சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி மதுரைக்கு வந்தார். தொடர்ந்து, 8-ம் தேதி காலை சிவகங்கையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள திருமயம், லேணாவிளக்கு வழியாக புதுக்கோட்டைக்கு வந்தவர், அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.அங்கு கட்சி முக்கிய நிர்வாகிகள் பலரும் முதல்வரை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு ரூ.370 கோடி மதிப்பீட்டில் 48,868 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு, ரூ.81.31 கோடி செலவில் முடிவுற்ற 140 திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டன. ரூ.165 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ``சுற்றுச்சூழல் துறை என்பது கொஞ்சம் டெக்னிக்கலான துறை. இன்றைய உலகில் மிக முக்கியமான துறையும் கூட. அதிலும் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி அந்தத் துறையில் சிறப்பாக ஆளுமையை அமைச்சர் மெய்யநாதன் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்க, அவரது உற்சாகம் காரணமாக அமைந்திருக்கிறது.
அரசின் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதிலும், தமிழக அரசின் வழக்குகளைத் திறம்பட கையாண்டு மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் அமைச்சர் ரகுபதியின் பங்களிப்பு இன்றியமையாதாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 7,463 கோரிக்கை மனுக்களில் 3,614 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்தது திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை வாக்கு வாங்கக்கூடிய தந்திரம் என்று, கொச்சைப் படுத்தக் கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள், வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இதனை எல்லாம் செய்கிறோம் என்று குற்றம் சாட்டக்கூடிவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், பழங்குடியின மக்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைகளுக்கோ வாக்கு வங்கி அதிகமா இருக்கிறதா, அவர்கள் எல்லாம் வாக்கு வங்கி உள்ளவர்களா? இப்படி வாக்கு வங்கி இல்லாதவர்களுக்கும் வாழ்க்கைக்கும் தேவையான வசதிகளைக் கொடுப்பது தான் தி.மு.க அரசு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் நோக்கம், சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலந்தான்.
சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை, கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை இங்கு மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி என்ன கோரிக்கை வைத்தாலும், அதில், இருக்கக்கூடிய உண்மையை, நியாயத்தை அர்சு புரிந்துகொண்டு கண்டிப்பாக அதற்கு நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
புதுக்கோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சோலைமலர் (30) இவரின் கணவர் ஜெகதீசன் (35). இவர் கடந்த 2020ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவனை இழந்த இளம்பெண் சோலைமலர் தனது இரண்டு கைக் குழந்தைகளுடன் முதல்வரைப் பார்த்து மனு கொடுப்பதற்காக, முதலமைச்சர் தங்கியிருந்த ரோஜா இல்லத்திற்கு வந்தார். அப்போது, முதல்வரைப் பார்த்து மனு கொடுக்கும் நேரத்தில் அங்கிருந்த பாதுகாவலர்களால் தள்லிவிடப்பட்ட சம்பவம் அங்கு பெரும், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க ``மக்கள்தான் முக்கியமே தவிர, இந்த பதவிகள் அல்ல” - புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்