தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெயின்டரான சரவணகுமார், தாளமுத்துநகரில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள சிலருடன் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் பிரையண்ட்நகரில் வந்து குடியேறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்றுமுந்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது உறவினர் சிவாவை மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக தனது தம்பி முகேஷ்கண்ணனுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மூவரும் பேருந்து நிலையத்திற்குள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சரவணக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், சரவணக்குமாரின் இரண்டு மணிக்கட்டுகளும் துண்டாகின. தலை, கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். ஆய்வாளர் ரபிசுஜின் ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ``சரவணகுமாரோட நண்பர் ராஜாமணிக்கும், மனோவா ரோஸிங்கிறவருக்கும் மூணு வருஷமா முன் விரோதம் இருந்து வந்துச்சு. இதுல ராஜாமணி, சரவணக்குமாரோட சேர்ந்து மனோவா ரோஸை கொலை செஞ்சுடுவேன்னு சொன்னார்.

கொலை செய்ய திட்டமும் போட்டு ஒரு வாரமா தேடிக்கிட்டு இருந்தாங்க. இது மனோவா ரோஸுக்கு தெரிஞ்சு போச்சு. அவருக்கு நாங்க நெருக்கமா இருக்குறதுனால எங்களையும் டார்கெட் பண்ணினார். `அவங்க நம்மளைக் கொலை செய்யுறதுக்கு முன்னால நம்மளே அவங்க ரெண்டு பேரையும் கொலை செஞ்சுடுவோம்’னு எங்ககிட்ட சொன்னார் மனோவா ரோஸ். ராஜாமணியோட அப்பா ரெண்டு நாளுக்கு முன்னால இறந்து போயிட்டார்.
அதனால அவர் வீட்டை விட்டு வெளிய வரலை. இந்த நிலையில சரவணக்குமாரை கண்காணிச்சதுல அவர் புதிய பஸ்ஸடாண்ட்ல இருக்குறதா எங்களோட நண்பர் ஒருத்தார் சொன்னார். ராஜாமணியை அப்புறம் பார்த்துகலாம், கையில கிடைச்ச சரவணக்குமாரை முதல்ல கொன்னுடுவோம்னு மனோவாரோஸ் சொன்னதுனால பஸ் ஸ்டாண்ட்ல வச்சு அரிவாளால வெட்டினோம்” என்றனர்.

அந்த 2 சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனோவா ரோஸ், அவரது நண்பர்களான துரைசாமி, கார்த்திகேயன் ஆகியோரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்திற்காக காத்திருந்த பயணிகள், அப்பகுதி வழியேச் சென்றவர்கள் உள்ளிட்டோர் இக்கொலைச் சம்பவத்தைப் பார்த்து பதறி ஓடினர். அந்த கும்பலிடம் சரவணக்குமார் தன்னை வெட்ட வேண்டாம் என கைகூப்பி உயிருக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் படிக்க ``எங்களைக் கொலை செய்ய ப்ளான் பண்ணினார்... நாங்க முந்திக்கிட்டோம்” - 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்