கோவா அரசியலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இதுவரை எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சி மாறாமல் இருந்தனர். தற்போது அதற்கு பிள்ளையார் சுழி போட்டு காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து வைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மிச்சேல் லோபோ ஆகியோர் தலைமையில் 6 எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வுக்கு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டு ராவ் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் மிச்சேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் உட்பட 6 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. லோபோவும், திகம்பரும் சேர்ந்து கட்சியை உடைக்க சதி செய்வதாக குண்டு ராவ் குற்றம் சாட்டியிருக்கிறார். 11 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து லோபோ, திகம்பர் காமத் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதோடு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் லோபோவை காங்கிரஸ் நீக்கி இருக்கிறது. இதில் லோபோ சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை பாஜக-வில் இருந்தார். தேர்தலையொட்டியே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தை சந்தித்து பேசினர். அவர்கள் பாஜக-வில் சேர திட்டமிட்டு இருக்கின்றனரா என்று முதல்வர் சாவந்திடம் கேட்டதற்கு, ``தொகுதி பணிகள் குறித்து என்னிடம் பேச தினமும் எம்.எல்.ஏ.க்கள் வருகின்றனர். அவர்கள் பாஜக-வில் சேர வருகின்றரா என்று எனக்கு எப்படி தெரியும்?” என்று மழுப்பலாக பதிலளித்தார்.
2019-ம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேர்ந்தனர். தற்போதும் தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களை பாஜக தலா 40 கோடி கொடுத்து வாங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கிரிஷ் சோதான்கர் கூறுகையில், ``காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேர ரூ.40 கோடி பேரம் பேசப்படுகிறது. தொழிலதிபர்களும், நிலக்கரி மாஃபியாக்களும் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேரம் பேசுகின்றனர்” என்று தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு குறித்து மாநில பாஜக தலைவர் சதானந்த் கூறுகையில், ``காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. கோவா காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கு பாஜக எந்த விதத்திலும் காரணம் இல்லை” என்று தெரிவித்தார். அதேசமயம் பாஜகவில் சேர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் மிச்சேல் லோபோ இது குறித்து கூறுகையில், ``பாஜகவில் சேரப்போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. இந்த வதந்தி திட்டமிட்டு பரப்பிவிடப்படுகிறது. கட்சி மாறப்போவதாக நான் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் கூறுகையில், ``பாஜக திட்டமிட்டு இது போன்ற வதந்தியை பரப்பி வருகிறது. 11 பேரில் 8 பேர் எங்களுடன் இருக்கின்றனர்” என்றார். சமீபத்தில் கோவா வந்திருந்த பாஜக தேசிய செயலாளர், `கோவாவில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 20லிரூந்து 30 ஆக அதிகரிக்கும்’ என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்கிறார்கள்.
மேலும் படிக்க கோவா: 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்கு தாவ முடிவு?! - ரூ.40 கோடி பேரம் பேசுவதாக புகார்