மத்திய பிரதேசத்தில் மருத்துவ கல்வித்துறையில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் கேஷ்வானி. தற்போது மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கும் கேஷ்வானி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவரின் இல்லத்தில் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டில் கேஷ்வானி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு வரை நடந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இறுதியில் எண்ணி முடிக்கப்பட்ட போது 85 லட்சம் இருந்தது. இது தவிர கேஷ்வானி வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கேஷ்வானி தனது வீட்டை மிகவும் ஆடம்பர பொருட்களை கொண்டு அலங்கரித்திருந்தார். அவற்றின் மதிப்பு மட்டும் ரூ.1.5 கோடியாகும்.
வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். அசையா சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி பெயரில் கேஷ்வானி வாங்கி இருந்தார். கேஷ்வானியின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. ரெய்டுக்காக போலீஸார் கேஷ்வானி வீட்டிற்கு சென்ற போது வீட்டில் இருந்த துப்புரவு செய்யும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதோடு ரெய்டு நடத்தவிடாமல் அதிகாரிகளை பிடித்து தள்ளினார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கேஷ்வானி வேலையில் சேரும் போது மாதம் ரூ.4 ஆயிரம் மட்டும் சம்பளம் வாங்கினார். இப்போது 50 ஆயிரம் வாங்கும் கேஷ்வானியால் எப்படி ரூ.4 கோடிக்கு சம்பாதிக்க முடிந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பணத்தை வேறு எதாவது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க மத்தியபிரதேச அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு... வீடு முழுக்க கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!