நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன்ஸ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை ராகவேந்திரா நகரில் எஸ்.பி.கே கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் செய்யாத்துரை மற்றும் அவரின் மகன்கள் வீடு உள்ளது. வரிஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த இரண்டு தினங்களாக செய்யாத்துரை, அவரின் மகன்களுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். கடந்த 6-ந்தேதி காலை 8.30 மணிக்கு 7 கார்களில் மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

முதல் நாள் சோதனையில், எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் செய்யாதுரைக்கு சொந்தமான வீடுகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, செய்யாத்துரை, அவரின் மகன்கள் கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன், பாலசுப்பிரமணி ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தனித்தனிக்குழுக்காளாக விசாரனை நடத்தியதாக தெரிகிறது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், வங்கி கணக்கு வரவு செலவுகள், முக்கிய ஆவணங்கள் நிலுவையில் உள்ள பணம், செட்டில்மென்ட் தொகை, டெண்டர் விவரங்கள் குறித்து வருமானவரித்துறையினர் கேள்விகள் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையை முடித்துக்கொண்டு, செய்யாத்துரை வீடு, எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை 4 பெட்டிகளில் எடுத்துச்சென்றதாக சொல்லப்படுகிறது. இதுதவிர லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைபற்றி எடுத்துச்சென்றுள்ளனர்.
மேலும் படிக்க ஒப்பந்ததாரர் வீட்டில் முடிவுக்கு வந்த ரெய்டு... ஆவணங்களை பெட்டிகளில் எடுத்துச் சென்ற ஐடி அதிகாரிகள்!