மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடக, ஹரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி சீட்களுக்களுக்கான தேர்தல் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. ஏற்கெனவே, தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 பேர் எம்.பி-யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த தேர்தல் தொடங்கியுள்ளது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த தேர்தலில், 16 மாநிலங்களவை எம்.பி சீட்களுக்களுக்கு மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 6 இடங்களில், பா.ஜ.க-வுக்கு 2 இடமும், காங்கிரஸ், சிவசேனா கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு தலா 1 இடம் உறுதியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள 1 இடத்துக்கு மட்டுமே போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

மேலும், கர்நாடகாவில் உள்ள 4 இடங்களுக்கு பா.ஜ.க-விலிருந்து 3 பேரும், காங்கிரசிலிருந்து 2 பேரும், ம.ஜ.த-விலிருந்து ஒருவரும் போட்டியிடுகின்றனர். அதேபோல் ராஜஸ்தானில் 4 எம்.பி சீட்களுக்கு, காங்கிரஸ் சார்பாக 3 பேர், பா.ஜ.க சார்பாக ஒருவர் மற்றும் பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாக ஒருவர் என மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர். ஹரியானாவில், 2 எம்.பி சீட்களுக்கு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-விலிருந்து தலா ஒருவரும், பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாக ஒருவரும் என 3 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் எந்தக்கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கலாம் என்பதால் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க Live: 4 மாநிலங்கள்; 16 இடங்கள் - தொடங்கியது மாநிலங்களவைத் தேர்தல்... 41 பேர் போட்டியின்றி தேர்வு!