திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகன் அழகுவிஜய் (23) கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் தெருவுக்கு பக்கத்து தெருவில் குடியிருப்பவர் தமிழ்செல்வன். இவருக்கு கூலி வேலை செய்துவரும் அஜித்குமார்(26) என்ற மகனும், பிளஸ் 2 முடித்து கல்லூரி சேருவதற்காக வீட்டில் இருக்கும் 17 என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக அழகுவிஜய்யும், அச்சிறுமியும் பழகிவந்துள்ளனர். இதையறிந்த இருவீட்டாரும் 2 முறை கண்டித்துள்ளனர். அப்போதும் அச்சிறுமி, அழகுவிஜயை விரும்புவதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை சேடப்பட்டி மக்கள் பலரும் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றனர். ஊரில் யாரும் இல்லாததால் இரவு அச்சிறுமியைக் காண அழகுவிஜய் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென அச்சிறுமியின் அண்ணன் அஜித்குமார் வந்து இருவரையும் பார்த்துள்ளார். ஏற்கெனவே எச்சரித்தும் வீட்டிற்கே வந்து அழகுவிஜயை சரமாரியாக தாக்கியுள்ளார். தடுக்க முயன்ற தங்கையை வீட்டில் உள்ள அறையில் வைத்து பூட்டிவிட்டு, தோட்டத்து பகுதிக்கு அழகுவிஜயைத் தூக்கிச் சென்று தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, தனது தந்தைக்கு தகவல் கொடுத்து தோட்டத்துக்கு வரவழைத்து அழகுவிஜயின் உடலை சாக்கு மூட்டையில் திணித்து கட்டி டிவிஎஸ் எக்ஸ்.எல் வண்டியின் முன்பகுதியில் வைத்து 16 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆத்தூர் காமராஜர் அணையை ஒட்டிய காட்டுப்பகுதிக்கு சாக்குமூட்டையைப் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து அஜித்குமார் தப்பிச்சென்றுவிட, தமிழ்செல்வன் வீட்டிற்கு வந்துள்ளார்.
காலை சாலை முழுவதும் ரத்தம் சிந்திக் கிடப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அழுகுவிஜயும் காணவில்லை என்பதால் போலீஸார், தமிழ்செல்வன் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து இரவு நடந்த கொலை குறித்து தமிழ்செல்வன் கூறியுள்ளார். இதையடுத்து செம்பட்டி போலீஸார் அணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்த அழகுவிஜயின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., முருகேசன் மற்றும் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து சிறுமியின் தந்தை தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து காட்டுக்குள் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க திண்டுக்கல்: தங்கையை காதலித்தவரை, கொன்று காட்டுக்குள் வீசிய அண்ணன் - நடந்தது என்ன?