கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்க்குறிய கருத்து தெரிவித்திருந்தது அரபு நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நுபுர் ஷர்மா, அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நவீன் ஜிண்டால் ஆகியோர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் பா.ஜ.க-வையும், மத்திய அரசையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் வகையில் ஃபஹாஹீல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை குவைத் அர்சு நாடு கடத்த உள்ளது என சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில மொழி நாளிதழான தி அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த தி அரப் டைம்ஸ் நாளிதழில், `` குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் குவைத் சட்டங்களை மதிக்க வேண்டும். குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் எந்த வகையான ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்கக்கூடாது என்பது சட்டம். நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதால் வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் குவைத்துக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாடு கடத்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
குவைத்தில் சட்டப்பூர்வமாக வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019-ல் 10 லட்சத்தைத் தாண்டியுருக்கிறது. குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5-6 சதவிகிதமாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க நுபுர் ஷர்மாவுக்கு எதிரான போராட்டம்: வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு?