Doctor Vikatan: என் வயது 26. சின்ன வயதில் இருந்தே தூசு, புகை, அதிகமான வாசனை போன்றவற்றால் தும்மல் வரும். சோப்பு போட்டு முகம் கழுவக்கூட முடியாது. உடனே தும்மல் வந்துவிடும். இப்போது என்னுடைய 6 வயது மகனுக்கும் அதே அலர்ஜி பிரச்னை இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இந்த அலர்ஜியை குணப்படுத்த முடியுமா?
-சாரா பானு சாரா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வடிவேலு ஸ்ரீனிவாசன்...
சுற்றுச்சூழல் மாசு, இயந்திரமயமாக்குதல், திடீர்திடீரென மாறும் வானிலை போன்றவற்றால் இன்று பலரும் அலர்ஜி பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இவற்றால் ஈஸ்னோபில் (eosinophils) எண்ணிக்கையும், ரத்தத்தில் சீரம் ஐஜிஇ (serum IgE) அளவுகளும் அதிகரிக்கும்.
அதனால் உடலின் பிற செல்களும் பாதிக்கப்பட்டு, அலர்ஜி பிரச்னை வரும். அதன் வெளிப்பாடாக, மூக்கில் இருந்து நீர் வடிதல், கண்களில் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், இருமல் போன்றவை வரலாம். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரும் இதனால் அவதிக்குள்ளாகிறார்கள்.

பாதிப்புள்ள நபர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு ரத்தத்தில் சீரம் ஐஜிஇ மற்றும் ஈஸ்னோபில் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு இரண்டுமே அதிகமாக இருக்கலாம். அடுத்து ஸ்கின் ப்ரிக் டெஸ்ட் என்ற ஒன்று செய்யப்படும். எந்தெந்த உணவுகளைச் சாப்பிடுவதால் அலர்ஜி வருகிறது என்று குறிப்பெடுக்க வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
இன்ஹேலர், பிராங்கோ டைலேட்டர்ஸ் போன்றவை பரிந்துரைக்கப்படும். மூக்கின் வழியே உபயோகப்படுத்தும் நேசல் ஸ்பிரே, இரவில் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.
சிலருக்கு அவர்கள் உபயோகிக்கும் சோப், பெர்ஃபியூம், வீட்டிலுள்ள தூசு போன்றவற்றால் ஒவ்வாமை தீவிரமாகும். அலர்ஜிக்கு காரணமான விஷயத்தைக் கண்டறிந்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். 'பயலாஜிகல்' எனப்படும் இந்தச் சிகிச்சையில் மூன்றுவிதமான ஊசிகள் பரிந்துரைக்கப்படும். உங்கள் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, ஒரு வருடம் வரை இந்த சிகிச்சையைத் தொடர வேண்டியிருக்கும்

இது சற்று காஸ்ட்லியான சிகிச்சை. சில மருந்துகளை ஆறு மாதங்கள் முதல், ஒரு வருடம்வரை உபயோகிக்க வேண்டியிருக்கும்.
இந்தச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருந்து கம்பெனிகள் சில சலுகைகளைக் கொடுக்கிறார்கள். அது குறித்த விவரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து, ஒவ்வாமைக்கான காரணிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ளலாம். முறையான சிகிச்சை பின்பற்றப்பட்டால், இந்தப் பிரச்னையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம், பயப்பட வேண்டாம்.
மேலும் படிக்க Doctor Vikatan: தூசு, புகை, வாசனை அலர்ஜி; நிரந்தரத் தீர்வு உண்டா?