அதிமுக ஜா-ஜெ என்று பிளவுபட்டிருந்த காலத்தில் ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராக களமாடியவர் திருநாவுக்கரசர். தற்போது காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தாலும் அதிமுக விவகாரங்களை உன்னிப்பாக கவனிப்பவர் என்கிற முறையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
``அதிமுக-வில் முன்னணி, முக்கிய தலைவராக இருந்துள்ளீர்கள். இப்போது அக்கட்சியில் நடக்கும் விவகாரங்களை எப்படி பார்க்குறீர்கள்?”
``அதிமுக-வில் பல ஆண்டுகள் பணியாற்றியவன். அதிமுக என்னை வளர்த்திருக்கிறது. நானும் அதிமுக வளர்த்திருக்கிறேன். இளைஞர் அணியில் நான் போட்ட நிர்வாகிகள் ஈ.பி.எஸ் அணியிலும் இருக்கலாம், ஓ.பி.எஸ் அணியிலும் இருக்கலாம். என்னால் கல்லூரிகளில் இருந்து அடையாளம் கண்டு கொண்டுவரப்பட்டவர்கள் தான் இன்று பல பேர் தலைவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய சமகாலத்தில் அண்ணன் பன்ருட்டி ராமசந்திரன், பொன்னையன் போன்றவர்கள் தான் மிச்சம் இருக்கிறார்கள். பல பேர் விலகிவிட்டார்கள். சிலர் தி.மு.க பக்கம் போய்விட்டார்கள், சிலர் இயற்கை எய்துவிட்டார்கள். எனவே இப்போது இருக்கிற அ.தி.மு.க அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள்.
எங்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், இளைஞர் அணி செயலாளர்களாக இருந்தவர்கள் தான் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ல் இருந்து பலர். சிலர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கலாம். சிலர் கையை தொட்டிருக்கலாம். சிலர் அவரின் பேச்சை தூர இருந்து கேட்டிருக்கலாம். அவரை பார்க்காதவர்கள் கூட இருக்கலாம். அது தவறு கிடையாது. ஆனால், இந்த தலைமுறையில் இப்போது இருக்கிற தலைவர்களை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் அ.தி.மு.க-வை உருவாக்கிய தலைவர்களோடு ஒப்பிட முடியாது. அதே நேரத்தில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்னையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களிடையே யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ அவர்கள் தான் வெற்றிபெற முடியும். அப்படி பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சிக்குத் தலைமை ஏற்றாலும், உடன்படாத இன்னொரு தலைவர் மக்களை சந்திக்கும்போது மாற்றம் நேரலாம். அந்த இருவரில் யாருக்கு மக்கள் இடத்தில் ஆதரவு இருக்கிறதோ அவர்தான் இந்த கட்சியின் தலைவராக வருங்காலங்களில் செயல்பட முடியும்”

``உங்களுக்கும் இது போன்ற இரட்டை தலைமை அனுபவம் இருக்கிறதல்லவா?”
``ஆம்... எனக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு வந்த போது அந்த 26 எம்.எல்.ஏ-க்களில் 8 எம்.எல்.ஏ-க்களும், 14 எம்.பி-க்களில் 7 எம்.பி-க்களும் என்னோடு வந்தார்கள். சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயலலிதா, அ.தி.மு.க திரு என்று சபநாயகர் வாய்ப்பளித்தார். இரு அணியும் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். அதில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா பின் இருந்ததால் சின்னம் அவர்களுக்கு கிடைத்தது. தொடர்ந்து பொதுச் செயலாளராக செயல்பட முடிந்தது. அதற்கு மேல் அ.தி.மு.க என்று நான் சொல்ல முடியாது என்பதால் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்று வைத்து கொண்டேன். இது தான் கடந்த கால பார்வை. யாருக்கு பெரும்பான்மை, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கிறதோ அவர்தான் அந்த கட்சியின் தலைமையாகவும், கட்சியை வழிநடத்தவும் முடியும்”
``தமிழகத்தில் இன்றைக்கு வளர்ந்து வரும் பா.ஜ.க உட்பட பல கட்சிகள் சமூக பின்புலம் கொண்ட தலைமையை வைத்து அதிலிருந்து வாக்கு வங்கியை உருவாக்கி தன் செல்வாக்கை நிலைநிறுத்துகிறது என்கிறார்கள். அந்த இடத்தை காங்கிரஸ் தவறவிட்டதா?”
``இந்தியா சாதி கட்டமைப்பு உள்ள நாடு. இருந்தாலும் சாதியை மட்டும் முழுமையாக வைத்து அரசியல் கட்சிகள் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்வதில்லை. அதேநேரம் சாதிக்கான பங்குகள் இல்லாமலும் இல்லை. இருக்கிறது. சமீப காலமாக அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் பணத்திற்கு எப்படி ஒரு பங்கு இருக்கிறதோ அதே போல் தான் இதுவும். இது தவிர்க்க முடியாது. ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தி எப்படி அரசியலில் வெற்றி பெற முடியாதோ அதே போல் ஒரு சாதியை மட்டும் முன்னிலைப்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதும் இருக்கிறது. எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து ஆட்சியிலும், கட்சியிலும் வாய்ப்புகள் கிடைக்கும் போதுதான் அது சமமான வளர்ச்சியாக இருக்கும் முடியும். இல்லாவிட்டால் அதுவே ஒரு கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும்”
``தமிழகத்தில் ‘திராவிட கட்சிகள் தோளில் ஏறிதான் பயணிக்கிறது தேசிய கட்சிகள்’ என்று தொடர் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறதே?”
``கூட்டணி என்பது அவசியத்திற்காக தான் வைத்து கொள்ளப்படுகிறது. திமுக-விற்கு காங்கிரஸ் தேவை, எங்களுக்கும் திமுக தேவை. திமுக தமிழ்நாட்டில் பெரிய கட்சி. எல்லா இடங்களிலும் அமைப்பு ரீதியாக பலமாக இருக்க கூடிய கட்சி. ஆனால் திமுக-வுக்கும் காங்கிரஸ் தேவையாக இருக்கிறது. அதேபோல் இந்திய அளவில் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டு அளவில் சின்ன கட்சியாக இருப்பதால் எங்களுக்கும் திமுக தேவையாக இருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல எதிர் முகாமில் இருப்பவர்களுக்கும் இதே நிலைதான். தேவைகள் அடிப்படையில் இருவர் சேர்ந்து பயணிக்கிறோம். அதற்காக இன்னொருவர் தோளில் ஏறி தொற்றி கொண்டு போகிறார் என்பதெல்லாம் சரியான வார்த்தை இல்லை”

``இந்துத்துவா குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு?”
``இன்று எல்லா கட்சிகளும் மதங்களை-சாமிகளை தீவிரமா எதிர்ப்பதோ அல்லது ஆன்டி இந்துத்துவாவாகவோ இருப்பதில்லை. அப்படி யாரும் அரசியல் நடத்த முடியாது. சிறுபான்மை மக்கள் வேண்டும் அதே நேரத்தில் பெரும்பான்மை மக்களும் வேண்டும். எனவே அரசியல் ரீதியாக வாக்கு வங்கவேண்டும் எனும் போது தங்களது வேகத்தை குறைத்துள்ளனர். சில விஷயங்களில் சமரசமும் செய்ய வேண்டி இருக்கிறது. பெரியார் பேசினார் என்றால் அவர் ஓட்டு கேட்கவில்லை. அதே வேலையில் ஒரு ஆட்சி மதசார்புடைய ஆட்சியாகவும் இருக்க கூடாது. எல்லா மதங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சாதி அமைப்பு, மத பின்னணி கொண்டும் சில கட்சிகள் செயல்பட்டு, இல்லை என்று வெளியே சொல்லலாம். ஆனால், அதன் கட்டமைப்பு, நிர்வாகிகள், செயல்பாடுகள், யாரை சார்ந்து யாருக்காக அரசியல் செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒரு சில கட்சிகளுக்கு அது தான் முதுகெலும்பு, அஸ்திவாரமாக இருக்கும். இங்கு எல்லா மொழியும், மதமும், சாதியும் சமம் தான். அவரவர் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப அவரவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும், வளர்ச்சிக்கான பலன்களும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி எல்லோரையும் பொதுவாக நடத்தக் கூடிய கட்சி இருக்கிறது.”
``’சமீபத்தில் ராகுல் காந்தி விசாரணைக்காக சென்ற போது நடந்த போராட்டம் போல், மக்கள் பிரச்சினைக்கு காங்கிரஸ் நடத்தியுள்ளதா?’ என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே”
``இது உணர்ச்சி பூர்வமாக ஏற்பட கூடிய விஷயம். சித்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியாக, பொருளாதார ரீதியாக நடக்கும் ஆர்பாட்டங்கள் வேறு. உணர்ச்சியின் அடிப்படையில் நடக்கும் விஷயம் வேறு. அதேவேலையில் ஜி.எஸ்.டி, வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இந்துத்துவா முன்னிறுத்தப்பட்டு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக செயலாற்றும் போது, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தலித் பிரச்னைகள், விலைவாசி உயர்வு... என மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகளில் இருந்து பெரிய பிரச்னைகள் வரை ஒவ்வொன்றுக்கும் முதல் குரல் கொடுத்ததோடு களத்திலும் போராடியது ராகுல் காந்தி. அகில இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், அடையாளம். அவருக்கே பிரச்னை வரும் போது தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவது, எல்லா இடங்களிலும் போராடுவது இயற்கை”

``ராகுல் மீது நடத்தப்பட்ட விசாரணை அரசியல் காரணங்களுக்காக மட்டுமா?”
``ஆம்... மோடியை ஒவ்வொரு கூட்டத்திலும் விமர்சிக்கும் போது ‘நான் ஊழல் அற்றவன். அதனால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது’ என்று பேசுவார். அதற்காகவே மக்கள் மத்தியில் இவர் மீதும் தவறு இருக்கிறது என்று காட்டி கொள்வதற்காக ஏழு நாள்கள், ஐம்பது மணி நேரங்களுக்கு மேல் விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலை கொடுத்திருக்கிறார்கள். எந்த நாட்டிலும் சர்வாதிகாரி கூட சம அந்தஸ்தில் இருக்கும் தலைவரை இது போல் மோசமாக நடத்தமாட்டார். இதனால் நம் நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது”
``தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸை மீட்டெடுக்க என்ன வழி?”
``தேர்தலில் தோல்வியடைந்த பின் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்து, மற்றவர்கள் யாராவது வழி நடத்துங்கள் என்று ஒரு வாய்ப்பும் கொடுத்தது ஜனநாயக பண்பு. ஆனால், எல்லா மாநிலத்தில் இருக்க கூடிய தலைவர்கள், மக்கள், தொண்டர்கள் ஏற்று கொள்ளக் கூடிய பொதுவான தலைவர்கள் யாரும் இல்லையே! இந்த சூழ்நிலையில் மீண்டும் அவரே தலைமை ஏற்று நடத்த வேண்டும். ரோட் ஷோ, மக்களை சந்திப்பது என பயணங்களை கடுமையாக மேற்கொண்டு கட்சியை வேகப்படுத்தினால் தான் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அவரும் தலைமை ஏற்காமல், சோனியா காந்தி அம்மாவும் பிரசாரம் செய்யாமல் யாரை முன்னிலைப்படுத்தி தொண்டர்கள் கட்சியை பலப்படுத்த முடியும். மக்களை சென்றடைய முடியும். இதுவே சரியான தருணம். ராகுல் காந்தி இனியும் காலம் தாழ்த்த கூடாது. அவர் தலைமை பொறுப்பை ஏற்று நாடு முழுவதும் சூறாவளி சுற்றுபயணத்தை ஆரம்பிக்க வேண்டும்”
மேலும் படிக்க ``அதிமுக என்னை வளர்த்திருக்கிறது; நானும் அதிமுக-வை வளர்த்திருக்கிறேன்” - திருநாவுக்கரசர்