மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தில் உள்ள போர்பதேவ் என்ற கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரின் கணவர் தனது மனைவியை காணவில்லை என்று கூறி புகார் செய்திருந்தார். ஆனால் அதே கிராமத்தில் அப்பெண் தனது ஆண் நண்பர் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்து தெருவிற்கு இழுத்து வந்த அவரின் கணவர் தனது மனைவியை கடுமையாக அடித்து உதைத்தார். அவரோடு சேர்ந்து கிராம மக்கள் 12 பேர் அப்பெண்ணை அடித்து உதைத்து அவமானப்படுத்தினர்.

அவரின் கணவர் அப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். வயதான பெண் ஒருவரை அவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அப்பெண்ணை அவரின் கணவர் தன்னிடம் இருந்த பெல்ட்டால் அடித்து உதைத்தார். அவர்களை சுற்றி நின்ற யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன் வரவோ அல்லது தட்டிக்கேட்கவோ இல்லை. அதிகமானோர் அப்பெண்ணை அடித்து உதைப்பதில்தான் தீவிரமாக இருந்தனர். இச்சம்பவத்தின் போது அப்பெண்ணின் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் அங்குதான் இருந்தார்.
அதோடு விடாமல் அப்பெண்ணை அரைநிர்வாணமாக்கி அவரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தனர். மேலும் அவரின் கணவரை அப்பெண்ணின் தோளில் தூக்கி வைத்து கிராமம் முழுக்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதனை கிராம மக்கள் அனைவரும் தெருவில் நின்று கொண்டு வீடியோ எடுத்ததோடு கிண்டல் செய்தனர். இதில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது.
கிராமத்தை சேர்ந்த ஒருவர் இந்த கொடூரச்சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு பத்திரமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இக்கொடிய காரியத்தில் ஈடுபட்ட அப்பெண்ணின் கணவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பெண்ணிடம் இது குறித்து கேட்டதற்கு, தனக்கு 15 வயதில் திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் அதனால்தான் வீட்டைவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க ம.பி: வீட்டில் கொடுமை; ஆண் நண்பருடன் சென்ற பெண் - அரை நிர்வாணமாக்கி கணவனை சுமக்க வைத்த கிராமத்தினர்