந்திர பாலிஸி மற்றும் கமிஷன் அனைத்தும் எடுக்க இயலாத நிலையில் உள்ளது. எங்களுக்கு வருமானத்திற்கு எந்த வழியும் இல்லை. கடன்தொகையைத் திரும்ப செலுத்த அவகாசம் தேவை. 18 வயது நிரம்பிய பிறகு செலுத்துவதைப் பற்றி யோசிக்கலாம்." என்றார்.
@DFS_India @LICIndiaForever
— Nirmala Sitharaman (@nsitharaman) June 5, 2022
Please look into this. Also brief on the current status.
Orphaned Topper Faces Loan Recovery Notices https://t.co/MNnC7FG6uM via @economictimes
இதுவரை வனிஷா பலமுறை எல்.ஐ.சி நிறுவனத்திற்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எந்த தெளிவான பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட எல்.ஐ.சி நிறுவன அதிகாரிகளோ வனிஷாவின் கோரிக்கைகள் தலைமை எல்.ஐ.சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது அங்கிருந்து பதில் வரவில்லை எனக் கூறுகிறார்கள். வனிஷாவைத் தற்போது பொறுப்பேற்று பார்த்து கொள்ளும் வனிஷாவின் மாமா அஷோக் ஷர்மா கூறுகையில், "நான் இரு குழந்தைகளையும் பார்த்து கொள்கிறேன். கடனை திரும்ப செலுத்தும் வகையில் போதுமான நிதி எங்களிடம் இல்லை. வனிஷாவின் தந்தை எல்.ஐ.சி நிறுவனத்துக்காக வேலை செய்தவர். அதனால் எங்கள் கோரிக்கையை நிறுவனம் பரிசீலனை செய்யும் என நினைக்கிறோம். ஆனால் இதுவரை எல்.ஐ.சி-யிடம் இருந்து எழுத்து வடிவில் முறையாக எந்த பதிலையும் பெறவில்லை" என்கிறார்.
மேலும் படிக்க கொரோனாவில் பெற்றோரை இழந்த சிறுமி; கடனை கட்ட சொல்லும் எல்.ஐ.சி! - விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்