மதுரை மாநகரிலே மாபெரும் மாநாடு #AppExclusive

0

“தம்பி, உங்களுக்கு எந்த ஊர்?”

“ஐயம்பாளையங்க.”

“அது எங்கே இருக்கு?”

“பட்டிவீரன்பட்டிக்குப் பக்கத்திலேங்க!”

“நீங்க என்ன தொழில் செய்றீங்க?”

“காப்பி கடை வச்சிருக்கேனுங்க.”

“மாநாட்டுக்க வந்துட்டீங்களே கடை...”

“அடைச்சுப்புட்டேன்ங்க மாநாட்டைவிடவா வியாபாரம் பெரிசு. அண்ணா நமக்கெல்லாம் எவ்வளவு தியாகம் செய்யறாரு. அவருக்காக நாம் இதுகூட செய்யலேன்னா எப்படிங்க?” மதுரை மாநகரை அடுத்த திருப்பரங்குன்றத்திலே, பாண்டியன் நகரிலே நடந்த திராவிட முன்னேற்றக் கழக மூன்றாவது பொது மாநாட்டில், எனக்கும் ஓர் இளைஞருக்குமிடையே நடந்த பேச்சுதான் இது. ஐயம்பாளையம் இளைஞர் மட்டுமல்ல, அவரைப் போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பல்வேறு பாளையங்களிலிருந்தும். பட்டிதொட்டிகளிலிருந்தும், நாடு நகரங்களிலிருந்தும், மூலை முடுக்குகளிலிருந்தும், தங்கள் தங்கள் தொழிலை மறந்து, உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, தினசரி வாழ்க்கைப் பிரச்னைகளை மறந்து ‘அண்ணா’ அவர்களின் பேச்சைக் கேட்க, அவர் ஆணைப்படி நடக்க, அவர் காட்டிய திக்கில் போக குன்றத்தில் குழுமியிருந்தார்கள்.

செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன்சொந்த அண்ணன் காலமான வருத்தத்தையும் மறந்து, இந்த ‘அரசியல் அண்ணன்’ என்ன கட்டளை இடுகிறார் என்று அறிய ஓடோடி வந்திருந்தார். ஆமாம்! திரு அண்ணாதுரை அவர்களுக்காக எதையும் துறக்கச் சித்தமான எண்ணற்ற இளைஞர்கள் தமிழ் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். திரு அண்ணாதுரை அவர்களுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக எதையும் தாங்கும் இதயமும், எதையும் எதிர்க்கும் உள்ளத் திண்மையும் படைத்தவர்கள் அவர்கள்.

DMK's stunning 1961 Madurai Conference

ஜூலை மாதம் 13, 14, 15, 16 தேதிகளில் மதுரையில் நடந்த தி.மு.க. பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்ட எனக்கு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடனேயே சற்றுத் திகைப்பு ஏற்பட்டு விட்டது. நாம் எந்த ஆட்சியில் இருக்கிறோம், காங்கிரஸ் ஆட்சியில் தானா, அல்லது தி.மு.க.வினரின் ஆட்சியிலா என்ற ஐயம் எழும் வண்ணம்தான், எழும்பூர் ரயில் நிலையம் காட்சி அளித்தது. எங்கு நோக்கினும் இரு வர்ணக் கொடி அணிந்தவர்கள் தான், ரயில் பெட்டிகளிலெல்லாம் தி. மு. க. கொடி பறந்து கொண்டிருந்தது. ‘அண்ணா வாழ்க!’

‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்ற வாழ்த்தொலிகள் வானைப் பிளந்து கொண்டிருந்தன. பொதுவாகவே மதுரைக்குப் போவதை நான் மிகவும் விரும்புபவன். காரணம், அந்த ஊர் ஒன்றில் தான் எனக்கு சென்னையில் கிடைக்காத மரியாதை கிடைக்கும். வண்டியை விட்டு இறங்கியவுடன், ‘வாங்க முதலாளி என்று வாயார அழைக்கும் வண்டிக்காரர்களை மதுரையில்தான் காண முடியும். ஆனால் இந்த முறை அந்தப் பெருமையை நான் அடைய முடியவில்லை. ‘வாங்கண்ணே, வணக்கம், வாழ்க திராவிட நாடு’ என்று தான் என்னைத் தோழர்கள் வரவேற்றார்கள். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு நின்றது. சித்திரைத் திருவிழா காலத்தில்கூட இத்தனை பரபரப்பு இந்த நகரில் கிடையாது என்று என் மதுரை நண்பர் சொல்லிக்கொண்டே வந்தார். எங்கு நோக்கினும் தோரணங்கள், வளைவுகள், கொடிகள், வாழ்த்துக்கள்!

தி.மு.கழகக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக சில கார்கள் பறந்து கொண்டிருந்தன. மாநாட்டு முதல் நிகழ்ச்சியே கோவிலில் ஆரம்பித்து கோவிலில் போய்தான் முடிந்தது. வண்டியூர் தெப்பக்குளத்திலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி ஓர் ஊர்வலம் ஏற்பாடாகி இருந்தது. அடேயப்பா! அந்த ஊர்வலத்தை என்ன வென்று சொல்ல! தமிழகத்திலுள்ள பற்பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த பல பஸ்களில் ஆர்வமிகுந்த கழகத் தோழர்கள் அமர்ந்து கொண்டு, ‘அண்ணா வாழ்க! திராவிட நாடு திராவிடருக்கே என்ற ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கூற்றுக்கு ஆதரவு இருப்பதை உணர்த்த வேண்டும் என்றோ என்னவோ, கேரளத்திலிருந்தும், ஆந்திரத்திலிருந்தும் கூட சிலர் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

DMK's stunning 1961 Madurai Conference

‘திராவிட ராஜ்யம் காவாலா’ ‘விண்ணாராவிண்ணாரா? ஆந்திர சத்தம் விண்ணாரா’ என்றும், ‘கேரள சத்தம் கேட்டாயோ’ ‘உயருகயாய், உயருகயாய் திராவிட வித்யார்த்த சங்கம் உயருகயாய்’ என்றும் தெலுங்கு, மலையாள மொழிக் குரல்கள் அந்த ஊர்வலத்தில் கேட்டன. கழகத் தோழர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘வாழ்க ஒலி’ எழுப்பட்டும், வாழ்த்துவோம்.

ஆனால் வாழ்த்துடன் ‘ஒழிக’ ஒலியும் எழுந்ததே, அந்த ‘ஒழிக’ ஒலி அவசியம்தானா ? ஊர்வலத்தில் வந்த பஸ்களின் வரிசை முடிவதாகவே இல்லை அப்படி ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன. பின்னர் சைக்கிள்களிலும், ஸ்கூட்டர்களிலும், கார்களிலும், மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும், சாரட்டுகளிலும், சைக்கிள் ரிக்ஷாக்களிலும், நடந்தும் எண்ணற்ற தோழர்கள் வாயார மனமார வாழ்த்தொலி எழுப்பிய வண்ணம் வந்து கொண்டே இருந்தார்கள்.

இறுதியில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படகு மோட்டார் ஒன்றில் மாநாட்டுத் தலைவர் திரு அண்ணாதுரை அவர்களும், மாநாட்டைத் துவக்கிய திரு கே. ஏ. மதியழகன் அவர்களும் ஏனைய தி.மு.க. தலைவர்களும் வந்தார்கள். அந்தப் படகைப் பார்த்தவுடன் இயக்கத் தோழர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கட்டுக்கடங்காததாகி விட்டது, உணர்ச்சி வேகம் அவர்களை ஊக்குவித்தது. விண்ணதிர ‘அண்ணா வாழ்க’ என்று வாழ்த்தினார்கள். திரு. அண்ணாதுரை அவர்களும், மற்ற தலைவர்களும், முகத்தில் முறுவல் தவழ, தங்களது சக்தியைக் கண்டு பெருமிதம் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்து, அன்பை ஏற்று, கைகளை உயர்த்தி நன்றி கூறினார்கள். மதுரை மாநகரின் பல வீதிகளைக் கடந்து, திருப்பரங்குன்றத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பாண்டியன் நகரை இந்த ஊர்வலம் அடைவதற்கு மாலை மூன்று மணியாகி விட்டது.

அலங்காரப்படகை விட்டிறங்கிய தலைவர்கள் முதல் நிகழ்ச்சியைத் தொடங்க முனைந்தனர். பாண்டியன் நகரின் திடலில், வானோங்கி நின்ற கொடி மரத்தைச் சூழ்ந்தனர். திராவிட முன்னேற்றக் கழக இருவர்ணக் கொடியை மாநாட்டின் தலைவர் திரு. அண்ணாதுரை ஏற்றி வைத்தார். தி. மு. க. மூன்றாவது பொது மாநாடு நடைபெறுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட பாண்டியன் நகர், பாண்டியன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதோ என்று ஐயுறும் வண்ணம் தான் இருந்தது.

நகரின் முகப்பில் எழில் மாடம் ஒன்று எழும்பி இருந்தது. அதைக் கடந்து உள்ளே சென்றால், மற்றொரு அலங்கரிக்கப்பட்ட நுழை வாசல். அந்த நுழை வாசலுக்கு முன்னால் இரு சிலைகள். ஒன்று திரு. அண்ணாதுரை அவர்களுடையது, மற்றொன்று அவர்கள் உருவகப்படுத்தியுள்ள திராவிடத் தாயினுடையது.

DMK's stunning 1961 Madurai Conference

மாநாடு நடைபெற போடப்பட்டிருந்த பந்தல் மூவாயிரம் அடி நீளமும், ஆயிரம் அடி அகலமும் கொண்டது. மறைந்த தலைவர் திரு தியாகராயரின் பெயரைப் பந்தலுக்குச் சூட்டியிருந்தார்கள்.

அந்தத் தியாகராயர் பந்தலில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கவனிக்க வசதி செய்திருந்தார்கள். பந்தலின் ஒரு கோடியிலிருந்து பார்த்தால், மறுகோடி எளிதில் தெரியவில்லையென்றால், பந்தலின் தன்மையை ஊகித்துக் கொள்ளலாமே! பந்தலைச் சுற்றிலும் கடைகள்! ஒரு பெரிய கண்காட்சிக்குள் போய் விட்டாற்போல் ஒரு தோற்றம். பாண்டியன் நகரைச் சுற்றிலும் துத்தநாகத் தகடுகளைக் கொண்டு கோட்டைச் சுவர்போல் வளைவொன்று அமைத்திருந்தார்கள். பந்தலுக்குள்ளே மாநாட்டுமேடை, அதை ஒட்டி கலை நிகழ்ச்சி மேடை. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அமர இடம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தாலாட்ட தூளிகள் கட்டிக் கொள்ள வசதி! எல்லோரும் உணவருந்த தனிப் பந்தல்! இப்படிப் பற்பல வசதிகள் நிரம்பி, நகர் என்ற பெருமையை உண்மையிலேயே பெற்றுவிட்டது அந்தப் பாண்டியன் நகர். இவ்வளவு சிறப்பாக இதை நிர்மாணித்த வரவேற்புக் குழுத் தலைவர் திரு முத்து பாராட்டுக்குரியவர் தான்! இந்த மாநாட்டுக்கு அத்தனை தோழர்களும் பணம் கொடுத்து, நுழைவுச் சீட்டு பெற்றுத்தான் பார்வையாளராக வந்திருந்தார்கள். பேச்சைக் கேட்க பணம் கொடுக்கும் ஒரே கூட்டத்தினர் தி.மு.க. தோழர்களாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இதிலிருந்தே அவர்களுக்கு அந்த இயக்கத்தின் மீது இருக்கும் பற்றுதல் புரிகிறதே. கொடியேற்று விழாவிற்குப் பின்னர் விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத்துவங்கின. இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன. பந்தலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமதி சத்திய வாணிமுத்து அவர்கள் கலைக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்கள். கேலிச் சித்திரங்களும், கருத்துச் சித்திரங்களும் நிரம்பப் பெற்ற அந்தக் கண்காட்சியைப் பத்து காசு கட்டணம் கொடுத்து பலர் பார்த்தனர். பல பத்திரிகைகளில் வெளியான கேலிச் சித்திரங்கள் அந்தக் கலைக் காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவையெல்லாம் எவற்றில் வெளியானவை என்ற குறிப்பை மட்டும் ஏனோ காண முடியவில்லை!

இரண்டாம் நாள் வரவேற்புக் குழுத் தலைவர் திரு. எஸ். முத்து அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனையடுத்து திரு கே. ஏ. மதியழகன் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். “நாட்டிலே தலைவர்கள் மக்களிடம் கை ஏந்தினால் சிலர் ஓட்டுகளைக் கொடுப்பார்கள், சிலர் நோட்டுகளைக் கொடுப்பார்கள். ஆனால் அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் உயிர்ச் சீட்டுக்களையே கொடுக்க நாங்கள் சித்தமாயிருக்கிறோம்” என்றார் திரு. மதியழகன்.

DMK's stunning 1961 Madurai Conference

பின்னர் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் பணியைப் போற்றி, தியாகத்தை நினைவு படுத்தி, அவர்களது உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மாலை திரு. அண்ணாதுரை அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.

“மதுரைத் தெருக்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் லட்சக் கணக்கான கழகத்தோழர்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி எனக்கு அல்ஜீரியாவைத் தான் நினைப்பூட்டியது. நம் ஊர்வலத்தில் பஸ்கள் சென்றன, அல்ஜீரியாவில் டாங்கிகள் செல்லுகின்றன. நம்முடைய தோழர்களின் கரங்களில் இருவர்ணக் கொடி, அல்ஜீரிய நாட்டு வீரர்களின் கரங்களில் துப்பாக்கிகள். நம் தோழர்களின் முகங்களிலிருந்து வியர்வை வழிந்து கொண்டிருந்தது, அல்ஜீரிய நாட்டு வீரர்களின் முகத்திலிருந்து ரத்தம் ஒழிந்து கொண்டிருக்கிறது. ஐம்பத்திரண்டு வயதினனான எனக்கே இந்த எண்ணங்கள் தோன்றின என்றால், என்னைவிட வயது குறைந்த தம்பிகளுடைய உள்ளங்களில் எத்தகைய உணர்ச்சி துடிக்கும் கற்பனைகள் எழுந்திருக்குமோ என்று எண்ணி அஞ்சுகிறேன்” என்று திரு. அண்ணாதுரை அவர்கள் சொல்லித் கொண்டிருந்த போது, சிறிய சலசலப்பு ஏற்பட்டது. திரு. அண்ணாதுரை அவர்களின் மனைவி யார் மேடைமீது அமர்ந்திருந்தார்கள். உடனே அவர் ‘துணைவியாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வயதாகி விட்டது என்று சொல்வது சரியல்லதான் என்றாலும்..’ என்று பேச்சோடு நகைச்சுவையைக் கலந்து கொண்டார். கேட்க வேண்டுமா கையொலிக்கு!

திரு. அண்ணாதுரை அவர்களின் பேச்சில் உதாரணங்களும், சிறப்புகளும் வழக்கம்போல் இருந்தன.

“குழந்தையிடம் இருக்கும் நகையைப் பறிக்க விரும்பும் ஒருவன், அந்தக் குழந்தையிடம் இனிப்பைக் கொடுக்க - அதை அந்தக் குழந்தை ரசித்துச் சாப்பிடும் போது நகையைப் பறிப்பதுபோல், தேர்தல் இனிப்பைத் தந்து உயரிய லட்சியத்தைப் பறிக்க எண்ணுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லுவேன், எந்த இனிப்பைக் கண்டும் நாம் ஏமாற மாட்டோம். “நாம் வளர்ந்திருக்கிறோமா இல்லையா என்று மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் சிறப்பாக வளர்ந்திருக்கிறோம், சீராக வளர்ந்திருக்கிறோம்” என்று சொல்லி, தி.மு.க. வின் வளர்ச்சியை எடுத்துக் குறிப்பிட்ட அவர். “ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாக இங்கே வந்த காலத்தில், அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஒரு போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட வந்த நமது திரு அப்பாதுரை அவர்களுக்கு, மருத்துவம் பார்க்க ஒரு வைத்தியரும் வரவில்லை; வர மறுத்து விட்டார்கள்.

இன்று கழகத்திலே திரும்பின இடமெல்லாம் வைத்தியர்கள் இருக்கிறார்கள்! இது வளர்ச்சியில்லையா?“அந்தக் காலத்தில் பெரியார் அவர்களின் பேச்சை ஒலிப்பதிவு செய்ய விரும்பி ஒரு கம்பெனிக்குச் சென்று கேட்டேன். ஆயிரம் ரிகார்டுகளுக்கான தொகையை முன் பணமாகக் கொடுத்தாலன்றி இயலாது என்று சொல்லி விட்டார்கள். இன்று என் பேச்சை ஒலிப்பதிவு செய்ய விரும்பி ஆள் அனுப்புகிறார்கள். நான் தான் தொண்டை சரியாக இல்லை என்று பிகு செய்து கொள்கிறேன். இது வளர்ச்சியில்லையா?  

DMK's stunning 1961 Madurai Conference

“கோவில்பட்டி வள்ளிமுத்து ஒருவர் தான் திராவிடர் கழகத்தில் இருந்தபோது நமக்குக் கிடைத்த ஒரே ஒரு பஞ்சாயத்து போர்டு தலைவர். அவர் மேஜர் பஞ்சாயத்துத் தலைவர் என்பதைக்கூட அறியாமல், நானும் பெரியாரும் சென்ற இடமெல்லாம் அவரை நகரசபைத் தலைவர் என்றே அழைப்போம். அது அன்றைய நிலை. இன்று, என் பக்கத்திலே மேயர், சட்டமன்ற அங்கத்தினர்கள், பாராளுமன்ற அங்கத்தினர், மாநகராட்சி அங்கத்தினர்கள்... இது வளர்ச்சி இல்லையா?” இப்படி தமக்கே உரித்தான தன்மையில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார் அவர். திரு. அண்ணாதுரை அவர்கள் தமது தலைமை உரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தார். அவர்கள் நிலையை நேரில் காணவும், மாநாட்டு நிகழ்ச்சிகளை விட்டு விட்டுப் புறப்பட்டார். “வெள்ள நிவாரணத்திற்காக கழகத்தின் சார்பில் இரண்டாயிரம் ரூபாய் அளிக்க விரும்புகிறேன். பொருளாளர் கருணாநிதியிடமிருந்து இதை வட்டி இல்லாக் கடனாகப் பெற்றுச் செல்கிறேன், நீங்கள் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில்” என்றார் திரு அண்ணாதுரை அவர்கள். அவ்வளவுதான்! உரை முடிந்ததும் சிலர் எழுந்து சென்று இரண்டாயிரம் ரூபாயையும் கொடுத்து, எதையும் கொடுக்கும் இதயம் படைத்தவர்கள் தாங்கள் என்பதை மெய்ப்பித்து விட்டார்கள். ஒரு தோழர் தனது மோதிரத்தையே கழற்றிக் கொடுத்து விட்டார்! இந்த மாநாட்டில் பலரது சிறப்புச் சொற்பொழிவுகள் இடம் பெற்றன. திருவாளர் அன்பழகன், கருணாநிதி. ப. உ. சண்முகம், நாஞ்சில் கி. மனோகரன், சி. பி. சிற்றரசு, எம். ஜி. ராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியவர்களின் உரைகள் தனித்து விளங்கின. எல்லாவற்றையும்விட திரு நெடுஞ்செழியன் அவர்கள் ‘மொழி வழியும் இனவழியும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை குறிப்பிடத்தக்கது. அவர் உரையில் நகைச்சுவையும், பொருட்சுவையும் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தன. அத்துடன், கோவில் பற்றிய குறிப்புகளும் நிறைய இருந்தன. “தமிழ் நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள கோவில்களில் காணப்படும் சிற்பக்கலைகளில் உள்ள ஒற்றுமை, வட இந்தியக் கோவில்களில் இல்லை. ஆகவே வடவர்கள் தனி இனத்தவர்கள்தான் என்று கூறுகிறேன்!” என்றார். 

DMK's stunning 1961 Madurai Conference

“பெரியார் அவர்கள் திராவிட நாட்டை வெங்காய நாடு என்று கேலி செய்வதைக் கண்டு யாரும் வருந்த வேண்டாம். நாம் விரும்புவது வெங்காய நாடுதான்” என்று குறிப்பிட்டு, வெங்காயத்தின் அருமை பெருமைகளை விளக்கினார் அவர்.

“வெங்காய சாம்பாரும், வெங்காய பஜ்ஜியும், வெங்காய தோசையும், வெங்காய வடகமும் எப்படி சிறப்புப் பெற்றவையோ, அப்படித்தான் நாடுகளிலும் வெங்காய நாடு என்று அழைக்கப்படும் திராவிட நாடு சிறந்தது. வெங்காயத்தைக் குறுக்காக வெட்டினால் சக்கரமும், நெடுக்காக வெட்டினால் சங்கும் கிடைக்கும் எனவே வெங்காயம் திருமாலுக்குப் பிடித்தமானது எல்லாவற்றையும் விட, பிரிந்துபோகும் உரிமையுடன் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டாட்சியில் இருக்கும் திராவிட நாட்டுக் கொள்கையை, சில வெங்காயங்கள் ஒன்றாக ஒரே காம்பில் பிரிந்து போகும் உரிமையுடன் ஒரு மேல் தோலியோடு திராவிடக் கூட்டாட்சிக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது. எனவே இத்தகைய சிறந்த உதாரணத்தைக் கற்றுக் கொடுத்த பெரியாருக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார். அப்போது எழுந்த கையொலி மாநாட்டுப் பந்தலையே அதிரச் செய்தது. “திராவிடக் கூட்டாட்சி நாடுகள் நான்கும் ஒன்றோடொன்று இயற்கையால், இனத்தால், மொழியால், வரலாற்றால் உறவால், நாகரிகத்தால், பண்பாட்டால், பழக்க வழக்கங்களால் நெருங்கிய தொடர்புடையனவாகும், தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும்.

தமிழகத்திற்கும் கருநாடகத்திற்கும். தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இருக்கும் தொடர்பு, மாடப்புறாவுக்கும், மணிப்புறாவுக்கும் உள்ளது போன்றது என்று வைத்துக்கொண்டால், திராவிடக்கூட்டாட்சி நாடுகளுக்கும் வட நாட்டுக்கும் உள்ள தொடர்பு, மாடப்புறாவுக்கும் வல்லூறுக்கும் உள்ள தொடர்பாகும். மாடப்புறாவும், மணிப்புறாவும் சேர்ந்து வாழக் கூடியன. மாடப் புறாவும், வல்லூறும் சேர்ந்து வாழக் கூடியன வல்ல. இந்த நான்கு நாடுகளும் வட நாட்டிலிருந்து துண்டித்துக்கொண்டு வாழ முடியும்; வாழ்வது நலம் பயக்கும். திராவிடத்தின் வளமும், வரிப்பணமும் வட நாடு சென்று, வட நாட்டவர்க்குப் பயன்படுவது நின்று, அவை திராவிடருக்கே பயன்படும் நிலை ஏற்படும்” என்றார் திரு. நெடுஞ்செழியன்.

கருநாடகத்திலிருந்து தனிப் பார்வையாளராக வந்திருந்த முன்னாள் நீதிபதி திரு மேடப்பா அவர்கள் திரு சி.என்.ஏ. அவர்கள் தலைமையில் திராவிட நாடு கிடைக்கும் என்ற கருத்தை வெளியிட்டார். எல்லா பேச்சாளர்களிடமும் பெருமளவு கண்ணியமும் கட்டுப்பாடும் இருந்தன. ஆனால் ஒரு சிலர், மாற்றுக் கட்சித் தலைவர்களை... குறிப்பாக மதிப்புக்குரிய காமராஜ் அவர்களைப் பற்றித் தரக் குறைவாகப் பேசியது தான், மாநாட்டு நிகழ்ச்சிகளிலே ஒரு பெரும் குறையாகத் தோன்றியது.

DMK's stunning 1961 Madurai Conference

இம் மாநாட்டிலே கலைஞர்களின் பணி சிறப்பானது. வெள்ள நிவாரண நிதிக்கு பந்தல் வாயிலில் நின்று பணம் வசூலித்தார்கள். ஒவ்வொரு தினமும் நாடகம் நடத்தினார்கள். எம்.ஜி. ராமச்சந்திரன், கே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோரின் நாடகங்கள் நடைபெற்றன. தமிழ் நாட்டு மக்களிடையே இந்த மதுரை மாநாடு ஒரு பெரிய ஆவலையே உண்டாக்கி இருந்தது. தி.மு.க.வும் யூனிஸ்டுகளுடன் கூட்டு சேரப்போகிறது, சுதந்தரக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போகிறது என்றெல்லாம் பல கூற்றுகள் கிளம்பி இருந்தன. திரு அண்ணாதுரை அவர்கள், பத்திரிகை நிருபர்களிடம் பேசும்போதும், தலைமை உரையிலும் இது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டார். தற்போது கூட்டணி எதுவும் இல்லையென்றும், எதிர்க் கட்சிகளுக்குள் ஒருவித உடன்பாடு ஏற்பட்டால் நல்லது என்றும் தெரிவித்தார். அதன்படி, காங்கிரசைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ள கட்சிகள், அதற்கான வழிமுறைகளைக் காணவேண்டும். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குள் போட்டியைத் தவிர்த்து, காங்கிரசைத் தோற்கடிக்க ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். அதைத் தொகுதி உடன்பாடு என்று சொல்லலாம். இந்த ஏற்பாட்டைச் செய்ய பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்குமுன், ஒவ்வொரு கட்சியும் தனது பலத்தையும் தேர்தல் வாய்ப்புக்களையும் மதிப்பிட்டுப் பார்த்துக் கொள்வது தான் அவசியம்’ என்றார் அவர். இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் திராவிட நாடு பிரிவினை பற்றிய தீர்மானம், தேர்தலுக்கு ஆறு மாதம் முன் மந்திரிகள் ராஜினாமா செய்துவிட வேண்டுமென்ற தீர்மானம், ஆகாஷ் வாணியை ‘வானொலி’யாக மாற்ற வேண்டும் என்பது, வடநாட்டுக் கடைகள் முன் அடையாள மறியல் நடத்தும் தீர்மானம் ஆகியவை முக்கியமானவை. பல்லாயிரக் கணக்கான தோழர்கள் பசி. தாகம், ஊண், உறக்கம் இவற்றில் அதிக அக்கறை காட்டாமல் நான்கு நாட்களும் காலை ஒன்பதிலிருந்து இரவு ஒரு மணிவரை நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலுமே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்றால், கழகத்தின் மீது அவர்களுக்குள்ள பற்றுதலுக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

(30.07.1961 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

மேலும் படிக்க மதுரை மாநகரிலே மாபெரும் மாநாடு #AppExclusive
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top