நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களாக சாலையில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிப்பம்பை அகற்றாமல் அலட்சியமாக அப்படியே கான்கிரீட்டை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இங்கே கான்கிரீட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை அ.தி.மு.கவைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அடிபம்பை அகற்றாமல், அதனைச் சுற்றி அப்படியே கான்கிரீட் போடப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, ஒப்பந்ததாரர் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தில் இதுபோல் நடந்து சர்ச்சையான நிலையில், தற்போது அதேபாணியில் ராசிபுரம் பகுதியில் 'சம்பவம்' செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள், ``கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த அடிகுழாய் மூலம் குடிநீர் எடுத்து வந்தோம். பயன்பாட்டில்தான் இருந்தது. இந்த நிலையில், சிறிய கோளாறு காரணமாக, சில மாதங்களாக அந்த அடிகுழாய் இயங்கவில்லை. இதனால், எங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. அதனால், அந்த அடிகுழாயை சரிசெய்ய சொல்லி கோரிக்கை வைத்தோம். ஆனால், சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இந்த நிலையில்தான், அந்த அடிபம்பை சுற்றி கான்கிரீட் போட்டு, அடிகுழாயை பயன்படுத்தமுடியாத சூழலை ஏற்படுத்திவிட்டனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, ``வேறு ஒரு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்” என கூறினார். ஆனால், அதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், அடிகுழாயை அகற்றாமல் அலட்சியமாக கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க நாமக்கல்: அடிகுழாயை அகற்றாமல் கான்கிரீட்... தொடரும் கான்ட்ராக்டர்களின் அலட்சியம்!