யூரோ டூர் 49: மனித கடத்தல், புகலிடக் கோரிக்கை - சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஐரோப்பா என்ன செய்யும்?

0

சொந்த நாட்டை, சொந்த சமூகத்தை என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு புதிய வாழ்க்கையை, புதிய சட்டங்களை, புதிய கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளை, வெவ்வேறு மொழிகள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களை எதிர்பார்த்து, ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு தம் உயிரைப் பணயம் வைத்துச் செல்பவர்களுக்கு மிஞ்சுவது அவர்கள் எதிர்பார்த்த சுகபோக ஆடம்பர வாழ்க்கையா இல்லை அதிர்ச்சியும், ஏமாற்றமுமா?

ஐரோப்பிய அரசாங்கத்தை ஏமாற்றி விசா வாங்குவது, விசா காலக்கெடு முடிந்த பின்னரும் அங்கேயே திருட்டுத்தனமாகத் தங்கியிருப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவருக்கு ஐரோப்பா கொடுக்கும் அதிகபட்ச தண்டனை என்ன?

மனித கடத்தலும் புலம்பெயர்ந்தோர் கடத்தலும்

'Migrant smuggling' என்பது உலகளாவிய அளவில் பெருகி வரும் ஒரு குற்றச் செயல். குறிப்பாக ஐரோப்பா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இது. வறுமை, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமின்மை, யுத்தம் போன்ற பல காரணிகளுக்காக மக்கள் தமது சொந்த நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். இவ்வாறானவர்களின் பிரதான சாய்ஸ் வளர்ந்த முதலாம் உலக நாடுகள். இந்த நாடுகளுக்கு சட்டப்பூர்வ இடம்பெயர்வு வழிகள் மிகக் கடினமானதாகவும் குறைவாகவும் இருப்பதால் சட்டவிரோத குடியேற்றம் என்பதை மட்டுமே ஒரே வழியாகப் பார்க்கிறார்கள்.

Alan Kurdi

ஐரோப்பாவுக்குள் அவர்களின் அங்கீகரிக்கப்படாத நுழைவு நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிரக் குறைந்தபாடில்லை. இந்த நிலை சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றவியல் நெட்வொர்க்குகளை நோக்கி மக்களைத் தள்ளுகிறது. உயிரைப் பணயம் வைத்து இவர்கள் மேற்கொள்ளும் பயணம் பெரும்பாலும் வன்முறையிலும், ஆபத்திலும் முடிவடைகின்றன. மத்தியதரைக்கடலில் இறந்து கிடந்த சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் Alan Kurdi-யின் மரணம் இந்த அவலத்தின் துயரத்தை உலகுக்குக் காட்டியது. இருந்தாலும் நிலைமை மாறியதா? சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவ்வழியாக ஐரோப்பாவுக்கு உள்ளே நுழைக்கின்றனர்?

ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு எல்லைகளைத் தாண்டிச் செல்லும்போது, ஒரு சில சட்ட ஆவணங்கள் அவசியம் இருக்க வேண்டும். அதே போலச் செல்லும் நாட்டின் வரையறுக்கப்பட்ட குடியேற்றச் சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். தேவையான சட்ட ஆவணங்கள் இல்லாமல் ஒரு நாட்டிற்குச் சென்றாலோ அல்லது அந்த நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறினாலோ, சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவோ இல்லை நாடு கடத்தவோ அந்நாட்டு குடிவரவு குடியாகழ்வு திணைக்களத்துக்கும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் முழு அதிகாரம் உள்ளது.

ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் வெறும் ஆசிய ஆப்பிரிக்க நாட்டவர் மட்டுமல்ல. கிழக்கு ஐரோப்பாவின் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அடங்காத நாட்டவர், சில்லி, மெக்ஸிகோ, அர்ஜன்டீனா போன்ற கிழக்கு அமெரிக்க நாட்டவர்கள் கூட பெருமளவில் ஐரோப்பாவை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

சமீபத்தைய கணக்கீடுகளின்படி, 2022-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததிலிருந்து கிட்டத்தட்ட 27,000 ஆக, அதாவது 61% உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பிரதான டார்கெட் மேற்கு பால்கன் பாதை (Western Balkan Route). இங்குதான் ஐரோப்பாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத Boarder crossing பதிவாகின்றன. 2022-ன் முதல் இரண்டு மாதங்களில் சிரியர்கள் மற்றும் ஆப்கானியர்கள் இந்த வழியாக எல்லையைக் கடக்க முயன்ற இரண்டு முக்கிய தேசிய இனங்கள் எனப் பதியப்பட்டுள்ளது.

மேற்கு பால்கன் பாதை (Western Balkan Route) நன்றி: DER SPIEGEL

Western Balkan Route-ற்கு அடுத்த படியாக ஐரோப்பாவுக்குள் நுழைய இவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி மேற்கு ஆப்பிரிக்கப் பாதை (Western African Route). ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் செல்லும் மேற்கு ஆப்பிரிக்க வழியே ஐரோப்பாவுக்குள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் உட்புகும் இரண்டாவது முக்கிய வழி. இந்தப் பாதை வழி வந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் மொராக்கோக்காரர்களும் கினியா மற்றும் செனகல் போன்ற நாட்டவர்களும் ஆவார்.

அதே போலக் கிழக்கு மத்தியதரைக்கடல் (Eastern Mediterranean) வழித்தடத்தில் கண்டறியப்பட்ட சட்டவிரோத எல்லை கடப்புகளின் எண்ணிக்கை 3500 ஆக, அதாவது சென்ற வருடத்தை விடவும் இருமடங்காக அதிகரித்துள்ளது. சைப்ரஸ்ஸில் மட்டும் 2700க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிடிபட்டு உள்ளனர். கொங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, பாகிஸ்தான், சிரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த வழியைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குள் நுழைக்கின்றனர்.

மத்திய மத்திய தரைக்கடல் பாதையை (Central Mediterranean Route) பங்களாதேஷ், எகிப்திய மற்றும் துனிசியன் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைக்கின்றனர். அல்ஜீரியர்கள் மற்றும் மொராக்கோக்கள் மேற்கு மத்திய தரைக்கடல் பாதை (Western Mediterranean Route) வழியாகப் பெருமளவில் ஐரோப்பாவுக்குள் உட்புகுகின்றனர். அதுவே கிழக்கு நில எல்லைப் பாதை (Eastern Land Border Route) வழியே இவ்வருடம் மிக அதிகளவான மக்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லறையாக மாறும் கடல்

"மத்திய தரைக்கடல் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் மிகப்பெரிய கல்லறையாக மாறி வருகிறது" என்று சிசிலி பிராந்தியத்தின் தலைவர் நெல்லோ முசுமேசி சமீபத்தில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். தினம் தினம் மத்தியதரைக்கடலில் உயிருக்குப் போராடும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஐரோப்பா கடற்படையும், காவல் படையும், NGOக்களும் தொடர்ந்து மீட்டெடுத்த வண்ணமே உள்ளன.
படகில் வரும் அகதிகள்

பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் என எந்தப் பேதமும் இன்றி வகை தொகையாக வந்திறங்குகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உயிரற்ற உடல்களாகவே வந்து சேருகின்றனர். மீதியும் பெரும்பாலும் தீக்காயங்களுடனும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும்தான் வருகின்றனர். இதை ஒரு தொழிலாகவே செய்யும் ஏஜெண்டுகள், ஆட்டு மந்தைகள் போல இவர்களைக் கும்பல் கும்பலாக ஏற்றி, மூச்சு விடமுடியாத ஒரு கண்டெய்னரிலோ, இல்லை சிறிய மீன்பிடி படகிலோ அடைத்து அனுப்பி விடுகின்றனர். விபச்சாரம், போதை வஸ்து போன்றவற்றிற்கு அடுத்தபடியாக கள்ளச்சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் முக்கிய வணிகமாக இந்த ஆட்கடத்தல் மாறியுள்ளது.

இந்த வருடம் மாத்திரம் 3,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயன்றபோது இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐநாவின் அகதிகள் நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரின் கூற்றுப்படி, COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளினதும் எல்லைகள் மூடப்பட்டதை அடுத்துப் பல அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவை அடைய சமூக விரோத ஆட்கடத்தல் கும்பலை அணுகத் தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. கடந்த ஆண்டு இத்தாலியில் 53,000-க்கும் மேற்பட்ட மக்களும், ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு 23,000-க்கும் அதிகமான மக்களும் கடல் வழியாக வந்துள்ளனர்.

புகலிட கோரிக்கையாளர்களும் ஐரோப்பாவும்

உலகில் பெரும்பாலான மக்கள் தமது பிறந்த, வளர்ந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு வெளியேறிய அனுபவம் பெற்றிருப்பர். சில வேளை அவர்கள் அயலில் இருக்கும் கிராமம் அல்லது நகரம் வரை மட்டுமே நகர்வார்கள். சிலர் பக்கத்து நாட்டுக்குத் தற்காலிகமாக நகர்வார்கள். ஆனால் சிலருக்கு, நிரந்தரமாகவே தங்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் மக்கள் பாதுகாப்பான, சிறந்த வாழ்க்கையைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால் இவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி சட்ட விரோதமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

அகதிகள்

சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் தொடங்கும் இந்தப் பயணங்கள், நிச்சயமின்மை மற்றும் ஆபத்து நிறைந்ததாகவே இருக்கும். இவர்கள் மனித கடத்தல் மற்றும் பிற சுரண்டல்களுக்கு இரையாகும் அபாயம் அதிகளவில் உள்ளது. புதிய நாட்டிற்கு வந்தவுடன் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படும் இவர்கள் சில சமயங்களில் ஆயுள் முடியும் வரை சிறையிலேயே கழிக்கும் துர்ப்பாக்கிய சூழலைக் கூட எதிர்கொள்ளலாம்.

சட்டவிரோத குடியேற்றமும் சமூக அவலங்களும்

வசிப்பதற்கு மலிவான வீடுகளைக் கண்டுபிடித்தல், வேலை தேடுதல், அந்த நாட்டின் மொழியை ஓரளவுக்காவது கற்றுத் தேறுதல், அந்தச் சமூகத்தில் காணப்படும் இனவாதம் மற்றும் பாகுபாடு தடைகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளுதல், சமூக அணுகுமுறைகள், குழந்தைகளுக்குப் பாதியிலேயே சீர்குலைந்த பள்ளிக்கல்வியின் தாக்கத்தைச் சரிசெய்தல், சொந்த நாடு மற்றும் குடும்பங்களுடனான தொலைவு மற்றும் தொடர்பு இல்லாமை, கூட வந்த உறவுகளைப் பாதியிலேயே பறிகொடுத்த, உயிர் பிழைத்தவர்களின் குற்ற உணர்வு உட்பட அதிர்ச்சியின் காரணமாக வரும் மனநலப் பிரச்னைகள், நிதி சிரமங்கள், விசா பாதுகாப்பின்மை, மீண்டும் சொந்த நாட்டுக்கே 'deport' செய்யப்படும் நிலை, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரித்தல், கலப்பு குடும்பங்களில் வாழ்க்கை எனத் திருட்டுத் தனமாக ஐரோப்பாவுக்குள் புகும் மக்கள் சந்திக்கும் கஷ்டங்கள் ஆயிரம் ஆயிரம்.

ஐரோப்பிய நாட்டில் ஒருவர் சட்டவிரோத குடியேற்றவாசி என எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

ஐரோப்பிய நாடுகளுக்குக் குறிப்பிட்ட விசாவில் வரும் ஒருவர், அந்த விசாவின் ஏதேனும் ஒரு நிபந்தனையை மீறும் பட்சத்தில் அவர் சட்ட விரோத குடியேற்றவாசி என்று முத்திரை குத்தப்படுக்கிறார்.

ஸ்டூடண்ட் விசா

மேற்படிப்புக்கு என வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் ஒரு வாரத்துக்கு 20 மணி நேரங்களுக்கு மிகையாக வேலை செய்ய முடியாது. அதே போல அந்தந்த நாட்டு வருமானவரி சிஸ்டம் ஊடாக மாத்திரமே அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும். மாறாக 'cash in hand' முறையில் வேலை செய்பவர்கள், மற்றும் 20 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்பவர்கள், படிப்பிற்காக வந்து ஆனால் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி பக்கமே செல்லாமல் வேலை செய்பவர்கள் மற்றும் ஸ்டூடண்ட் விசா முடிந்த பின்னும் தங்கியிருப்பவர்கள் எல்லாம் உடனுக்குடன் 'deport' செய்யப்படுவர். அதன் பின் குறைந்தபட்சம் அடுத்த 10 வருடங்களுக்கு அந்த நாட்டுப் பக்கம் தலைவைத்துக் கூட அவர்களால் படுக்க முடியாது.

ஐரோப்பாவுக்குள் குடியேறுபவர்கள்

வொர்க் பெர்மிட் விசா

ஒரு ஐரோப்பிய நாட்டில் உள்ள கம்பெனிக்கு வொர்க் பெர்மிட் விசாவில் வருபவர்கள், அந்தக் கம்பெனியை விட்டு வேறொரு கம்பெனியில் வேலை செய்தாலோ, இல்லை கொஞ்சம் அதிகமாகக் காசு பார்க்கலாம் என்ற நப்பாசையில் இன்னுமொரு நிறுவனத்தில் 'second job' ஒன்றைத் தேடிக்கொண்டாலோ இல்லை விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்தாலோ, உடனடியாகப் பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவர்.

விசிட் விசா அல்லது டூரிஸ்ட் விசா

ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கப் போகிறேன் என டூரிஸ்ட் விசாவில் வரும் ஒருவர், ஒரு நிமிடம் கூட ஐரோப்பாவில் வேலை செய்ய முடியாது. அதே போல விசிட் விசாவில் வேலை தேடுபவர்கள், விசா கால எல்லை முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள் போன்ற எல்லாருமே 'illegal immigrant' என்ற கேட்டகரியில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் இல்லை உடனடியாக நாடு கடத்தப்படுவர்.

ஐரோப்பாவுக்குள் வரும் அகதிகள் எல்லாரும் ஒரே விதமாகவே நடத்தப்படுகின்றனரா?

ஆரம்பத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களை தமது நாட்டிலே ஏதோ ஒரு ஜனத்தொகை குறைந்த இடத்தில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் வைத்திருந்த ஐரோப்பிய நாடுகள், தற்போது அவர்களை எல்லாம் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு மூட்டை கட்டி அனுப்பத் தொடங்கியுள்ளன. இவ்வளவு நாளும் தமது நாட்டின் மக்காத குப்பைகளையும், மின்னணு கழிவுகளையும் ஆப்பிரிக்காவுக்குள் தள்ளிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது அகதிகளையும் சேர்த்து அங்கே அள்ளிப்போட ஆரம்பித்து உள்ளனர்.

இங்கிலாந்து டென்மார்க் போன்ற சில நாடுகளின் அரசாங்கம், சிரியா, சூடான் மற்றும் ஈரான் போன்ற அரசியல் ரீதியாக நிலையற்ற, மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்புவது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்து இட்டது. இதற்கு விலையாக சுமார் 142 மில்லியன் அமெரிக்க டாலர்களை யு.கே. செலுத்தியுள்ளது. ஆனால் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விமானம் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆயினும் அகதிகளை ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அனுப்புவதில் ஐரோப்பிய நாடுகள் பின்வாங்குவதாக இல்லை. ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம் அவர்களை இனிமேல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் கனவுக்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என இவர்கள் காத்திரமாகக் கூறுகிறார்கள்.

அகதிகள் முகாம்

ஐந்து வருட ருவாண்டா திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் தம்மிடம் தஞ்சம் கோரும் அகதிகளை அப்படியே ருவாண்டாவிற்கு அனுப்புகின்றன. அங்கே அவர்களுக்கு நிரந்தர அகதி அந்தஸ்து வழங்கப்படலாம். இல்லையெனில், அவர்கள் வேறு அடிப்படையில் அந்த நாட்டில் குடியேற விண்ணப்பிக்கலாம், அல்லது "பாதுகாப்பான மூன்றாவது உலக நாட்டில்" குடியேறுவதற்கான அனுமதியை ரூவாண்டா அரசிடம் கோரலாம் என்பது இந்தத் திட்டத்தின் தெரிவுகள். ஆனால் இது ஐரோப்பாவை நோக்கி வரும் எல்லாருக்கும் பொதுவான ஒரு முடிவா என்றால் அங்குதான் ஐரோப்பியரின் நிறவெறி எட்டிப்பார்க்கிறது.

ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் அகதிகளை எல்லாம் ஆப்பிரிக்கா காடுகளுக்கு நாடுகடத்த மும்முரமாக இருக்கும் ஐரோப்பா, உக்ரைன் அகதிகள் விவகாரத்தில் நடந்து கொள்ளும் விதம் அப்படியே முன்னுக்குப் பின் ஏன் முரணாக இருக்கிறது?

கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் அகதிகளைச் சிவப்பு கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்கின்றன. அவர்கள் யாருமே அகதி முகாம்களுக்கு அனுப்பப்படவில்லை. ஒன்று ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். இல்லை அரசு அவசர அவசரமாகக் கட்டிய வீடுகள் வழங்கப்பட்டன. ஏன் பல அகதிகளுக்கு ஐரோப்பிய மக்களே தங்கள் வீடுகளில் தங்க அனுமதி கொடுத்தனர். அனைத்து ஐரோப்பியப் பாடசாலைகளிலும் உக்ரைன் மாணவர்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய கம்பெனிகளும் உக்ரைன் அகதிகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட அப்ளிகேஷன் லிங்க்கையே உருவாக்கி உடனடி வேலைவாய்ப்பை வழங்கியது.

அப்படியென்றால் மனித நேயம், சமத்துவம் பற்றியெல்லாம் உலகுக்கு வகுப்பெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் செய்யும் உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா? இதற்கான பதிலை சமீபத்தைய ஹங்கேரி வெளி விவகார அமைச்சரின் உரை சொல்லியது. “We’re not pro-immigration, we’re pro-Hungarian interests” என்ற ஹங்கேரி அமைச்சர் János Lázár-இன் பேச்சு, இந்தப் பிரச்னைக்கு வேறொரு கோணத்தை வழங்கியது. “அகதிகள் எங்களுக்கு வேண்டாம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஹங்கேரியில் எந்த வேலையும் இல்லை. ஐரோப்பிய ஆணையத்தின் ஒதுக்கீடு முறைக்கான திட்டங்களுக்கு ஹங்கேரி எந்தவித ஒத்துழைப்பையும் வழங்காது, அதேபோல ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து அனுப்பப்படும் அகதிகளையும் ஹங்கேரி திருப்பி அனுப்பிவிடும்” என்று கூறி இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அகதிகள்

உக்ரைனிய அகதிகளை ஒரு விதமாகவும், ஏனைய நாட்டு அகதிகளை வேறு ஒரு விதமாகவும் என ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒரு நாட்டில் தமக்குப் பாதுகாப்பு இல்லை என நினைப்பவர்கள் தமக்கு அருகிலுள்ள பாதுகாப்பான நாட்டுக்குத்தானே செல்ல வேண்டும்? எதற்காக அவர்கள் கடல் கடந்து, கண்டங்கள் கடந்து, ஐரோப்பாவை நோக்கி வரவேண்டும்? அப்படியாயின் அவர்கள் நோக்கம் உண்மையாகவே பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதா இல்லை ஐரோப்பாவை நோக்கிச் செல்வதா? ஐரோப்பாவின் மனித உரிமைகள் சட்டங்களை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முனைக்கிறார்கள். எனவே இவ்வாறானவர்களுக்கு நாங்கள் அகதி அந்தஸ்து கொடுத்து எங்கள் நாட்டில் இடம் தரத் தேவை இல்லை.

சிரியாவில் பிரச்னை என்றால் அவர்கள் துருக்கி, லேபோனான், ஜோர்டான் போன்ற அயல் நாடுகளுக்குப் பாதுகாப்பாகச் செல்வதை விட்டு விட்டு, சிறிய மீன்பிடி படகுகளிலும், பொருள்கள் ஏற்றும் கண்டெய்னர்களிலும் ஒளிந்துகொண்டு எதற்காகப் பல மைல் தூரம் பயணித்து ஐரோப்பாவை நோக்கி வரவேண்டும்? நாங்கள் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறோம். ஏனெனில் அவர்கள் எங்கள் அயல் நாட்டவர். அதுவே ஆப்கானிஸ்தான் அகதிகளை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளத் தேவை இல்லை” போன்ற ஒரு வாதத்தை முன்வைத்தார்.

யோசித்துப் பார்க்கும் போது ஒருவகையில் இதுவும் சரியாகத்தான் தெரிகிறது. இலங்கை உள்நாட்டுப் போரின் போது அகதிகளாக இடம் பெயர்ந்த பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா என்றுதான் போனார்களே தவிர இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவுகள் போன்ற அயல் நாடுகளுக்குச் சென்றவர்கள் மிகக்குறைவு. அப்படிப் போனவர்களும் கூட ஒன்று ஐரோப்பா, கனடா என மேற்குலக நாடுகளுக்குச் செல்வதற்கு வசதி வாய்ப்பு அமையாதவர்கள் அல்லது முயற்சி செய்து தோற்றவர்கள் மட்டுமே.

அதே போல இலங்கை உள்நாட்டு யுத்தத்தைக் காரணமாக வைத்து, பல தென்-இந்தியர்கள் கூட இலங்கை போலி பாஸ்போர்ட் தயாரித்து ஐரோப்பாவுக்குள் நுழைந்து அகதி அந்தஸ்து கோரி இன்று குடியுரிமையும் வாங்கிவிட்டார்கள். அகதியாகப் போனவர்கள் பிறகு தமது நாட்டில் நிலைமை என்னதான் சாதகமாக மாறினாலும் மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்ப விரும்புவதில்லை. அப்படியாயின் இவர்கள் நோக்கம் அந்தச் சந்தர்ப்பத்துக்கு தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதா, இல்லை சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஐரோப்பா

எது எப்படி இருந்தாலும், இதற்கு எல்லாம் ஆதார அடிப்படைக் காரணம் ஒன்றுதான். 'The History repeats' என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் காலனித்துவ ஆட்சியில் ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் மொத்தமாக ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் படையெடுத்தனர். அங்கு இருந்த செல்வம் மொத்தத்தையும் சுருட்டி வாரி எடுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் அன்று செல்வங்களையும் வளங்களையும் திருடி, நம்மை அடிமைப்படுத்தி இருக்காவிட்டால், இன்று இந்தியா, கென்யா, உகாண்டா, கொங்கோ என அத்தனை நாடுகளும் செழிப்பாக இருந்திருக்கும். அன்று அவர்கள் விதைத்த விதை இன்று விருட்சமாக அவர்களை நோக்கியே வளர்கிறது. 'Karma is a boomerang' என்று சும்மாவா சொன்னார்கள்?

ஐரோப்பா என்பது சட்டப்பூர்வமான ஆவணங்களுடனும், உரிமைகளுடனும் வாழ்பவர்களுக்கு மட்டுமே பெரும் சொர்க்கம். இல்லாதவர்களுக்கு அது ஒரு பெரு நரகம்!

யூரோ டூர் போலாமா?!


மேலும் படிக்க யூரோ டூர் 49: மனித கடத்தல், புகலிடக் கோரிக்கை - சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஐரோப்பா என்ன செய்யும்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top